சென்னை: சென்னையில் ஊடுருவிய, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளியை, தமிழக, 'க்யூ' பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, சுற்றி வளைத்தனர். இவன், இலங்கையை சேர்ந்தவன்.அவன் சேகரித்து அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகத்தை, குண்டு வைத்து தகர்க்கும், ஐ.எஸ்.ஐ.,யின் நாசவேலை திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
'லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும்' என, மத்திய உளவுப்பிரிவு போலீசார், தமிழக உளவுப்பிரிவு, தீவிரவாதிகளை கண்காணிக்கும், 'க்யூ' பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில், சென்னை, திருவல்லிக் கேணி, மண்ணடி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளை, க்யூ பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.மண்ணடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த வாலிபன் மீது, க்யூ பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க துவங்கினர்.அவன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் உளவாளி; சென்னையில் பதுங்கி, சதிச்செயலுக்கு உளவு பார்க்கிறான் என, தெரிய வந்ததும், நேற்று முன் தினம் இரவு, அவனை சுற்றி வளைத்தனர்.
போலீசார் நெருங்கி விட்டதை அறிந்த அவன், ஆட்டோவில் தப்பினான். சேப்பாக்கம், சிவானந்தம் சாலையில் உள்ள தொலைக்காட்சி நிலையம் அருகே அந்த ஆட்டோ வந்த போது, அங்கு மாறுவேடத்தில் இருந்த போலீசார், அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அதன் விவரம் வருமாறு:அந்த வாலிபன், இலங்கையை சேர்ந்த முகமது ஜாகீர் உசேன், 37; பட்டதாரி. அவனது மனைவி பெயர் பாத்திமா ரியசா. இரண்டு குழந்தைகள் உள்ளன.இலங்கையில் உள்ள, பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரி, அமீர் சுபேர் சித்திக் என்பவரின் நட்பு, ஜாகீர் உசேனுக்கு கிடைத்தது. ஜாகீர் உசேனை, பாகிஸ்தான் உளவாளி யாக மாற்ற, சித்திக் முடிவு செய்தார். அதற்கு, ஜாகீர் உசேனும் சம்மதம் தெரிவித்தான். இதையடுத்து, ஜாகீர் உசேன், தூதரக உயர் அதிகாரி பாஸ் என்ற ஷாவிடம் அழைத்து செல்லப்பட்டான். ஷா மற்றும் சித்திக் ஆகியோரும், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினரும், ஜாகீர் உசேனுக்கு, இரண்டு ஆண்டுகளாக, உளவு தகவல் சேகரிப்பது தொடர்பாக கடும் பயிற்சி அளித்தனர்.
சங்கேத மொழி :
அவனுக்கு சென்னை, பெங்களூரு, கொச்சிவிசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்திய நகரங்களின் வரைபடங்கள் அளிக்கப்பட்டன. மேலும், அந்த நகரங்களில், குண்டு வைத்து தகர்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் சொல்லி தரப்பட்டது.மேலும், சேகரித்த தகவல்களை, செயற்கைக் கோள் போன் மற்றும் 'இ-மெயில்' மூலம் சங்கேத மொழியில் அனுப்புவது குறித்து கற்றுத் தரப்பட்டது. தொடர் பயிற்சி காரணமாக, ஜாகீர் உசேன் அவற்றில் நிபுணத்துவம் பெற்றான்.அவனுக்கு, சென்னை யில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்ப்பது தொடர்பான பணி தரப்பட்டது.
அதற்காக அவனுக்கு, முதல் கட்டமாக, இலங்கை கரன்சி மதிப்பில், 20 ஆயிரம் ரூபாய்தரப்பட்டது. தகர்ப்பு பணியை வெற்றிகரமாக முடித்தால், ஒரு கோடி ரூபாய் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன், சென்னை வந்த ஜாகீர் உசேன், மண்ணடியில் தங்கினான். மருந்து மற்றும் துணி வியாபாரம் செய்வது போல் போக்கு காட்டி, அமெரிக்க துணை தூதரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு; அங்குள்ள நுழைவு வாயில்கள்; விமான நிலையத்தில் இருந்து, தூதரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளது; கடல் வழியாக சென்னைக்குள் ஊடுருவும் விதம் குறித்த தகவல்களை சேகரித்து, புகைப்படங்களுடன், இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளான்.
நாசவேலை முறியடிப்பு :
அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, கடல் மற்றும் வான்வழி மார்க்கமாக, பயங்கரவாதிகளை அனுப்ப, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்பு தயாரானது.இந்த சூழ்நிலையில் தான், ஜாகீர் உசேனை, க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதனால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் உளவாளி தந்த அதிர்ச்சி தகவல்:
''பலி எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் தருவதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனர்,'' என, சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி, ஜாகீர் உசேன், வாக்குமூலம் அளித்துள்ளான்.அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சென்னை, பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டனம் உள்ளிட்டநகரங்களிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.அதற்காக, உளவாளிகளாக, நான் உட்பட பலர், இந்தியாவிற்குள் ஊடுருவினோம். நான் சென்னையில் தங்கி, அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். மற்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டனர்.திட்டப்படி தாக்குதல் நடத்த, சில வாரங்கள் மட்டுமே இருந்ததால், சென்னையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தங்க வைக்க வாடகை வீடு பார்த்து வந்தேன்.மேலும், இவ்வளவு பெரியவேலையை, உள்ளூரில் இருப்பவர்களின் உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதால், சில உள்ளூர் வாலிபர்களை மூளைச் சலவை செய்து தயார்படுத்தினேன்.அவர்களை பற்றியும், சென்னையில் எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்களின் விவரங்களை, இலங்கையில் உள்ள பாக்., தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளேன். நாசவேலை வெற்றிகரமாக நடந்து, அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டால், பலி எண்ணிக்கைக்கு ஏற்ப, பேசிய தொகையை விட, அதிகளவில் பணம் தருவதாகவும், இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி அளித்து இருந்தனர்.இவ்வாறு, அவன் தெரிவித்துள்ளான்.
எந்த பிரிவில் வழக்கு பதிவு?
நாசவேலைக்கு உளவு பார்த்த ஜாகீர் உசேன் மீது, பயங்கரவாத தடைச்சட்டத்தின், 120 பி(கூட்டு சதி), 480(அரசு ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்து இருத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜாகீர் உசேனிடமிருந்து, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; 500 ரூபாய் கள்ள நோட்டுகள், இரண்டு; நான்கு செயற்கைக்கோள் போன்கள்; 'லேப்-டாப்' ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஜாகீர் உசேன், சில ஆண்டுகளுக்கு முன், திருச்சி விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பிடிபட்டு தப்பியுள்ளான். தற்போது அவன் வைத்து இருந்தது இலங்கையில் அளிக்கப்பட்ட ஒரிஜினல் பாஸ்போர்ட்.
Social Buttons