வெளிநாடுகளில் தடைசெய்யப்படாத சிவில் அமைப்புகளை தடை செய்ததன் மூலம் இலங்கை சர்வதேச மட்டத்தில் மேலும் குழப்பமான பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2001 இலக்கம் 1373 என்ற பரிந்துரைக்கு அமைய இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தடை செய்துள்ளது.
இலங்கை சம்பந்தமான ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானமானது சர்வதேச சமூகத்தின் இலங்கை தொடர்பான விமர்சனங்களை அதிகரிக்க செய்யும் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சந்திரபால குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்திற்கு பின்னர் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் சர்வதேச சட்டத்திற்கு இசைவாக மனித உரிமைகளை மீறாது அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் அரசாங்கம் மீண்டும் நாட்டை அவசரகால சட்டத்தை கொண்டு வரும் நிலைமைக்கு இட்டுச் செல்ல தயாராகி வருகிறது என்றும் சந்திரபால குமாரகே குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளவற்றை தடைசெய்வதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி வளங்கள் மற்றும் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இயங்கும் பல புலம்பெயர் அமைப்புகள் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவை என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Social Buttons