சிறிலங்காவில் போரின்
போது இருதரப்பினராலும்
இழைக்கப்பட்ட மீறல்கள்
குறித்து,
ஐ.நா மனிதஉரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணியகத்தின் தலைமையில்,
விசாரணை நடத்தக் கோரும், தீர்மான
வரைவை அமெரிக்கா தலைமையிலான நாடுகள்
நேற்று முன்வைத்துள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்,
மனிதஉரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான,
HRC25/1 இலக்க தீர்மான
வரைவு நேற்று மாலை ஐ.நா மனிதஉரிமைகள்
பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தீர்மான வரைவின், முதல்
பிரதி ஐ.நா மனிதஉரிமைகள்
பேரவை உறுப்பு நாடுகளுக்கு
விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா,
மசிடோனியா, மொன்ரெனிக்ரோ, மொறிசியஸ்
ஆகிய நாடுகள் இணைந்து கொண்டு வந்துள்ளன. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
அறிக்கையை வரவேற்றுள்ள இந்த தீர்மான வரைவு,
சிறிலங்கா நம்பகமான
உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளத்
தவறியுள்ளதால், சுதந்திரமான, அனைத்துலக
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான
தேசிய செயல்முறைகளின் முன்னேற்றம்
குறித்து கண்காணிக்குமாறும், இருதரப்பினாலும்
போரின் போது இழைக்கப்பட்ட
மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்குமாறும்
ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தை இந்த தீர்மானம் கேட்டுக்கொள்கிறது. " மீள்கட்டுமானம், உட்கட்டமைப்பு, கண்ணிவெடிகள்
அகற்றல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த பெரும்பாலான
மக்களை மீளக்குடியேற்றியது போன்றவற்றில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், நீதி, நல்லிணக்கம், படைக்குறைப்பு, மற்றும்
வாழ்வாதாரங்களை மீளஆரம்பித்தல், போன்றவற்றில்,
கணிசமான முன்னேற்றங்கள் காணப்படவில்லை. இவற்றில், உள்ளூர் மக்களினது குறிப்பாக, சிவில்
சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினரின்
முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும். வடக்கு மாகாணசபைக்கு கடந்த
ஆண்டு தேர்தலை நடத்தப்பட்டதையும், அதில்
மூன்று மாவட்டங்களிலும்
அதிகளவு வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதையும்
வரவேற்கின்ற அதேவேளை, வாக்காளர்கள் மற்றும்
வேட்பாளர்கள் பாகுபாடுகாட்டப்பட்டது உள்ளிட்ட தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றது கவலையுடன்
சுட்டிக்காட்டத்தக்கது. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்
சிறிலங்கா பயணத்துக்கு வசதிகளை செய்து
கொடுத்து, அவரை வரவேற்றதற்கு மதிப்பளிக்கின்ற
அதேவேளை, நவநீதம்பிள்ளையை சந்தித்த சிவில்
சமூகப் பிரதிநிதிகள் மிரட்டப்பட்டதும்,
பதிலடிக்குள்ளானதும் கவலை தருகிறது. சிறிலங்காவில் தொடர்ந்தும் பாலியல்
அடிப்படையிலான வன்முறைகள். கட்டாயமாக
காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான
படுகொலைகள், சித்திரவதைகள்,
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், இணைதல் மற்றும்
அமைதியாக ஒன்றுகூடுல் உரிமைகள் மீறப்படுவது, சிவில் சமூகப் பிரதிநிதிகள்,
மனிதஉரிமை ஆர்வலர்கள்,
ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்,
நீதித்துறை சுதந்திரம் மற்றும் சட்டத்தின்
ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்ற
மோசமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக வெளியாகும் அறிக்கைகள் கவலை தருகின்றன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட
மத சிறுபான்மையினருக்கு எதிராக
பாகுபாடு காட்டப்படுவதும், அவர்களுக்கு எதிரான
வன்முறைகளும் துரிதமாக அதிகரித்து வருகின்றன. அனைத்து மக்களும் நல்லிணக்கம் மற்றும்
மனிதஉரிமைகளை அனுபவிக்கும் வகையில், அரசியல்
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும்
கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. சிறிலங்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை, அங்கு அர்த்தமுள்ள தேசிய
நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பு
செய்யத்தக்கதாக இருக்கும். ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள,
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும்
பலவந்தமாக காணாமற்போனவர்கள், வடக்கில்
படைக்குறைப்பு,
காணிப்பிரச்சினைகளை நடுநிலையாக தீர்ப்பதற்கான
பொறிமுறைகள், தடுத்துவைத்தல் தொடர்பான கொள்கை குறித்து மீள்மதிப்பிடு,
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும்
அரசியல் தீர்வின் மூலம் சுதந்திரமான சிவில்
கட்டமைப்பை வலுப்படுத்தல், எல்லா மக்களினதும்
கருத்து சுதந்திரத்தை ஊக்குவித்தல், மற்றும்
சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தல் உள்ளிட்டவை ஆக்கபூர்வமான பரிந்துரைகளாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான தேசிய
செயற்திட்டம் ஒன்றை சிறிலங்கா அறிமுகப்படுத்திய
போதிலும், எல்லாப் பரிந்துரைகளுக்கும்,
கண்டறிவுகளுக்கும் தேசிய செயற்திட்டம்
பொருத்தமான முறையில் பதிலளிக்கவில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள
காரணிகளுக்கு பரந்தளவில் பதிலளிக்க
சிறிலங்கா ஊக்குவிக்கப்படுகிறது. அதேவேளை, அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும்
மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த மோசமான
குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தேசிய
