Latest News

May 04, 2014

அண்ணா இதையெல்லம் பேப்பரில் போட்டுவிடாதேங்கோ - படையினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட குமுதாவின் பரிதாக் கதை இதோ
by admin - 0

“எல்லாத்தையும் போட்டிடா தேங்கோ அண்ணா! நான் தற்கொலைதான் செய்ய வேணும்” என்று கை யெடுத்துக் கும்பிடும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து ஆறாகப் பெருக் கெடுக்கிறது கண்ணீர்.


யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தாள் அவள். வன்னியின் சிறு கிராமம் ஒன்றைச் சேர்ந்தவள். பெண்கள் காப்பகம் ஒன்றே சில மாதங்களாக அவளைப் பராமரித்து வருகிறது. இப்போது அவள் நிறை மாதக் கர்ப்பிணி. ஆனால் அந்தக் குழந்தை தனக்கு வேண்டாம் என்று அடியோடு மறுத்து அழுது அடம்பிடிக்கிறாள்.

இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். கடைசித் தடவை அவளது முயற்சி தோற்றுப்போக, அவளைக் காப்பாற்றிய மருத்துவர் பரிவோடு அணுகியதில் அவளது தற்கொலை முயற்சிக்கான காரணம் வெளிவந்தது. யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்குச் சென்றால் ஆபத்தில்லாமல் – அதே நேரத்தில் சுற்றம் சொந்தம் அறியாமலும் – குழந்தையைப் பெற்று அதனை அரச பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்ற ஆலோசனையை அவர்தான் அவளுக்கு வழங்கினார்.

அவள் வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்கு இனிமேலும் முயன்றால் அது இருவர் உயிருக்கும் ஆபத்து என்பதனால் இந்த மருத்துவர் அவளுக்கு இந்த ஆலோசனையை வழங்கினார்.

அவளின் கதை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில்தான் நான் அந்த இளம் பெண்ணைச் சந்தித்தேன். பத்திரிகை யாளன் என்றதும் முதலில் என்னிடம் பேசப் பயந்தாள். பல நிமிட தைரியப் படுத்தல்களின் பின்னர், தனது கதையைப் பகிர்ந்துகொள்ளத் தயாரானாள்.

இடையிடையே “இதையயல்லாமுமா அண்ணா பேப்பரில் போடுவீர்கள்?” என்று பரிதாபமாகக் கேட்டாள். “இல்லை, நீ விரும்பாத எதையும் நான் பிரசுரிக்க மாட்டேன்” என்று அவளுக்கு அடிக்கடி உறுதிமொழி கொடுக்க வேண்டியி ருந்தது.
இனி அவள் சொன்ன கதையைக் கேளுங்கள்…

அவள் பெயர் குமுதா (இன்னமும் இலங்கையில் இருக்கும் அவளது பெற்றோரின் பாதுகாப்புக் கருதிப் பெயர் மாற்றப் பட்டுள்ளது). 24 வயதுப் பெண். விடு தலைப் புலிகள் இயக்கத்தில் அவளது மாமா உயர் பொறுப்பில் இருந்தார். அதனால் அவளது குடும்பம் எப்போதுமே புலிகளுக்கு மிக நெருக்கமாகவே இருந்தது. அவர்களின் நடமாட்டம் வீட்டில் இல்லாத நாள் இல்லை என்று சொல்லலாம். போர் ஓய்ந்தபோது அவளது மாமா இறந்து போயிருந்தார். அவளது குடும்பம் மற்றைய எல்லாக் குடும்பங்களையும் போலவே, உயிரைக் கையில் பிடித்தபடி ஒருவாறு தப்பிப் பிழைத்து வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி தடுப்பு வேலிகளுக்குப் பின்னால் வந்து சேர்ந் தது.

அங்கு துன்பங்களுக்குள் உழன்று கிடந்த ஒரு நாளில் அவளது கிராமத்தவர்களுக்கு விடிவு கிடைத்தது. அவளும் பெற்றோரும் வன்னியில் உள்ள தங்கள் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தனர்.

