Latest News

May 17, 2014

வடபகுதியில் ஆலய வருடாந்த உற்சவங்களை கூட நடாத்த படையினர் தடை விதிப்பு!
by admin - 0

மே- 18ம் திகதி முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ்., கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆலயங்களில் வருடாந்த உற்சவங்களை நடாத்துவதற்கும், பொது இடங்களில் கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும் படையினரால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நாளைய தினம் வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் உள்ளிட்ட தரப்புக்கள் மேற்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடாத்த படையினர் தடைவிதித்துள்ளனர்.
நேற்றைய தினம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்திற்குச் சென்ற படையினர் உற்சவத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியதுடன், இன்றும், நாளையும் பூஜை வழிபாடுகள் எவையும் நடைபெறக் கூடாது என கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 10 தினங்கள் நடைபெறும், நேற்றைய தினம் மகோற்சவத்தின் 3ம் நாள் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த போதே படையினர் அங்கே சென்று திருவிழா நடைபெறக் கூடாதென கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் மக்கள் விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மக்களிடம் விடயத்தை நேரடியாக கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தமக்கு தெரியப்படுத்தியதாகவும். இதனையடுத்து அங்கே சென்ற போது படையினர் அச்சுறுத்தியமையினால் மக்கள் கடுமையான அச்சத்தில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் விடயம் தொடர்பாக யாழ்.பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது. சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது விடயத்தை ஆராய்ந்து கூறுவதாக கூறினார்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றிருக்கின்றது. அங்கிருந்தெல்லாம் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
எனவே இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமான அறிவிலித்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இதுவே வெசாக் தினத்தையும்,  கதிர்காம உற்சவத்தையும் மாற்றியமைக்க முடியுமா?  அதேபோன்றே ஒவ்வொரு மத ஆலயங்களும் பூஜை வழிபாடுகளை சம்பிரதாயங்களின் பிரகாரமே செய்கின்றன.
அதனை யாழ்;.படைத்தளபதி புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் அதற்கான வேண்டுகோளை நாங்கள் விடுத்திருக்கின்றோம்.
மக்களை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாதென அவர் கூறியிருக்கின்றார். 
« PREV
NEXT »