செயற்திட்டமோ, நல்லிணக்க
ஆணைக்குழுவோ பொருத்தமான பதிலை அளித்தக்
தவறியுள்ளன. உண்மை மற்றும் நீதிக்கான தேசிய
பொறிமுறை ஒன்றை உருவாக்க
சிறிலங்கா தவறியுள்ளதால், மனிதஉரிமை மீறல்கள்
மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள்
தொடர்பாக விசாரிக்கவும், எந்தவொரு தேசிய
பொறிமுறையை கண்காணிக்கவும், ஐ..நா மனிதஉரிமைகள் பேரவை அனைத்துலக
விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும்
என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்
அறிக்கை அளித்துள்ளார். தொழில்நுட்ப உதவிகள் தொடர்பாக,
சிறிலங்கா அரசாங்கம்,
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துடன்
தனது பேச்சுக்களையும் ஒத்துழைப்புகளையும்
அதிகரித்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது. 1. சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும்
பொறுப்புக்கூறலை ஊக்குவிக்குவிப்பது
தொடர்பாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர்
பணியகத்தினால், 2013 செப்ரெம்பர் 25, 2014
பெப்ரவரி 24ம் நாள்களில் சமர்ப்பிக்கப்பட்ட
அறிக்கைகள் வரவேற்கத்தக்கன. 2. அனைத்துலக மனிதஉரிமை மற்றும மனிதாபிமான
சட்ட மீறல்கள் தொடர்பாக நம்பகமான,சுதந்திரமான
விசாரணை நடத்தி, அத்தகைய மீறல்களுக்குப்
பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்கவும்,
தொடரும் மனிதஉரிமை மீறல்களை முடிவுக்குக்
கொண்டு வரவும், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு
விடுக்கப்படுகிறது. 3. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில்
இடம்பெற்றுள்ள ஆக்கபூர்வமான
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும்,
எல்லா இலங்கையர்களும் நீதி, சமத்துவம்,
பொறுப்புக்கூறல்,
நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எல்லா சட்ட கடப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம்
நிறைவேற்ற வேண்டும். 4. தனிநபர்கள், குழுக்கள், ஆலயங்கள், மசூதிகள்,
தேவாலயங்கள், மீதான எல்லாத் தாக்குதல்கள்
தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும்,
எதிர்காலத்தில் இத்தகைய
தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுவதுடன்; மதவழிபாட்டு இடங்கள், ஊடகவியலாளர்கள்,
மனிதஉரிமை ஆர்வலர்கள், மத சிறுபான்மை குழுக்கள்,
ஏனைய சிவில் சமூகப் பிரதிநிதிகள் மீதான
தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி,
குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்
என்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. 5. வெலிவெலியவில் ஆயுதம் தரிக்காத
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், மற்றும் 2013ம்
ஆண்டின் இராணுவ நீதிமன்ற
விசாரணை அறிக்கை உள்ளிட்ட பாதுகாப்புப்
படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான
குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் முடிவுகளை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட
வேண்டும். 6. 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில்,
வடக்கு மாகாணசபைக்கும், அதன் முதலமைச்சருக்கும்
தேவையான வளங்களையும், ஆட்சியை நடத்துவதற்கான
அதிகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம்
வழங்குவதை ஊக்குவிக்கிறது. 7. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான
மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான
சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து,
அவர்களை வரவேற்று வசதிகளை அளித்த
சிறிலங்கா அரசாங்கத்தின்
முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, ஏனைய நிலுவையிலுள்ள விவகாரங்கள்
தொடர்பாக ஆராய்வது தொடர்பான
சிறப்பு ஆணையர்களின் கோரிக்கைகளுக்குப்
பதிலளிக்கவும் சிறிலங்கா அரசாங்கம்
ஊக்குவிக்கப்படுகிறது. 8. நம்பகமான தேசிய செயல்முறை உருவாக்கத்
தவறியுள்ளதால், நம்பகமான சுதந்திரமான
அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டிய
தேவை உள்ளது, மற்றும் பொறுப்புக்கூறல்,
நல்லிணக்கம், குறித்த தேசிய செயல்முறைகள்
தொடர்பாக கண்காணிக்கவும், சிறிலங்காவில் இருதரப்பினாலும் இழைக்கப்பட்ட
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக,
விசாரணை நடத்தவும், ஐ.நா மனிதஉரிமை ஆணையம்
அனுமதிக்கப்பட வேண்டும் என்ற
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் பரிந்துரைகளும்,
முடிவுகளும் வரவேற்கத்தக்கது. இது தொடர்பான, முன்னேற்றங்கள் குறித்து,
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 27வது அமர்வில்
வாய்மூல அறிக்கையையும், தற்போதைய தீர்மானம்
நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான
முழுமையான அறிக்கையை 28வது அமர்விலும்
சமர்ப்பிக்க வேண்டும். 9. மேலே சுட்டிக்காட்டப்பட
விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான,
ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை,
வழங்கி ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரும், ஏனைய
சிறப்பு ஆணைபெற்றவர்களும் ஒத்துழைக்க
ஊக்குவிக்கப்படுகின்றனர். 10. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த,
ஐ.நா மனிதஉரிமை ஆணையருடன்
ஒத்துழைக்கும்படி சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தீர்மான வரைவில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment