Latest News

January 15, 2014

தலைவர் நல்லா இருக்கின்றார். பத்திரமாக இருக்கின்றார்
by admin - 0

ஈழத் தமிழர்களுக்காக மிக நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகின்ற மூத்த அரசியல்வாதி. தமிழ்நாட்டில் இருந்து ஈழத்தமிழர்கள் பற்றி சதா எண்ணிக் கொண்டிருப்பவர் பழ.நெடுமாறன். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார் என்பதைக் காரணம்காட்டி 'பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உணர்வாளர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த பலர் அவர்கள் இலங்கையில் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் தமது குரல்களை மாற்றியுள்ளனர். ஆனாலும் பழ.நெடுமாறனின் குரல் மாறவில்லை.

இந்தத் தள்ளாத வயதிலும் ஈழத்தில் நடந்த படுகொலைக்காக நியாயம் தேடிக் கொண்டிருக்கின்றார். உலகத் தமிழர் பேரவையின் தலைவராக இருந்து கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். உலகத் தமிழர் பேரவையினால் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையால் தமிழக அரசுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றார்.

தமிழக அரசால் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்காவினை மீள அமைப்பதற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். தனது கடுமையான வேலைப் பழுவிற்கு மத்தியிலும், தனது எழுத்து வேலைகளுக்கும் மத்தியிலும் உதயனுடனாக நேர்காணலுக்கு அவர் சம்மதித்திருந்தார்.
சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரத்தில் அமைந்திருக்கின்றது நெடுமாறனின் அச்சகம். தமிழ்குலம் அச்சகம் என்று அழகு தமிழில் எழுதப்பட்டிருக்கின்றது. அங்கு தனது அறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாரனுடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படத்தை பெரியளவில் வைத்துள்ளார்.
புன்முறுவலுடன் எம்முடனான உரையாடலைத் தொடங்கினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழக அரசுடன் ஏற்பட்டுள்ள முறுகல்நிலையுடன் எமது நேர்காணலைத் தொடக்கினோம்.

'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூங்கா தமிழக அரசின் அனுமதி பெற்றே நாங்கள் அமைத்தோம். அந்த அனுமதியும் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்தது. இந்திய மதிப்பில் 20 லட்சம் வரையில் நாங்கள் அதற்கு செலவு செய்திருந்தோம்' என்றார்.

தொடர்ந்த அவர், 'அதைத் தீடீரென இருட்டு நேரத்தில் இடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சட்டரீதியாக அது தவறு. எங்களுக்கு முன் அனுமதி கொடுத்து நாங்கள் அதற்கு பதில் வழங்கி அதன் பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் அவர்கள் செய்யவில்லை' என்று குறிப்பிட்டார்.

அதை ஏன் இடித்தார்கள் என்று தொடர்ந்தோம். 'எங்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்துச் செய்து விட்டதாக தமிழக அரசு சொல்கின்றது. அவ்வாறு அவர்களது இஷ;டத்துக்கு அனுமதியை ரத்துச் செய்ய முடியாது. வேண்டுமென்றே செய்திருக்கின்றார்கள். இதை எதிர்கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதில் வெற்றி பெற்று மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்காவை அமைப்போம்' என்றார் நம்பிக்கையாக, இடித்தழிக்கப்பட்ட பூங்காவுக்கு மீண்டும் உயிரூட்ட நிதிசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

எவ்வாறு இந்த நடவடிக்கை இருக்கின்றது என்று கேட்டோம். 'ரயிலில் சென்று முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளேன். ரயிலில் சென்று ஒவ்வொரு நிலையங்களிலும் இறங்கி மக்களிடம் நான் பேசுவேன். பின்னர் நிதி திரட்டுவோம்.

