Latest News

January 08, 2014

மன்னார் புதைகுழியில் நேற்றும் 6 எச்சங்கள்; ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார்
by admin - 0

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.   குறித்த இடத்துக்கு நேற்று நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் இந்தத் தகவலை நேற்று மாலை  தெரிவித்தார்.   இவற்றுடன் இதுவரை 32 மனித மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மண்டையோடுகளில் நான்கு மண்டையோடுகள் சிறியதாக இருப்பதால் அவை சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று அவற்றை நேரில் பார்வையிட்ட மன்னார் ஆயர் தெரிவித்தார்.   


மீட்கப்பட்டு வரும் எலும்புக் கூடுகள் தமிழர்களுடையவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், எனவே, இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தினால் தான் நடந்த அட்டூழியங்கள் வெளியில் வரும் என்றும் மன்னார் ஆயர் மேலும் தெரிவித்தார்.    இதேவேளை, இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் புதைகுழியைத் தோண்டும் பணி இடம்பெறமாட்டாது என்று மன்னார் நீதிவான் அறிவித்துள்ளார்.    நேற்றுப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் காலையிலிருந்து மாலை வரை மன்னார் நீதிவான், விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றன. இதன் போது 6 முழுமையான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.   கடந்த டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிதண்ணீர் விநியோகத்துக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து 4 எலும்புக்கூடு எச்சங்கள் மீட்கப்பட்டன.    இதனையடுத்து மன்னார் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு மறுநாள் புதை குழியைத் தோண்டும் பணிகள் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டன.   இதன்போது 21 ஆம் திகதி 2 மனித எச்சங்களும், 22 ஆம் திகதி 5 மனித மண்டையோடுகளும் எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தோண்டும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.   மீளவும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அன்றும் 4 மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன. அடுத்த நாளும் மூன்று மண்டையோடுகள் எலும்பு எச்சங்கள், சிறுவர்களின் பற்கள் என்பன மீட்கப்பட்டன.  

  இதன் பின்னர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை புதை குழியைத் தோண்டும் பணி ஆரம்பமானது. இதன்போது ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவர் ஒருவரின் எலும்புக் கூடு உட்பட 8 மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டன.    குறித்த மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமையும் மழைக்கு மத்தியிலும் தோண்டும் பணி இடம்பெற்றது. இதன்போதே 6 முழுமையான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.   இதன்படி கடந்த 20 ஆம் திகதியில் இருந்து நேற்று வரைக்கும் 32 மண்டையோடுகளும் மனித எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, மனிதப் புதை குழியைத் தோண்டும் பணி இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் இடம் பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   தைப்பொங்கலுக்காகவே புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றும், எதிர்வரும் 16 ஆம் திகதி காலையிலிருந்து குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் தெரிவித்தா.
« PREV
NEXT »

No comments