Latest News

March 04, 2014

7 பேர் விடுதலை- மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!
by Unknown - 0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.
இதனையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, உள்பட 7 பேரை விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தார். மேலும், இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ''ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அவர்களை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்கு, மாநில அரசு தகவல் தெரிவித்தது. மேலும் பதில் அளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு, முடிவு எடுக்காமல் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. எனவே மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் மனு மீதான விசாரணை 6ம் தேதி வியாழக்கிழமை நடக்கவுள்ளது.
« PREV
NEXT »

No comments