சென்னையிலிருந்து நாகர்கோயில் வரையும் பின்னர் கோவை வரையும்; முதல் பயணம் அமைந்திருந்தது. இரண்டாவது பயணம் சென்னையிலிருந்து சேலம் வரைக்கும், பின்பு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரைக்கும் என்று அமைந்திருந்தது.
மக்கள் பெரும் கூட்டமாக வந்து ஆதரவளித்தார்கள். இந்த இரண்டு பயணம் மூலம் 3 லட்சம் இந்திய ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. உங்கள் பணத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் வரையில் என்றார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்குப் பின்னருமான ஈழம் தொடர்பான புரிதல் தமிழ்நாட்டில் எவ்வாறு இருக்கின்றது என்று அரசியல்கள நிலைமையைக் கேட்டோம்.
'2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை, மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரியதொரு எதிர்ப்பு உணர்வலையை இங்கு தோற்றுவித்துள்ளது. அந்த உணர்வலை இன்னமும் இங்கு இருக்கின்றது. அது சோர்ந்து போய்விடவில்லை. தம்பி முத்துக்குமார் உள்பட 20 மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் உயிர்களை ஈழத்துக்காக இங்கு தியாகம் செய்துள்ளார்கள்' என்று குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டைப்பற்றிக் கேட்டதும், சிரித்துக் கொண்டே 'இன்று தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கட்சியும் ஈழத்தைப் பற்றி பேசித் தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 2009 முன்னால் ஈழத்தைப் பற்றி பேசாத அரசியல் கட்சிகளும், அதற்குப் பின்னர் ஈழத்துக்காக தாங்கள் செய்தவற்றை பட்டியலிட்டு ஈழம் சார்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இனிமேல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஈழப் பிரச்சினை பற்றிய ஒரே கல்லில் உரசிப் பார்த்துதான் மக்கள் தீர்பளிப்பார்கள். அது பெரிய கட்சியாக இருந்தாலும் பொருந்தும். தமிழ்நாட்டு அரசியல் மையமாக ஈழப் பிரச்சினை உருவாகியுள்ளது. அதனை எதிர்த்து பேசுவதற்கு தமிழ்நாட்டில் கட்சி இல்லை.

2009 முன்னால் பல கட்சிகள் ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தன. ஆனால் அந்தக் கட்சிகள் கூட இப்போது அவசர அவசரமாக தமது நிலையை மாற்றியுள்ளன' என்று முழுமையான நிலைவரத்தை உரைத்தார். 

நிலைப்பாடுகள் இவ்வாறு இருக்கையில் போராட்டம் என்பது எவ்வாறிருக்கின்றது என்று தொடர்ந்தோம். 'மக்கள் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. அது தொடரும். இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்து 3 லட்சம் மக்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 50 ஆயிரம் விடுதலைப் புலிகள் வரையில் உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஏதாவதொரு வகையில் இழப்புக்களைச் சந்தித்துள்ளது. 

10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு தியாகத்துக்குப் பின்னர் அந்தப் போராட்டம் ஓய்ந்து போகும் என்று யாராவது நினைத்தால் அது தவறு. அது ஓயவே ஓயாது. மக்கள் போராடுவார்கள்.


அந்தப் போராட்டத்துக்கு சர்வதேச தமிழர்கள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். இன்று சர்வதேச சூழல் வேகமாக மாறி வருகின்றது. அதை பயன்படுத்தி உலக நாடுகளில் வாழும் தமிழர்கள், மேலும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலமே ஈழத்தில் எஞ்சியுள்ள மக்களை பாதுகாக்க முடியும். 
இந்தப் போராட்டம் உலகத் தமிழர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதைச் சரிவரச் செய்ய வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார்.


மக்கள் போராட்டம் என்பது சரி. ஆனால் ஈழத்து அரசியல் கட்சிகளின் போக்குகளில் தடுமாற்றம் ஏற்படுகின்றதே என்று சாடைமாடையாக கேள்வியைத் தொடங்கியதும் உடனடியாகவே 'கட்சிகளை விட்டு விடுங்கள். அங்குள்ள மக்களைப் பற்றி மட்டும் பேசுவோம் என்றவர், அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மக்கள் எவ்வளவோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமோகமாக வாக்களித்தார்கள். அந்த வாக்களிப்பு முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
இதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்துள்ளார்கள் என்று பார்ப்பதை விட ஜனாதிபதி ராஜபக்ஷ தேர்தலில் நிறுத்தியவர்களை தோற்கடித்திருக்கின்றார்கள் என்று பார்க்க வேண்டும். இவ்வாறு எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் தமக்கு ஆபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் அந்த மக்கள் துணிந்து செய்திருக்கின்றார்கள். அந்த மக்கள் இன்னமும் மன உறுதியுடன் இருக்கின்றார்கள் என்பதும், மேலும் போராடுவதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் அந்தத் தேர்தல் ஊடாக மக்கள் சர்வதேசத்துக்கு சொல்லி வைத்திருக்கின்றார்கள் என்று புதுவிளக்கமளித்தார்.

