Latest News

May 04, 2014

சென்னை குண்டுவெடிப்பு - போலி முகவரியில் டிக்கெட் எடுத்து பயணித்த 2 பேர் யார்?
by admin - 0

சென்னை குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வியாழனன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு குண்டுகள் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்வாதி என்ற இளம்பெண் பலியானார். மேலும், 14 பயணிகள் படுகாயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா, ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோரது மேற்பார்வையில், 12 தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் துப்பு துலக்குவதற்காக போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையிலான போலீசார் பெங்களூரில் முகாமிட்டு கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சென்னை மற்றும் பெங்களூர் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர் ஒருவரின் மீது போலீசாரின் சந்தேகம் வலுத்தது. அந்நபர் சென்னையில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்த 9-ம் நம்பர் நடைமேடையில் ஓடிச்செல்லும் காட்சிகள் சந்தேகத்தை வலுவாக்கின. நேற்று முன்தினம் இரவு அவரது வீடியோ காட்சிகளை சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் வெளியிட்டார். 


கேமராவில் சிக்கியுள்ள மர்ம நபரை பற்றி தெரிந்தவர்கள் 044-22502510, 044-22502500 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதிரடி திருப்பமாக தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுகள் வெடித்த பெட்டிகளான எஸ்-4 மற்றும் எஸ்-5ல் அந்த நபர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முறையே எஸ்-ல் இருக்கை எண்.70, எஸ்-5-ல் இருக்கை எண்.28லும் தட்கல் முறையில் டிக்கெட் பதிவு செய்துள்ளனர் அவர்கள். பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29-ந்தேதி அன்று, காலை 10.07 மணிக்கு தட்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.



70-ம் எண் இருக்கை அகமது உசேன் என்பவரின் பெயரிலும், 28-ம் எண் இருக்கை ஜான்சன் என்பவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகமது உசேன் என்ற பெயரில் மேற்கு வங்காள மாநிலம் மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் கவுகாத்தி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களை கொடுத்து தட்கல் டிக்கெட்டை எடுத்துள்ளனர்.

மேலும், முன்பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இருவரின் முகவரியும் போலியானவை எனத் தெரிய வந்துள்ளதையடுத்து அவர்கள் இருவருக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அகமது உசேன், ஜான்சன் ஆகிய 2 பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்த இருவரும் பெங்களூரில் ரயிலில் ஏறி குண்டுகளை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் பயணிகளோடு அமர்ந்து அவர்கள் பயணம் செய்திருக்கலாம் என யூகிக்கப் படுகிறது.

தீவிரவாதிகள் இருவரும் பல மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வந்து குண்டு வெடிப்பு சதிதிட்டத்தை தீட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 2 பேரில் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் 2 பேரும் பெங்களூரில் இருந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட பின்னர், எங்கு இறங்கினார்கள் என்பது குறித்த தெளிவான தகவல்களில்லை.

அதேபோல், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர் தற்போது சந்தேகிக்கப் படும் நபர்களில் ஒருவனா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றானர்.

சென்னை வரும் வழியில் இடைப்பட்ட கண்காணிப்பு கேமரா இல்லாத ரயில் நிலையங்கள் சிலவற்றில் கூட அவர்கள் இறங்கி இருக்கலாம் என கருதப் படுகிறது. எனவே, இந்த 2 பேரும் யார்? என்பது பற்றி துப்பு துலக்குவதற்காக காயம் அடைந்த பயணிகளிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மற்ற பயணிகளின் உதவியோடு தீவிரவாதிகளின் கம்யூட்டர் உருவபடத்தை தயாரித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது




« PREV
NEXT »