“எங்கட சனங்களுக்குப் பொறாமை. மாமா இருக்கேக்க எங்கட வீட்டுக்கு இயக்கத்தில இருந்து நிறைய ஆக்கள் வாறவை. நிறைய வாகனங்கள் வரும். இயக்கம் ஆக்கள் பிடிக்கேக்கையும் கூட நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்றதால விட்டிட்டினம். ஆனால் மாமாதான் என்னைப் பிடிக்க விடாமல் தடுத்து வைச் சிருந்தவர் என்று சனங்கள் நினைச்சவை. அந்தப் பொறாமையில நான் இயக்கத்தில இருந்தனான் எண்டும் புனர்வாழ்வுக்குப் போகேல்லை எண்டும் ஆமிக்காரரிட்டைச் சொல்லிக் குடுத்துப் போட்டினம்.”

அதன் பிறகு குமுதாவின் வீட்டுக்கு அடிக்கடி இராணுவம் வந்துபோக ஆரம்பித்தது. விசாரணை விசாரணை என்று முகாமுக்கு அழைத்துப் போனார் கள் அவளை. அனேகமான நாள்கள், காலையில் போனால் மாலையில்தான் அவளால் வீட்டுக்குத் திரும்ப முடிந்திருக் கிறது.
இந்தத் தொல்லை தாங்க முடியாததால், வவுனியாவில் சென்று தங்க ஆரம்பித் தாள் குமுதா. அப்போதும் இராணுவத் தினர் அடிக்கடி அவளது வீட்டுக்குப் போய் அவள் எங்கே என்று விசாரித்தனர்.

“வவுனியாவில் வேலை செய்கிறாள்” என்று பதில் கூறி சமாளித்து வந்தனர் பெற்றோர். கிராமத்துக்கு வரும்போது அவரை விசாரணைக்காக முகாமுக்கு அழைத்து வரவேண்டும் என்று அறிவுறுத்திவிட்டுப் புறப்படுவர் வந்த இராணு வத்தினர்.

“நான் பஸ்ஸால இறங்கி வீட்டுக்குப்போன ரெண்டு நிமிசத்தில வீட்டுப் படலையிக்க ஆமிக்காரர் சைக்கிளில வந்து நிப்பினம். கொமாண்டர் விசாரணைக்கு வரட்டாம் எண்டு கூப்பிடுவினம்.”

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட ஒரு நாளில்தான் அந்தக் கொடூரம் நடந்தது.

“நான் போனபோது முகாமுக்குள்ள வேற மூன்று பொம்பிளைப் பிள்ளையளும் இருந்தவை. ஆனால் பிறகு நான் கண்முழிச்சுப் பார்த்தபோது அவையள் அங்க இல்ல. இருண்டு போயிருந்தது…”

தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார். அவரிடம் இருந்து அன்று நடந்தவற்றை விடுத்து விடுத்துக் கேட்கும் தைரியமோ, குறுக்குவிசாரணை செய்யும் புத்தியோ என்னிடம் இல்லாததால் அவள் அழுது முடிந்து நிமிரும் மட்டும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே என்னால் முடிந்தது.

“இரண்டு தடவை தற்கொலை செய்யப் போனனான். காப்பாத்திப் போட்டினம். எனக்கு இந்தப் பிள்ளை வேண்டாம். என்ரை அப்பா, அம்மாவுக்கு இன்னும் இதைப் பற்றி ஒண்டும் தெரியாது. தெரிஞ்சா அதுகள் தற்கொலை செய்து போடுங்கள். அதுதான் இங்க டொக்டரிட்டைக் கேட்டு தலைமறைவா இருக்கிறன்….”

அவளால் இயன்ற மட்டும் அவள் கூனிக்குறுகிக் கதறுகிறாள்.

பெற்றோரின் சோகம்

குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலையில் அவள் சேர்க்கப் பட்டிருந்த போதுதான் அவளை நான் முதன் முதலில் சந்தித்தேன்.

இரண்டாவது தடவை சந்தித்தபோது அவள் குழந்தையைப் பெற்றிருந்தாள். ஆனால் அதன் மீது பற்றோ பாசமோ இன்றி இருந்தாள். அதனைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்ற ஆவேசத்தில் இருந்தாள். கூடவே அவளது பெற்றோரும் வைத்தியசாலைக்கு வந்திருந்தார்கள்.