ஈழத்து அரசியல் கட்சிகளை விட்டு ஈழ அரசியல் பற்றி கதைக்க முடியாது என்பதைக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழக கட்சிகள் ஈழம் என்று பேசுவதை கைவிடுமாறு கோரியிருக்கின்றார் என்று தொடரும் போதே அவரது முகபாவனை இதை விட்டு விடுங்கள் என்பது போன்றிருந்ததும் இருந்தும் இது தமிழக அரசியல் சக்திகைளப் பாதிக்குமா என்று கேட்டோம்.
'அது எம்மை பாதிக்கும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு பேசுபவர்கள் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்று மீண்டும் நழுவிச் சென்றார். ஆனாலும் அதற்கான காரணத்தை தெளிவாக முன்வைத்திருந்தார். 'நான் ஏதாவது சொல்லி அது ஈழத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. துமிழ்நாடு இதற்கு முன் எப்போது இல்லாத வகையில் ஈழத் தமிழர்களுக்காக அணிதிரண்டு நிற்கின்றது.
கடந்த தேர்தலில் காங்கிரஸும், தி.மு.கவும் தோற்கடிக்கப்பட்டதற்கு அதுதான் காரணம். அந்தத் தேர்தல் முடிவு சொன்ன செய்தி, ஏதோ ஒரு கட்சி வென்றது தோற்றது அல்ல. தமிழ்நாட்டு மக்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள் என்பதுதான் அந்த மிகப்பெரிய செய்தி' என்றார்.
தொடர்ந்து இந்திய அரசியல் விவகாரங்களுக்கு மெல்ல நுழைந்தோம். இந்திய அரசியலில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆட்சி மாற்றம் என்பது அரசல்புரசலாக பேசிக் கொள்ளப்படுகின்றது. இந்த ஆட்சி மாற்றம் ஈழத்தின் போக்கில் என்னத்தை மாற்றியமைக்கும் என்று கேட்டோம்.
'2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவு கொடுத்தது இப்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சிதான். அவர்கள்தான் ஆயுதமும் கொடுத்து பயிற்சியும் கொடுத்திருந்தார்கள். எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினர் தோற்கடிக்கப்படுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றவர், 'அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வருகின்ற எந்தவொரு அரசியல் கட்சியும் ஈழ அரசியல் விடயத்தில் ஒழுங்காகவே இருப்பார்கள்' என்று உத்தரவாதமளித்தார்.
அதற்கு, 'தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு இதுதான். அந்த தீர்ப்பு எதிராகச் செயற்பட்ட காங்கிரஸ் கட்சி நடந்த நிலையைப் பார்த்து, அந்தத் தவறை இனி ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு இந்திய அரசியலின் போக்கையே மாற்றியமைக்கும்' என்ற வியாக்கியானத்தைக் கொடுத்தார்.
இதற்கு கடந்தகாலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை ஆதாரம் காட்டினார். 'கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது. தி.மு.க, வாக்குக்கு 5 ஆயிரம் ரூபா என்று பணத்தை வாரியிறைத்தார்கள். ஆனால் என்ன நடந்தது. அவ்வளவு பணம் செலவழித்தும், அதிகாரத்தை காட்டி மிரட்டியும் எவ்வளவோ செய்தார்கள். இறுதியில் மக்கள் தீர்ப்பு என்னவாக அமைந்தது. எதிர்கட்சியாக கூட வரமுடியாதளவிற்கு மக்கள் செய்து விட்டார்கள்.
அ.தி.மு.க அரசுக்கு இதுதான் பயமே. அதனால்தான் ஈழத் தமிழருக்கு சார்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றார்கள். இந்த அம்மா( தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா)தான் என்னையும், வை.கோவையும் பிடித்து 'பொடா' சட்டத்தில் ஒன்றரை வருடம் சிறையில் அடைத்தார்கள். இப்பிடியிருந்த அம்மா இன்று மாறியிருக்கின்றார். அதற்கு காரணம் தி.மு.கவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பின் பயம்தான்.
