Latest News

April 16, 2014

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (GTAJ)
by admin - 0

ஊடகவியலாளர் செல்வதீபன் அவர்கள், யாழ் வல்லைவெளியில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை, பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். செல்வதீபனை முதலில் மறித்து அவரோடு பேசிய அந்த இருவரும் அவர் செல்வதீபன் தானா என்பதனை உறுதிசெய்துள்ளார்கள். பின்னர் இரும்பு கம்பிகளால் அவரை பலமாக தாக்கியுள்ளார்கள். மண்டையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவர் எழுந்து அருகில் உள்ள பற்றை ஒன்றில் ஒளிந்துகொள்ள முயற்சித்துள்ளார். இருப்பினும் வரை மீண்டும் இழுத்துவந்து இன் நபர்கள் மண்டையில் இரும்பு கம்பிகளால் அடித்து கடும் காயங்களுக்கு ஆளாக்கியுள்ளார்கள். 

தாக்குதலில் காயமடைந்த ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன், மந்திகை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) அறிகிறது. பொல்லுகள் மற்றும் இரும்பு கம்பிகள் கொண்டு தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செல்வதீபன் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 29 வயதான ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தமிழ் பத்திரிகைகள் சிலவற்றின் யாழ். பிராந்திய செய்தியாளராக சேவையாற்றி வருகின்றார். இதேவேளை, வடபகுதியில் மீண்டும் முனைப்பு பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சித் தாக்குதல்களை யாழ். ஊடக மையம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதனை உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(GTAJ) பிரித்தானிய கிளையும் வன்மையாக கண்டிக்கிறது. குறித்த இத்தாக்குதல் இலங்கை அரச படைகளுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். மேலும் வட கிழக்கு பகுதிகளில் ஊடகவியலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று, சர்வதேச நாடுகள் இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் உலகத் தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) கோரிக்கை விடுத்துள்ளது. நடந்த இச்சம்பவத்தை ஆங்கிலத்தில் பதிவுசெய்து ஐ.நா மனித உரிமைச் சபை, பிற மனித உரிமை அமைப்புகள், மற்றும் பிற நாட்டு தூதுவர்களுக்கு நாம் அனுப்பியுள்ளோம், என்பதனையும், இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
« PREV
NEXT »