மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை முடக்க நிலையே நோக்கி சென்று கொண்டிருக்கையில் மீண்டும் சன்னதமெடுத்து ஆடத்தொடங்கியுள்ளார் வடக்கு மாகாணசபையின் தற்போதைய பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ். இது வரை காலமும் எந்நேரமும் வீட்டிற்கனுப்பப்படலாமென்ற நிலையினிலிருந்த அவர் தற்போது மஹிந்த வழங்கிய உறுதி மொழியினையடுத்து உற்சாகம் பெற்றுள்ளார்.
இவ்வகையில் வடமாகாண கல்வி மேம்பாட்டிற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஓதுக்கீடுகளை கல்வி அமைச்சரது அனுமதியின்றி தன்னிச்சையாக எடுத்தாடத்தொடங்கியுள்ளார்.
இன்று காலை நல்லூரிலுள்ள வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற இருந்த கல்வி மேம்பாட்டிற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலை தன்னிச்சையாக தனது தலைமை அலுவலகத்திற்கு மாற்றம் செய்துள்ளார். அத்துடன் தன்னிச்சையாக தானே அக்கூட்டத்திற்கும் தலைமை தாங்கியுள்ளார். இதனிடையே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவென அழைக்கப்பட்டிருந்த கல்வி அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் நல்லூர் அலுவலகத்தினில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தனது அலுவலகத்தில் குறித்த கூட்டத்தினை நடத்திய வடக்கு மாகாணசபையின் தற்போதைய பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பின்னர் குழுவினரை ஆளுநர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று சந்திப்பு மற்றும் மதிய விருந்து என்பவற்றினை நடத்தியதாக கூறப்படுகின்றது. இதனிடையே ஆசிய அபிவிருத்தி வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு ஆலோசனையினுள் அமைச்சர்கள் டக்ளஸ் மற்றும் றிசாத் ஆகியோரதும் ஆளுநரதும் முன்மொழிவுகளுமே உள்ளடக்கப்பட்டிருந்ததாக பிரதம செயலாளரது அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் அலுவலகத்தினில் நடைபெற்ற குழுவினரது ஆளுநர் அலுவலகத்திற்கான விஜயம் மற்றும் சந்திப்பு மதிய விருந்து என்பவை தொடர்பாக படம்பிடிக்க அரச ஆதரவு ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
No comments
Post a Comment