Latest News

May 23, 2014

மஹிந்தவுக்கு என்று விசேட அழைப்பு விடுக்கவில்லை : பா.ஜ.க
by admin - 0

 நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் அழைக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
ஜெயலலிதாவின்  கண்டனஅறிக்கையில்-
 
 "இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசின் இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.
 
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். 
 
ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது.
 
மஹிந்த ராஜபக்ஷ புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. 
 
இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். 
 
தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பாஜக பதில்-

சார்க் நாடுகளின் மற்ற தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதைப் போலத்தான் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது, அவரை மட்டும் தனியாக அழைக்கவில்லை என தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மருத்துவர் கையில் இருப்பதும் கத்திதான், கொலைகாரன் கையில் இருப்பதும் கத்திதான். காங்கிரஸ் விடுக்கும் அழைப்பு, கொலைகாரன் கையில் இருக்கும் கத்தியைப் போன்றது என்றும் பா.ஜ.கவின் அழைப்பு மருத்துவர் கையில் இருக்கும் கத்தியைப் போன்றது'' என்றும் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ்கட்சியின் நிலைப்பாடு- 
 
பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்புத் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன், ''இலங்கை நம்முடைய அண்டைநாடு. அந்த நாட்டோடு நட்புணர்வுடன் இருப்பதுதான் ராஜதந்திரம்'' என்று தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் ஆட்சியின்போது ராஜபக்ஷ விமானத்தில் பறந்தால் கீழே கருப்புக்கொடி காட்டுவோம் என்று அறிவித்த, வைகோ, இப்போது வேண்டி விரும்பி, தலைவணங்கிக் கேட்பதாகவும் ராமதாஸ் கருத்துத் தெரிவிக்காமல் வாய்தா வாங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
திமுக எதிர்ப்பு நிலை- 
 
''இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டுவரும் நிலையில், புதிதாகப் பதவியேற்றிருக்கும் பிரதமர், தான் தமிழர்களுக்கும் பிரதமர் என்பதை மனதில்கொண்டு, இலங்கை அதிபரை அழைக்காமல் இருந்திருக்க வேண்டும்'' என தி.மு.க. தெரிவித்துள்ளது.
 
புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பது என்பது புதிய வழக்கமாக இருப்பதாகவும் தமிழர்களின் நலனுக்காகத்தான் இலங்கை அதிபர் அழைக்கப்பட்டிருக்கிறார் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
பா.ஜ.க., தமிழகத்தில் வேரூன்றி வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் தமிழினத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் காரியங்களை மோடி அரசு தவிர்க்க வேண்டும் என காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி அமைவதில் முக்கியப் பங்கு வகித்த தமிழருவி மணியன், இந்த விவகாரம் தொடர்பாக  விடுத்துள்ள அறிக்கையில், நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு வழங்கும் போர்வையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காங்கிரஸின் பழைய அடிச்சுவட்டிலேயே தடம் மாறாமல் சுவடு பதித்து மோடி அரசும் நடக்கும் என்ற மோடியின் எதிர்ப்பாளர்களின் கூற்றுக்கு வலிமை சேர்க்கும் காரியத்தில் பா.ஜ.க., ஈடுபட்டிருப்பது வேதனையைத் தருகிறது.
 
2016 சட்டமன்றத் தேர்தலை நோக்கி எழுச்சியுடன் பயணிப்பதற்கு எதிராக முதல் தடைக்கல்லை ராஜபக்ஷவிற்கு அளித்த அழைப்பின் மூலம் மத்திய பா.ஜ.க., உருவாக்கியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு-
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவன் , மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கண்டித்துள்ளார்.
 
அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள நரேந்திர மோடி அவர்கள் முற்பட்டிருப்பது பொதுவாக வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இலங்கைக்கு அது பொருந்துமா என்பதுதான் கேள்வி என்று அவர் கூறியிருக்கிறார்.
 
"பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் தற்போது சர்வதேச சமூகத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்
 
அவர் இழைத்த போர்க்குற்றங்களை இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், அவரை தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திரு.நரேந்திர மோடி அவர்கள் அழைத்திருப்பது இந்தியாவிலிருக்கும் தமிழர்களின் உணர்வைப் புண்படுத்துவது மட்டுமின்றி நீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கும் பின்னடைவை உண்டாக்கும்" என்று திருமாவளவன் கூறினார். 

« PREV
NEXT »