Latest News

April 11, 2014

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பாதுகாப்பு
by admin - 0


சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பாதுகாப்பு மேற்கொள்வது குறித்த கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் இன்று சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு பதிவு வருகிற 24ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் என்று பல்வேறு கட்டங்கள் முடிந்து விட்டன. இப்போது தேர்தல் ஆணையம், தேர்தலை அமைதியாகவும், வாக்காளர்கள் அச்சப்படாமல் வந்து வாக்குசாவடியில் வாக்களிக்கவும் தேவையான அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில்தான், தமிழக டிஜிபி ராமானு ஜம் மாற்றப்பட்டு தேர்தல் நடத்துவதற்காக பொறுப்பு டிஜிபியாக அனூப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு திரிபாதி நியமிக்கப்பட்டார். தவிர சேலம், ஈரோடு, வேலூர் மாவட்ட கலெக்டர்கள், நாமக்கல் எஸ்பி ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் மற்றம் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம்ஜைதி உள்ளிட்ட 5 பேர் குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.   நேற்று இரவே தமிழக தேர்தல் அதிகாரிகளுடன், தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணை யர் சம்பத் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் தனித்தனியாக தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். 

இந்த ஆலோசனைகளுக்கு பிறகு, மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், மாவட்ட எஸ்பிக்கள், சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்கள் மற்றும் தேர்தல் டிஜிபி மற்றும் தேர்தல் பிரிவு போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதையடுத்து தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சுங்கரி வரி மற்றும் கலால் வரி துறை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசார் ஒரு லட்சம் பேருடன், துணை ராணுவ படையினர் எவ்வளவு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநிலம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ள 9 ஆயிரம் பதட்டமான வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணிகளை எவ்வாறு செய்யப்பட வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது என்றும் இந்த ஆலோசனையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகள், ரவுடிகள், தேர்தலை சீர்குலைக்கும் நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசியல் கட்சிகள், போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் முடிந்ததும், பத்திரிகையாளர்களை தேர்தல் அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து, தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார்கள்.

கூடுதல் வாக்கு இயந்திரங்கள்

தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் வாக்குப்பதிவு நடத்தி முடிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் பல தொகுதிகளில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதல் மின்னணு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. மத்திய தொகுப்பில் தேவையான அளவு மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தமிழகத்துக்கு கூடுதலாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்படும். இன்று  (12ம் தேதி) சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மற்றும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை அதிகாரிகளுடனும் தேர்தல் பணிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு கூட்டம் நடத்த இருக்கிறேன் என்றார்.
« PREV
NEXT »