விடயம் பெற்றோருக்குத் தெரிய வந்தமை எனக்கு ஆச்சரிய மூட்டியது. அவர்களிடம் இருந்து இந்த விடயத்தை மறைக்க அவள் எவ்வளவு முயன்றாள், அதற்காக எவ்வளவு துன்பங்களை அவள் தாங்கினாள் என்பதை நான் அறிவேன். இப்போது அவள் பட்ட துன்பம் எல்லாம் வீணாகி அவளது பெற்றோர் அவளுடன் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தது.

எனது ஆச்சரியம் விலகாமலேயே நான் அவளின் பெற்றோரிடம் பேசினேன். திடீரென்று வீட்டுக்கு வந்த இராணுவத்தினர்தான் இந்த விடயத்தையும் போட் டுடைத்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

“பிள்ளை ஆஸ்பத்திரியில இருக்கிறது தெரியாதோ எண்டு மிரட்டிச்சினம். எங்களுக்கு என்ன தெரியும்? தெரிஞ்சிருந்தாலும் உயிரோட இருந்திருக்க மாட்டம். இப்பவும் ஊருக்க தலை காட்ட ஏலுமே! எல்லோருமாச் சேர்ந்து சாகிறது தான் ஒரே வழி.” இயலாமையின் பெரு வெடிப்பாக தந்தையின் குரல் உடைந்து ஒலிக்கிறது. வார்த்தைகள் வெளிவராமல் வாயைப் பொத்திக் கேவியபடியே அமர்ந்திருக்கிறார் தாயார்.

பொலிஸாரின் கடமை உணர்வு

இடையில் என்ன நடந்தது? இதுதான் என்னைக் குடைந்த கேள்வி.

பதில்: போதனா வைத்தியசாலையில் பிறக்கும் ஒரு குழந்தையை தாயார் வேண்டாம் என்று கூறி அரச பாதுகாப்பில் ஒப்படைப்பதென்றால், அது நீதிமன்றத்தின் ஊடாகவே நடக்க முடியும். குமுதாவின் பிரச்சினை நீதிமன்றத்தின் கவனத்துக்குப் போன உடனேயே, இது பற்றி விசாரணை செய்யுமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனர் என்பதாலோ என்னவோ பொலிஸாரும் இந்தப் பிரச்சினையில் கடும் ஆர்வம் காட்டியுள்ளனர். குமுதா சேர்க்கப்பட் டிருந்த பெண்கள் விடுதிக்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குழு வாக வந்து விசாரணை என்ற பெயரில் நீண்ட நேரம் அவளைச் சுற்றி வளைத்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

தொடர்ந்து இரண்டு நாள்கள் இந்த மன உளைச்சல் தரும் நடவடிக்கை தொடர்ந் தது. அதற்கிடையில் பொலிஸாரால் இது குறித்து குமுதாவின் கிராமத்தில் இருந்த இராணுவத்தினருக்கும் தகவல் தரப்பட் டது. அவர்கள் அவளது வீடுக்கு ஓடினர். இராணுவம்தான் சம்பந்தப்பட்டது என்றால் தங்களிடம் சொல்லாமல் ஏன் பொலிஸிடம் போனீர்கள் என்று பெற்றோ ரைக் கேள்விகளால் துளைத்தனர்.

அடியும் தெரியாது நுனியும் தெரியாது திகைத்த குமுதாவின் பெற்றோருக்கு பிரச்சினை புரிய நீண்ட நேரம் எடுத்தது. மகள் வைத்தியசாலையில் என்றதும், அவளுக்கு என்னவோ ஏதோ என்று பதறியடித்தபடி ஓடி வந்தவர்களுக்குத் தலையில் இடி இறங்கியது. ஆனால், அதற்கிடையில் சூழ்நிலையைக் குமுதா வென்றிருந்தாள்.