ஆனாலும் அவர்களை அறியாமலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்ததன் மூலம் சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தற்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அம்மா ஏமாற்றுவதற்கு முயற்சி செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்' என்று தனது ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர் எங்களது உரையாடலும் ஐ.நா சபையை நோக்கியே நகர்ந்தது. இந்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் என்னவாறான மாற்றங்கள் வரும் என்று கேட்டோம்.
'ஐ.நா சபையின் கடந்த இரண்டு கூட்டத் தொடர்களில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் இலங்கைக்கு சிலவற்றை செய்ய வேண்டும் என்று கடப்பாடு விதித்து, கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நாமனித உரிமை ஆணையாளரும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் ராஜபக்ஷ எதுவும் செய்யவில்லை. இப்போது மனித உரிமைகள் ஆணையத்தில் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதுதான் கேள்வி. கமரூனும் பொதுநலவாய மாநட்டில் கலந்து கொண்டு இலங்கைக்கு கடுமையான தாக்குதல் தொடுத்திருந்தார். இனி மேற்கு நாடுகளின் போக்கு கடுமையானதாகத்தான் இருக்கும். இந்தியா என்ன செய்யப் போகின்றது ? என்பதுதான் இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களின் கேள்வியாக இருக்கின்றது.
கடந்த மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இந்தியாவும், சீனாவும் இலங்கையை காப்பாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டார்கள். இந்த முறை அவ்வாறு செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் காங்கிரஸுக்கு கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச வாக்கும் கிடைக்காமல் போய்விடும்.
சர்வதேசத்தின் அழுத்தம் இந்தக் கூட்டத்தில் இருக்கும். வெறும் தீர்மானம் நிறைவேற்றி இனிப் பயனில்லை. இதுவரை நிறைவேற்றிய தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை செயற்படவில்லை. அடுத்தது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
அந்த நடவடிக்கைக்கான செயல்வடிவம் எவ்வாறு கொடுக்கப் போகின்றார்கள். அவ்வாறு செயல் வடிவம் கொடுக்காவிட்டால் அவர்கள் மீதான நம்பிக்கையும் போய்விடும்' என்றார் சற்று கோபமாக.
சரி, இலங்கையில் நடந்தது மனிதபடுகொலை தொடர்பில் பலரும் பல்வேறு விதமாகச் சொல்கின்றார்கள். இனப்படுகொலை, போர்குற்றம், மனித உரிமை மீறல் என்று பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்று தொடர்ந்தோம்.
'மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அங்கு நடத்தது திட்டமிட்ட இனப்படுகொலைதான்' அதற்கான வரலாற்று ஆதாரங்கள் சிலவற்றையும் அடுக்கினார்.
ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள். ஹிட்லர் பாசிச ஆட்சி நடத்தினார் என்று சொல்லி சிறுமைப்படுத்துவது சரியல்ல. ஹிட்லர் ஜேர்மனிய மக்களை கொலை செய்தாரா ? யூதர்களை மாத்திரமே கொலை செய்தார்.
அதே மாதிரி ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்ட சிங்களவர்களை கொலை செய்தாரா ? அவர் தமிழர்களை மாத்திரமே கொலை செய்தார். ஆகவே அது திட்டமிட்ட இனப்படுகொலைதான்' உணர்வுகொப்பளிக்க.
அத்துடன் அவர் முடிக்கவில்லை, 'பொஸ்னியாவில் இனப்படுகொலை செய்தவர்கள் மீது ஐ.நா சபை நடவடிக்கை எடுக்கவில்லையா ? அதே மாதிரி இதே போன்று இனப்படுகொலை செய்த ராஜபக்ஷவுக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். சர்வதேச சமூகம் இதைச் செய்யாவிட்டால் ஐ.நா சபை அழிந்து போகும்' என்றார் சாபம் கொடுத்தவராக.

