Latest News

May 19, 2014

வெள்ளைக்கொடி விவகாரத்தின் சாட்சியங்களில் நானும் ஒருவன் : அமைச்சர் சத்தியலிங்கம் உருக்கம்!
by admin - 0

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து நேற்று (18.05.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு) வவுனியா சிந்தாமணி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டு அஞ்சலியுரையாற்றும் போதே, வடமாகாண சுகாதார சுதேசிய வைத்தியதுறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது அஞ்சலியுரையில்,

இன்று காலை மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றி விழாக்கொண்டாட்டத்தினை தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நேரலையாக பார்க்க முடிந்தது.


அதில் எம்மையெல்லாம் எரிச்சலும், சினமும் அடைய வைக்கின்ற கொச்சைத்தமிழில் மகிந்த ராஜபக்ஸ, யுத்தத்தில் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் கூறினார். சொல்வதெல்லாம் பச்சை பொய்யும் புரட்டும். அப்படியென்றால் முள்ளிவாய்க்காலில் செத்தவர்களெல்லாம் என்ன சிங்கள மக்களா? என்றும் அமைச்சர் கடும் கோபத்தொனியில் கேள்வி எழுப்பினார்.


இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலையில், அவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனைகளைக்கூட செய்ய முடியாத நிலையில் எம்மை இந்த அரசு அடக்கி வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான எமது உறவுகள் தமது பிள்ளைகளை காணவில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரிகிறார்கள். முன்னாள் போராளிகள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று எனவும் அமைச்சர் சாட்டையை சொடுக்கினார்.

இறுதி யுத்தத்தின் போது அன்றைக்கு ஐ.நாவுக்கான வதிவிட பிரதிநிதியாக இருந்த பாலித ஹோகன்னவுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலகத்தைச்சேர்ந்த புலித்தேவனுக்கும் இடையில் யுத்த இறுதி கால கட்டங்களில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.



(அக்காலப்பகுதியில் வவுனியா மாவட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிப்பாளராக ப.சத்தியலிங்கம் இருந்ததோடு, உணவு மற்றும் மருந்து மீட்புக்குழு கப்பல்களை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையோடு யுத்த வலயத்துக்குள் (மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்குள்) அகப்பட்டிருந்த மக்களுக்கு அனுப்புவது, “வணங்காமண்” கப்பல் நிவாரண பொருட்களை வவுனியா முட்கம்பி வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை ஆற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அந்த மின்னஞ்சல்களை படிக்கும் போது, இந்த நயவஞ்சக அரசு எமது போராளிகளை எப்படியெல்லாம் நம்ப வைத்து தமது சதி வலைக்குள் சிக்க வைத்து கழுத்தறுத்தது என்ற உண்மைகள் வெளிப்படையாகவே  தெரிந்தன என்றும் அமைச்சர் கண்கள் பனிக்க கூறினார்.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை. அதற்காக இறை நிந்தனை செய்பவன் என்றும் அல்ல. இறை சக்தி என்று ஒன்று, இந்த உலகத்தில் இருப்பது உண்மையென்றால், இந்த படுகொலைகளுக்கான, அநீதிக்கான தண்டனையை நாம் கொடுக்கத்தேவையில்லை. இறைவனே கொடுப்பார் என்றும் அமைச்சர் ஆதங்கப்பட்டார்.
« PREV
NEXT »