Latest News

January 15, 2014

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் விடுதலைக்கான கவனயீர்ப்புப் போராட்டம் - பிரித்தானியா
by admin - 0



அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் விடுதலைக்கான கவனயீர்ப்புப் போராட்டம் - பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் சில ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது.

ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இவர்கள் அவுஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியவர்கள் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரத் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுள் சிலரின் தடுப்புக்காலம் ஐந்துவருடங்களை எட்டியுள்ளது.
மேற்குறிப்பிட்டவர்களுள் குழந்தைகளோடு அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த தாய் உட்பட, குடும்பச் சுமையுள்ள குடும்பத்தலைவர்கள் பலர் அடங்குகின்றனர். இவர்களிற் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் விரக்தியேற்பட்டுக் காணப்படுகின்றனர். சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.

தமது விடுதலைக்காக உண்ணா நோன்புப் போராட்டத்தை தனிப்படவும், கூட்டாகவும் பலமுறை நடாத்தியும்கூட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கரிசனையைப் பெற முடியவில்லை. சட்ட உதவிகளைப் பெற முடியாதபடி இவர்களின் விடயத்தில் நீதித்துறை முடக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு ஆயிரக்கணக்கில் பல நாடுகளிலிருந்தும் அகதிகள் வரும்போது ஈழத்தமிழர்களைக் குறிவைத்து இந்த ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற பதாகையின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தமிழர்கள் மத்தியில் கடும் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.
"ஈழத் தமிழர்களை இவ்வாறான உருப்படியற்ற காரணிகளை காரணம் காட்டி நீண்ட காலத் தடுப்புக் காவலில் வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரான ஒரு செயற்ப்பாடு" என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளரும் ஆஸ்திரேலியாவின் பிரபல ஊடகவியலாளருமான றேவோர் கிராண்ட் தெரிவிக்கிறார்.

தமிழர்களைக் குறிவைத்து நடாத்தப்படும் இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்தத் தமிழினத்தாலும் எதிர்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அவ்வகையில் இந்த அகதிகளின் விடுதலைக்காக நடைபெறும் தொடர் போராட்டங்கள் தனியே அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் பரவலாக நடாத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.

எதிர்வரும் 20ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 4.30மணிக்கு லண்டனில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு எதிர்காலத்தைத் தொலைத்து அவுஸ்திரேலியக் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் இந்த அகதிகள் தமது வாழ்வில் வெளிச்சத்தைக் காண உழைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா
தமிழர் ஒருகிணைப்பு குழு - பிரித்தானியா
தமிழ் ஒருங்கமைப்பு (Tamil Solidarity) - பிரித்தானியா

நன்றி
« PREV
NEXT »

No comments