கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் நேற்று திங்கட்கிழமை காலை உயிரிழந்த தமிழ்க் கைதியின் மரணம் தொடர்பில் அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
2007-ம் ஆண்டில், கொழும்பு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான கோபிதாஸ் என்பவரே மர்மமான முறையில் மகசீன் சிறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் செய்திச்சேவை ஒன்றிடம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 2012-ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கோபிதாஸுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதாக லண்டனிலுள்ள அவரது குடும்ப உறவினர்கள் செய்திச்சேவையிடம் தெரிவித்தனர்.
ஏற்கனவே நீண்டகாலத்தை இலங்கைச் சிறையில் கழித்து விட்டிருந்த நிலையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை பிரிட்டன் சிறையில் கழிப்பதற்கு இடமளிக்குமாறு கோபிதாஸ் விடுத்திருந்த கோரிக்கை பிரிட்டிஷ் அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் தரப்பில் அதற்கு சம்மதம் கிடைத்திருக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறினர்.
இந்த சூழ்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஒழுங்கான முறையில் மருத்துவ வசதிகள் கிடைத்தனவா என்பது தொடர்பில் சந்தேகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் தாக்கப்பட்டும் உரிய மருத்துவ வசதிகள் இன்றியும் உயிரிழந்துள்ளமையையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதனால், உரிய விசாரணை நடத்தி கைதியின் மரணத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கோபிதாஸ் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று இலங்கை சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் ஜீ.பி. குலதுங்க செய்திச்சேவையிடம் கூறினார். கடந்த காலங்களில் உடல் சுகவீனத்திற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (நேற்று) காலை 7.30 மணியளவில் அவர் சிறைச்சாலைக் கூடத்தில் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்திருக்கிறார். இதற்கு முன்னர் அவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருப்பதாகத் தான் நாங்கள் நம்புகிறோம் என்றார் குலதுங்க.
மயங்கிவிழுந்த கோபிதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்ததாகவும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் கூறினார்.
பிரேதப் பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் கோபிதாஸுக்கு சிறந்த அளவில் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒருமாத விடுமுறையில் வீடு செல்வதற்குத் தயாராக இருக்குமளவுக்கு அவரது உடல்நிலை குறித்து சிறந்த மருத்துவச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்ததாகவும் ஜீ.பி. குலதுங்க கூறினார்.
அவரது மரணத்தில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment