Latest News

April 12, 2014

இலங்கைக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுக்கின்றமை குறித்து கனடா ஆலோசிக்க வேண்டும்
by admin - 0

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மிக மோசமான மனித உரிமைகள் மீறல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுக்கும் விசாரணையில் பங்குபற்றுவதற்கு இலங்கை அரசு மறுத்து வருகின்றமையானது கண்டிக்க தக்க விடயமாகும் என கனடாவின் முதல் விண்வெளி வீரரும், கனடா லிபரல் கட்சியின் வெளிவிவகார விடயங்களின் விமர்சகரான மார்க் கார்னியு தெரிவித்துள்ளார்.   குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   இலங்கையின் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைக்கு வலியுறுத்தும் தனியாட்களையும், அமைப்புக்களையும்  கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் பல தமிழ், கனேடிய அமைப்புக்கள் உட்பட யாவற்றையும்  பயங்கரவாத அமைப்புகளாகப் பிரகடனப்படுத்தி, அத்தரப்புக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் விதத்தில் தடை விதிக்கும் இலங்கை ஆட்சிப் பீடத்தின் போக்கைக் கண்டிக்கின்றோம்.   இலங்கையில் மனித உரிமைகள் மதித்துப் பேணப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு கனடாவில் இருந்து இயங்கும் இந்த அமைதியான அரசியல் இயக்கங்கள் மீதும் தனியாட்கள் மீதும் விதிக்கப்பட்ட தடையை இலங்கை ஆட்சிப்பீடம் விலக்காவிடில், இலங்கைக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுக்கின்றமை குறித்து கனடா ஆலோசிக்க வேண்டும்.   ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணையுடன் சம்பந்தப்படும் இலங்கைப் பொது அமைப்புக்கள் மீது, தனியாட்கள் மீது நாட்டுக்கு எதிராகச் சதி செய்யும் தரப்புகள் என்று குற்றம் சுமத்தப்படும் என்று மிரட்டி தரப்புக்களை இலக்கு வைக்கின்றது இலங்கை ஆட்சிப்பீடம்.    இது மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதும், அரசியல் எதிரிகள் மீதும்  ஏன் ஒட்டுமொத்தமாக சர்வதேச மனித உரிமைகள், முறைமைகள் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதல். உலகில் அமைதியை நிலைநாட்டி மனித உரிமைகளைப் பேணுவதற்காகப் போராடுவோருக்காக லிபரல் கட்சியும் கனடாவும் எப்போதும் அவர்களுடன் நிற்கும் என்றார். 
« PREV
NEXT »