'இதே தவறை 1936 ஐ.நா சபை விட்டுருந்தது. அப்போது ஐ.நா சபையல்ல. அது சர்வதேச சபையாக இருந்தது. ஹிட்லரும், முசோலினியும் அத்துமீறி நடந்து கொண்டபோது, யூதர்களை படுகொலை செய்த போது அதை, பெயருக்கு கண்டித்தார்களே தவிர தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சர்வேத சபை பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
அப்போது ஜேர்மனியில் நடந்த, யூத இனப்படுகொலையை தடுக்கவில்லை. ஜேர்மனி பக்கத்திலிருந்த சிறிய நாடுகள் மீது படையெடுத்தபோதும் அவற்றையும் தடுக்கவில்லை. முசோலினி அபிசேனியா மீது படையெடுத்து விச வாயுபிரயோகம் செய்து மக்களை கொலை செய்தபோதும் தடுக்கவில்லை.
இறுதியில் ஹிட்டலரும், முசோலினியும் மேலும் மேலும் துணிச்சல் வந்து ஏனைய நாடுகளையும் ஆக்கிரமிக்க துணிந்தார்கள். பிரான்சையும் அடுத்து பிரிட்டனையும் ஆக்கிரமிக்க முற்பட்டபோதுதான் இவர்களுக்கு புத்தி வந்தது. அதற்குள் சர்வதேச சபை செத்து விட்டது.
இன்றைக்கும் அதே சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐ.நா சபை இன்று இதை தடுக்காவிட்டால் சர்வதே சபைக்கு ஏற்பட்ட கதிதான் ஐ.நா சபைக்கும் ஏற்படும்' என்று அவர் கூறி முடித்தார்.
ஆனாலும் இலங்கை விடயத்தில் ஐ.நா நழுவிச் செல்கின்ற போக்குத்தானே தொடர்கின்றது என்று கேள்வியெழுப்பினோம். 'டர்பிளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சொல்லியிருக்கின்றது. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கைக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனால் என்ன பயன் ? நடவடிக்கை எடுக்காவிட்டால், முடிவடையப்போவது ஐ.நா.தான். ஐ.நா சபை மீதான மக்கள் நம்பிக்கை பொய்த்துவிடும். இதனால் ஐ.நாவை எந்தவொரு நாடும் பின்னர் நம்பாது' என்பதடன் முடித்துக் கொண்டார்.
போர்க்குற்றத்திற்கு ராஜபக்ஷவுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததுடன் எல்லாம் முடிந்து விடுமா ? தமிழர்களின் தீர்வைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லையே என்று கேள்வியெழுப்பினோம்.
'ராஜபக்ஷவை முதலில் அப்புறப்படுத்தினால்தான் அடுத்த கட்டத்துக்கு வழி ஏற்படும். ராஜபக்ஷவை வெளியேற்றாமல் இலங்கையில் தீர்வைக் கொண்டுவர முடியாது. ராஜபக்ஷ இனப்படுகொலை மாத்திரம் செய்யவில்லை. இலங்கையின் ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கின்றார். குடும்ப ஆட்சியை அங்கு நடத்திக் கொண்டிருக்கின்றார்.
எதிர்கட்சி வாயைத் திறக்க முடியாது. ரணில் விக்கரமசிங்கவும் வாயைத் திறந்தால் பிரச்சினை என்று வாய் மூடியிருக்கின்றார். சிங்கள எதிர்கட்சிகளையும் ஒடுக்கி அங்கு சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார். 
இவ்வாறானதொரு நிலையில், ராஜபக்ஷவை வெளியேற்றாமல் அங்கு தீர்வு எப்படிச் சாத்தியமாகும். ராஜபக்ஷவுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுத்து அவரை வெளியேற்றி, இலங்கையில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்திய பின்னரே தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியும்' என்றார்.

