Latest News

April 17, 2014

மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணம் செய்த 287 பேரின் கதி என்ன?
by admin - 0

மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணம் செய்த 287 பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பான உருக்கமான தகவல்கள், நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளன.

கப்பல் விபத்து

தென்கொரியாவில் பிரசித்தி பெற்ற ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு, தலைநகர் சியோல் அருகில் உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து 475 பேருடன் சென்ற கப்பல், நடுக்கடலில் சற்றும் எதிர்பாராத விதத்தில் நேற்று முன்தினம் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்தக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பள்ளி விடுமுறையைக் கொண்டாட சென்ற 340 குழந்தைகளும், ஆசிரியர்களும் அடங்குவார்கள்.

287 பேரின் கதி என்ன?

தென்கொரியாவை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி இருக்கிற இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 164 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், கப்பல் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 9 ஆக உயர்ந்தது. மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இன்னும் 287 பேரைக்காணவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மீட்புப்பணி

சுமார் 100 கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்படை, கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் கடலுக்குள் குதித்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். கடுமையான சூறைக்காற்று, பேரலைகள், வானிலை மாற்றங்கள் அவ்வப்போது தடையை ஏற்படுத்தினாலும், தேடல் பணி தொடர்கிறது.
இருப்பினும், விபத்தில் சிக்கிய மாணவர்களின் பெற்றோர், மீட்புப்பணியில் அரசின் உதவி போதுமான அளவுக்கு இல்லை என்றும், மீட்புப்பணி நிலவரம் குறித்து தங்களுக்கு எந்தவொரு தகவலும் தருவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். சில பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து வாடகைக்கு ஒரு படகை அமர்த்திக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்று தங்கள் குழந்தைகள் பற்றி விசாரித்தது உருக்கமாக இருந்தது.

பெற்றோர் கதறல்

விபத்தில் சிக்கிய சியோல் புறநகர் அன்சானில் உள்ள டான்வோன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கதி என்ன என்று தெரியாமல் அழுது புலம்பி வருவது கல் நெஞ்சையும் கரைப்பதாக உள்ளது. சுற்றுலா சென்ற ஒரு மாணவியின் தாயான கவாக் ஹுயுன் ஓக் என்பவர், ‘‘எனக்கு அரசாங்கத்தின் மீது கோபம், கோபமாக வருகிறது. எனது மகள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை’’ என்று அழுது கொண்டே கூறினார்.
பார்க் யுங் சக் என்ற மற்றொரு தாயோ, ‘‘எனக்கு மட்டும் கடலுக்குள் மூழ்கித் தேடத் தெரிந்திருந்தால், நான் கடலுக்குள் குதித்து என் மகளைத் தேடுவேனே’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

அம்மா, உங்களை இனி பார்ப்பேனா?

இதற்கிடையே மூழ்கிய கப்பலில் இருந்த மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு செல்போனில் அனுப்பிய குறுந்தகவல்கள், அவற்றுக்கு பெற்றோர் அனுப்பிய பதில்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷின் யெங் ஜின் என்ற மாணவர் தன் தாய்க்கு அனுப்பிய செல்போன் குறுந்தகவலில், ‘‘அம்மா, நான் உங்களை மறுபடி பார்க்க முடியாமல் கூட போய் விடலாம் என்பதால் இதை நான் அனுப்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் அம்மா’’ என கூறப்பட்டுள்ளது.
அதற்கு அந்தத் தாயும், ‘‘ஓ.. என் அன்பு மகனே, நானும் உன்னை நேசிக்கிறேன்’’ என பதில் அனுப்பி உள்ளார். அப்போது அந்தத் தாய்க்கு, தனது மகன் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே மூழ்கிய கப்பலில் இருந்து போராடிக்கொண்டிருந்தது தெரியாது. இதில் குறுந்தகவல் அனுப்பிய மகன் ஷின், மீட்கப்பட்டு விட்ட 179 பேரில் அடங்குவான்.

மாணவனின் கதி?

ஆனால் மற்றவர்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. கப்பல் ஒரு பக்கம் முழுமையாய் சரிந்து விட்ட நிலையில், 16 வயது மாணவன் கிம் வூங் கி என்பவன் தன் அண்ணனுக்கு செல்போன் குறுந்தகவல் அனுப்பி உள்ளான். அதில் அவன், ‘‘அண்ணா, நான் கப்பலில் இருக்கிற அறை 45 டிகிரி சாய்ந்து விட்டது. எனது செல்போன் சரியாக வேலை செய்யவில்லை’’ என அனுப்பி உள்ளான்.

அந்தச் சிறுவனின் அண்ணன், ‘‘நான் நிச்சயம் உனக்கு உதவுவேன். இதோ புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறேன். பதற்றப்படாதே, நீ என்ன செய்யச்சொல்கிறாயோ அதை நான் செய்வேன். நீ பத்திரமாக இருப்பாய்’’ என பதில் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். ஆனால் இந்த கிம்மின் கதி என்ன ஆனது என்பது தெரிய வில்லை.


தந்தை, மகள் உருக்கம்

ஷின் என்ற மாணவி தன் தந்தைக்கு, ‘‘அப்பா, கவலைப்படாதீர்கள். நான் உயிர்காப்பு கவச உடை அணிந்துள்ளேன். என்னுடன் என் தோழிகள் இருக்கிறார்கள். நாங்கள் கப்பலுக்குள் இருக்கிறோம்’’ என செல்போன் குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

அந்தத் தந்தையும், ‘‘வெளியே வந்து விட முயற்சி செய். ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது’’ என பதில் குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் மகளோ, ‘‘அப்பா, என்னால் வெளியே வரமுடியவில்லை. கப்பல் மிகவும் சாய்ந்து விட்டது. வெளியே வரும் வழியில் கூட்டம் முண்டியடிக்கிறது’’ என பதில் அனுப்பினாள். அந்த மகளுக்கு அடுத்து என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை.
« PREV
NEXT »