மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8ம்தேதி திடீரென மாயமானது. இதுவரை விமானம் என்ன ஆனது, அதிலிருந்த பயணிகளின் கதி என்ன என்பது குறித்த மர்மம் விலகவில்லை.
இதுகுறித்து கடந்த சனிக்கிழமை மலேசிய போக்குவரத்து அமைச்சர் லிஸ்முதீன் ஹூசைன் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பம் ஏற்படலாம் என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை ஓட்டிய கடற்பகுதியின் அடியில் இருந்து விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து வருவது போன்ற சிக்னல்கள் வெளியாவதை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சந்தேகித்திருந்தனர். எனவே அந்த பகுதியில் இன்று காலை முதல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதற்காக அமெரிக்க கடற்படையின் புளுஃபின்-21 என்ற நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டது. இது ஆளில்லாமல் ரோபார்ட்டிக் டெக்னாலஜியில் இயங்கும் கப்பல் என்பது சிறப்பு. 1741 கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் வேட்டைக்கு திட்டமிடப்பட்ட நிலையில் காலை முதல் மாலை வரை 49491 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நீர்மூழ்கி கப்பல் தேடுதல் நடத்தியது. ஏறத்தாழ திட்டமிடப்பட்ட பகுதியில் 3ல் இரண்டு பங்கு பகுதி சோதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மாயமான விமானம் பற்றியோ, அல்லது அதிலிருந்த கருப்பு பெட்டி பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. தேடுதல் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Social Buttons