சரி தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்வியைத் தொடங்கியதும்,
'சமஷ;டி என்பதெல்லாம் நடக்கின்ற கதையல்ல. இங்கு இந்திய அரசு மாநிலங்களுக்கு அதிகாரங்கள் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றது. இங்கு என்ன அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது எங்களுக்குதான் தெரியும்.

ஓர் நகரசபைக்கு உள்ள அதிகாரம் கூட மாநிலங்களுக்கு இல்லை. இன்று இந்திய அரசு நினைத்தால், தமிழ்நாட்டு அரசை கலைக்கலாம். இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என்கின்ற மாநிலமே தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தலாம். இதுதான் சமஷடியா ?
இந்திய அரசியல் சட்டத்தில், மத்திய அரசை கலைக்க முடியாது. குடியரசுத் தலைவர் நினைத்தால் மாநில அரசை கலைக்கின்ற மாதிரி மத்திய அரசை கலைக்க முடியாது. இது எப்படி சமஷ;டி அரசியலாகும்.

ஏன்னைப் பொறுத்தவரையில் தமழீழம் ஒன்றே தீர்வு. வேறு எந்தத் தீர்வு வந்தாலும் இந்தப் பிரச்சினை தீராது' என்றார் ஆணித்தரமாக.
அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி போய் வருகின்றார்கள். ஆனால் அவர்களும் எதுவும் செய்யவில்லையே என்று தொடர, அமெரிக்கா ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்து மாக் கடலில் சீனா ஆதிக்கம் வரக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். அதை தடுக்கும் முயற்சியைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.
அமெரிக்காவும் மேற்கு நாடுகளுக்கும், இந்தியாதான் மிகப்பெரிய சந்தை. ஈழத் தமிழர்களுக்காக அவர்கள் இந்தச் சந்தையை இழக்க துணியமாட்டார்கள். இந்திய அரசில் மாற்றம் ஏற்பட்டால் அவர்கள் யோசிப்பார்கள். தற்போதைய அரசு இருக்கும் வரையில், எதுவும் இல்லை. இந்திய அரசை மீறி செயற்பட அவர்கள் தயாராக இல்லை.
பொருளாதார நலன்களை மனதில் கொண்டுதான் இந்தப் பிரச்சினையை அணுகுகின்றார்கள். இந்துமா கடல் மார்க்கம் என்பது வணிகத்துக்கு முக்கியமானது.

இலங்கைக்கு சீனா உதவுவதற்கு காரணமே இந்துமா கடலின் ஆதிக்கத்துக்குதான். போரின் போது இந்தியா உதவியிருந்தாலும், ராஜபக்ஷ இந்தியாவுக்கு எதிரான நாட்டுடன் கூட்டு வைத்துதான் போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். இதன் மூலம் இலங்கையின் சீன ஆதிக்கத்தை ஏற்படுத்த இந்தியாவும் காரணமாயிற்று. இந்தியா இந்தத் தவறுக்கு வருந்துகின்றது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலைப்பாடு' என்றார்.
இலங்கையில் இந்திய வெளிவிவகார கொள்ளை தோல்விகண்டதாக சொல்கின்றீர்களா என்று கேட்க, 'இலங்கை தொடர்பாக இந்தியா வெளிவிவகார கொள்கை படுதோல்வியடைந்து விட்டது. ஜவஹலால் நேரு பிரதமராக இருந்த போது சீனா படையெடுத்தது. அதன் பின்னர், வடக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான் என்றைக்கும் ஆபத்துதான் என்று இந்தியா தீர்மானித்தது.

எனவே வடஇந்திய மாநிலங்கள் எவற்றிலும் இராணுவத் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்று தீர்மானித்தார். விமானத் தாக்குதல் நடந்தால் உடனடியாக அவற்றை அழிப்பார்கள். எனவே வடஇந்திய மாநிலத்தில் அமைப்பதை விட, தென்னிந்திய மாநிலத்தில் அமைத்தார்கள். தென்னிந்திய மாநிலத்துக்கு அருகில் இலங்கை இருந்தது. இலங்கையை தங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நாடு என்று நினைத்தார்கள்.

