வடக்கில் யுத்தம் நிறைவுக்கு வந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்தும் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியான போட்டாபோட்டிகள் இறுதியில் மறைமுகமான வன்முறைகளுக்கு வழிவகுக்கின்றதா என்ற ஐயப்பாடும் இருக்கவே செய்கின்றது. அண்மைக் காலமாக வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் வீடுகள் இனந் தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அவர்கள் மிகுந்த பீதிக்கு மத்தியிலேயே தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி.சிறீரஞ்சனின் வீட்டுக்குள் கடந்த புதன்கிழமை நுழைந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் வீட்டை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த பொருட்களை தீயிட்டுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகமும் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, யாழ். திருநெல் வேலியில் அமைந்துள்ள வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கர நேசனின் வீட்டின் மீது கடந்த வியாழனன்று அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் வீட்டின் முன்பக்கக் கண்ணாடிகள் நொறுங்கிப் போனதாகவும், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இவ்வாறு தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று வடமராட்சியில் கரவெட்டி பிரதேச தலைவர் பொ.வியாகேசு, வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் சதீஸ் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்” என்ற பதம் கடந்த யுத்த காலத்திலேயே ஊடகங்களில் அடிக்கடி பாவிக்கப்பட்டு வந்தன. யுத்தம் முடிவடைந்த கையோடு அதுவும் முடிவுக்கு வந்தது. எனினும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் மீண்டும் வடக்கில் இனந்தெரியாத நபர்களின் பிரசன்னம், சட்டம் ஒழுங்கைப் பாதிப்பதற்கு அப்பால், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களுக்குப் பெரும் சவாலைத் தோற்றுவித்துள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறே தாக்குதல் சம்பவங்கள் தொடருமானால், மக்கள் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கை இழந்து விடுவதுடன் மிகுந்த விரக்திக்கும் ஆளாக நேரும் என்பதே யதார்த்தமாகும்.
யுத்தத்திற்குப் பின்னரான இன்றைய சூழ்நிலையில் வடமாகாணத்தின் சிவில் நிர்வாகம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சர்வதேசமும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. இந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான எத்தகைய சம்பவங்கள் இடம் பெற்றாலும் அது பாரிய விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானதாகவே இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இது ஒரு புறமிருக்க வடமாகாண சபையின் சீரான இயக்கத்திற்கு அரசாங்கமும் வடமாகாண சபையின் உறுப்பினர்களும் விட்டுக் கொடுப்புகளுக்கு மத்தியில் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. எந்தத் தரப்பும் ஒன்றுக்கொன்று மாறாகவும் ஏட்டிக்குப் போட்டியாகவும் நடக்கும் பட்சத்தில் அது பொதுமக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
தற்போதைய சூழ்நிலையில் வட மாகாண சபைக்கும் அரச தரப்புக்குமிடையில் ஒரு வித முறுகல் நிலை தோன்றியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரப் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றபோது அதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வை சிதைக்க சதி நடப்பதாக விசனம் தெரிவித்திருந்தார். அத்துடன் அரசாங்கம் போதிய அதிகாரப் பகிர்வை வழங்குவதாக அறிவித்திருக்கின்ற போதிலும் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலரும் அலுவலர்கள் சிலரும் வடமாகாண சபையை இயங்கவிடாமல் முடக்க முயற்சிப்பதாகவும் அவர் கடுமையாக சாடியிருந்தார்.
இதேவேளை, மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனையும் உறுதிப்படுத்தும் தேவைப்பாடு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உள்ளது என்பதை அறிவுறுத்தும் வகையில் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் இரண்டில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாமல் இருந்ததையடுத்து ஜனாதிபதி இவ்வாறான அறிவித்தலை வழங்கியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஹிந்த சிந்தனையை முன்வைத்து வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். மஹிந்த சிந்தனை என்ற தனிப்பட்ட ஒருவருடைய சிந்தனையையும் செயற்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற தேவை எங்களுக்குக் கிடையாது என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அத்துடன், வடமாகாண சபைகளின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. ஏனெனில் எம்மால் செயற்பட முடியாதவாறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநரின் அனுமதியின்றி செயற்பட முடியாது என அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுவதே இந்த முட்டுக்கட்டைக்கான பிரதான காரணமாகும். அதாவது, இந்த அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை காலம் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழேயே செயற்பட்டு வந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுவே வடமாகாண சபையின் சீரான செயற்பாடுகளுக்கு ஒருபுறம் பாரிய முட்டுக்கட்டைகளையும் அதேவேளை, ஒருவித முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் சபையில் கடந்த திங்களன்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண அதிகாரம் முதலமைச்சருக்கா அல்லது ஆளுநருக்கா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் தருணம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வடமாகாண சபை நிர்வாகம் சீராக அமைய வேண்டுமானால் அதற்கு மத்திய அரசு பரிபூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் வடமாகாண சபை நெருக்கடிகளை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாது. அந்த வகையில் புதிதாக அமைக்கப்பட்ட வடமாகாண சபை தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது.
புதிதாக அமைக்கப்பட்ட வட மாகாண சபை நிர்வாகத்தை சீரான முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதற்கான அரசியல் கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
இருந்தபோதிலும், மாகாண நிர்வாகங்களுக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பில் தன்னிச்சையான முடிவுகளை ஆளுநர் மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டி வருகின்றது.
ஒரு வகையில் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மாகாண சபை நிர்வாகத்தில் இழுபறி நிலை தோன்றியுள்ளதையே வெட்ட வெளிச்சமாகக் காண முடிகின்றது.
இது ஒரு புறமிருக்க குறுகிய காலத்தில் மாகாண அமைச்சின் செயலாளர்கள் திடீர் திடீரென மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வடமாகாண போக்குவரத்து, வர்த்தக, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெனீஸ்வரனின் செயலாளர் அமைச்சருக்குத் தெரியாமலேயே மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் முதலமைச்சரின் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய திடீர் மாற்றங்கள் நிர்வாக ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளதாக கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரு வகையில் வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் இத்தகைய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
குறிப்பாக, கூட்டமைப்பினரும் தமது தேர்தல் பிரசாரத்தின் மூலம் ஆளுநர் மாற்றப்பட்டு சிவில் அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த விதமான நெருக்கடியின் பின்னணியில் வடமாகாண சபை தொடர்பில் உருவாகியுள்ள சர்ச்சை புதிய விடயமோ, வியப்புக்குரிய விவகாரமோ அல்ல என்று கருதலாம். எவ்வாறிருந்தபோதிலும், வடமாகாண சபை தனது செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும்.
புதிய வடமாகாண சபை சீராக செயற்பட முடியாது போகும் பட்சத்தில் அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தின் மீது பழியைப் போட முனைவார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
வடமாகாண சபையை சீராக இயங்கச் செய்வதன் மூலமே வட பகுதி மக்களின் பிரச்சினைக்கு முடிவு காண்பது மாத்திரமன்றி யுத்த வடுக்களையும் ஆற்றக் கூடியதாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் மறந்து போகக் கூடாது. மாறாக வட மாகாண சபையின் இயக்கத்திற்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்கள் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை மறுபுறம் நியாயப்படுத்துவதாகவும் அமைந்து விடும்.
வட மாகாண சபை எத்தகைய நெருக்கடிகளை எதிர்நோக்கினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பது காலத்தின் கடப்பாடாகும்.
No comments
Post a Comment