ஆம்! இந்தப் பிரச்சினையைத் தான் தொடர விரும்பவில்லை என்றும் இந்தப் பிரச்சினையில் தொடர்புபட்டதாக தான் கூறியிருக்கும் இராணுவத்தினர் மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொண்டு எடுக்கத் தான் விரும்பவில்லை என்றும் இந்த வழக்கைத் தொடர்வதற்குத் தான் விரும்பவில்லை என்றும் அவள் பொலிஸாரிடம் எழுதிக் கொடுத்தாள்.

இரண்டு நாளாக பொது விடுதியில் அவளை உளரீதியாக நெருக்கித் தள்ளி வந்த பொலிஸார், தங்கள் கடமை வெற்றிகரமாக முடிந்தது என்ற மகிழ்வோடு அங்கிருந்து வெளியேறினர்.

“பிள்ளையை என்னை வளர்க்கச் சொல்லியும் அதுக்குத் தாங்கள் தேவையான உதவி எல்லாம் செய்யிறம் எண்டும் என்னைக் கேட்டவை….” குனிந்திருக்கும் முகத்திலிருந்து சொட்டுச் சொட்டாக மீண்டும் நிலத்தை நனைக்கிறது அவளது கண்ணீர்.

அதன் பிறகு குமுதா என்ன ஆனாள், அவளது பெற்றோர் என்ன ஆனார்கள் என்று அறியமுடியவில்லை. பொலிஸாருக்கு எழுதிக் கொடுத்த சில நாள்களில், தான் பெற்ற அந்த வேண்டாக் குழந்தையை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, வைத்தியசாலையை விட்டு அவள் வெளியேறி இருக்கிறாள் என்பதற்கான பதிவு மட்டுமே அங்கிருக்கிறது.

மீண்டும் ஒரு தடவை அவளையோ அவளது பெற்றோரையோ என்னால் சந்திக்க முடியவில்லை.

குமுதாவின் சோகம் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்து நடந்தது. 2011ஆம் ஆண்டு பிற்பகுதியில் அவள் நாளாந்தம் கண்ணீர்விடத் தொடங்கி னாள். 2012ஆம் ஆண்டின் நடுப்பாகத் தில் அவள் போதனா வைத்தியசாலையில் இருந்து அழுதழுதே வெளியேறி னாள். அதன் பின்னர் என்ன ஆனாள்?

இப்போது, போரின் போதும் அதன் பின்னரும் பாலியல் வன்புணர்வை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் வெளி யிட் டுள்ள இந்த அறிக்கையில் பட்டிய லிடப்பட்டுள்ள 21 நாடுகளில் இலங்கையும் ஒன்று.

சமீபத்திய முரண்பாடுகளின்போதும் அதன் பின்னரும் பாலியல் வன்புணர்வை ஆயுதமாகப் பயன்படுத்திய அரச இராணுவங்கள் உள்ளிட்ட 34 குழுக்களைத் தாம் அடையாளம் கண்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது.

ஒருவேளை குமுதாவையும் ஐ.நா. செயலரின் குழு கண்டறிந்திருக்குமா? அவளிடமும் வாக்குமூலம் பெற்றிருக்குமா? அவள் எங்கிருக்கிறாள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமா?

குமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் பதிலைத் தேடவேண்டியிருக்கிறது.

வழக்கம்போல ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை, பாலியல் குற்றங்களில் சொற்பளவிலான படையினர் மட்டுமே ஈடுபட்டனர் என்று தெரிவித்திருக்கிறது.

வடக்கில் போரின் போது 5 சம்பவங்களில் 7 படையினரும் போருக்கும் பின்னர் 6 சம்பவங்களில் 10 படையினரும் மாத்திரமே பாலியல் வல்லுவறவுக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த 2 வருடங்களில் மட்டும் படையினரால் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளான வன்புணர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் உட்பட 30க்கும் அதிகமானவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ ரீதியில் கையாளப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்பகமாக அறிகிறேன். அவர்களில் மூவரை நான் நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன் குமுதா உட்பட.

ஒருவேளை குமுதாவைப் போன்றவர்களைக் கண்டுபிடித்து, உரிய பாதுகாப்பும் கொடுத்தால் மேலும் உண்மைகள் பல வெளிவரக்கூடும்.

நன்றி: சூரியகாந்தி 27.04.2014
« PREV
NEXT »