இன்று தென்னிந்தியாவில் 600 மேற்பட்ட இராணுவத் தொழிற்சாலைகள் உள்ளன. இப்போது திபெத்திலிருந்து ஏவுகணை விடுவதற்கு பதில் மன்னாரிலிருந்து ஏவுகணை விட்டு எல்லாவற்றையும் சுலபமாக அழிக்கலாம். இந்தியாவின் இராஜதந்திர கொள்கை எவ்வளவு முட்டாள்தனமான, தூரநோக்கற்றது என்பதை இதிலிருந்தே அறியலாம்.
விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரையில் இலங்கையில் சீனா கால் ஊன்றவே இல்லை. புலிகள் தங்கள் மண்ணை மீட்க மட்டும் போராடவில்லை. இந்தியாவின் நலன்களை பாதுகாக்கவும் போராடினார்கள். இதை யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுதான் யதார்த்தம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்ததன் மூலம் தங்களைத் தாங்களே அழிப்பதற்கு அவர்களே வழிகோலியிருக்கின்றார்கள்' என்றார்.
தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் பராட்டும் தமிழ்நாட்டுடன் தற்போது முறுகலை தோற்றுவிக்கும் வகையில் மீனவர் பிரச்சினை நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று கேள்வியைத் தொடுத்தோம்.


'30 வருடமாக இந்தப் பிரச்சினை நடக்கின்றது. இதுவரையில் 600 மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். உலகில் ஐந்தாவது பெரிய கடற்படை இந்திய கடற்படை. இவர்களால் சிங்கள கடற்படையை தடுக்க முடியவில்லையா ? அவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள். சாகிறவன் தமிழன் என்பதால் வேடிக்கை பார்க்கின்றார்கள். அவனை இந்தியனாக பார்க்கவில்லை.
மீனவர்கள் தங்களை தாங்களே பாதுகாக்க துப்பாக்கியை அரசு கொடுக்க வேண்டும். வேறு வழியில்லை. ஊர்காவல் படை மாதிரி இவர்களுக்கும் கொடுங்கள். மீனவர் காவல் படை அமைத்து துப்பாக்கி கொடுங்கள். 

வளங்கள் சுரண்படுவது தொடர்பான பிரச்சினை இருநாட்டு மீனவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினை. அவர்கள் பேசித் தீர்த்தும் கொள்ளலாம். யாழ்ப்பாணத்து மீனவர்களா இந்திய மீனவர்களை சுடுகிறார்கள். சுடுறவன் யார் ? சிங்கள கடற்படை சுடுவதை இரு தரப்பு மீனவர்களும் எப்படி பேசித் தீர்க்க முடியும்.

இது போகாத ஊருக்கு வழி காட்டுவது மாதிரி உள்ளது. மீன்பிடி தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் பேசி முடிவெடுக்கலாம். சுடுவது தொடர்பில் இரு தரப்பு மீனவர்களும் பேசி முடிவெடுக்க முடியுமா ? அந்த அதிகாரம் மீனவர்களுக்கு உண்டா ? கடற்படை சுடுவதற்கு பரிகாரமாக இருதரப்பு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை என்கின்றார்கள். இது யாரை ஏமாற்றுவதற்கான நாடகம். ஈழத்து மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கக் கூடாது. அதைப் பேசித் தீர்க்கலாம்' என்றார். 

உலகப் போக்குக்கு ஏற்ப ஈழத் தமிழர்கள் எவ்வாறு தமது போராட்டத்திசையை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்று கேட்டோம். 'இதைப் பற்றி நான் சொல்லக் கூடாது. அதை அந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஆதரவாக இருப்போம். அவர்கள் எதிர்காலம் பற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
தமிழீழக் கோரிக்கையை அவர்கள்தான் முன்வைத்தார்கள். அதனை நாங்கள் ஆதரித்தோம். இப்போ அவர்கள் இந்த சூழ்நிலையில் என்ன முடிவு எடுத்தாலும் அதற்குப் பக்கபலமாக நிற்போம். அனூல் கட்சிகளின் முடிவுகளுக்கு அல்ல மக்களின் முடிவுகளுக்குத்தான்' என்றார் அழுத்தம் திருத்தமாக.
உரையாடலின் முடிவில், தலைவர் நல்லா இருக்கின்றார். பத்திரமாக இருக்கின்றார். ஈழக் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுவார் என்பதை மட்டும் சொன்னார் ஐயா நெடுமாறன்.
« PREV
NEXT »

No comments