இந்தியாவே மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்பதே தமிழக மக்களின் கோரிக்கை ஆனால் அதை பிரதமர் கண்டுகொள்ளவில்லை
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் அதிகப்பட்சம் பங்கேற்க மாட்டார் என்றே டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. தமிழக மக்களின் உணர்வு மற்றும் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றது போல் காட்ட பிரதமர் பங்கேற்கவில்லை என்றும், அதேநேரத்தில் காமன்வெல்த் நாடுகளின் நட்பு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய வெளியுறவு துறை அமைச்சசர் சல்மான் குர்ஷித்தை அனுப்பி வைக்கவும் காங்., உயர்மட்டக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநாடு துவங்கும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சரவை மற்றும் காங்., உயர் மட்டக்குழு கூடி, கூடி விவாதித்தாலும் எவ்வித முடிவும் ரகசியமாகவே வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்றும் பிரதமரிடம் இது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி பிரதமருக்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மண்ணில் வரும் 14 ம் தேதி நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். குறிப்பாக தமிழக சட்டசபையில் , கடந்த 24 ம் தேதி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் இலங்கை செல்லக்கூடாது,இதன் மூலம் இலங்கை அரசு செய்த தவறை உலக நாடுகளுக்கு தெரிவிக்க வாய்ப்பாக அமையும் என்றும் பெயரளவில் கூட யாரும் பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் ஜெ., முன்மொழிந்தார். சபையில் அனைத்து கட்சியினர் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க, தரப்பில் நேற்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி; பிரதமருக்கு மனசாட்சி உண்டு. அவர் மனசாட்சி படி நடந்து கொண்டால் போதும். பிரதமரோ வேறு நபரோ இலங்கையில் பங்கேற்க கூடாது என்றார்
தமிழக அமைச்சர்கள்
வலியுறுத்தல் : தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த வாரத்தில் பிரதமரை சந்தித்து தமிழக மக்களின் எதிர்ப்பை எடுத்துரைத்தார். சந்திப்பிற்கு பின்னர் , பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என தாம் நம்புவதாக வாசன் நிருபர்களிடம் தெரிவித்தார். ஜெயந்தி நடராஜன், சந்திக்க போவதாகவும், கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். புதுச்சேரியை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி தமிழக மக்கள் நிலையை பிரதமரிடம் எடுத்து கூறியிருந்தார். இதனையடுத்து இம்மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்திருப்பதன் மூலம் பெரும் அளவிலான எதிர்ப்பு விமர்சன கணையில் இருந்து பிரதமர் தப்பியுள்ளார். ஆனாலும் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்வது என்பதற்கு அரசியல் மற்றும்சர்வதேச ரீதியிலான காரணங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படும்.
மன்மோகன்சிங் 2 முறை : கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் நடந்த 10 மாநாட்டில் 5 முறை இந்திய பிரதமர்கள் பங்கேற்றுள்ளனர். இது வரை எந்தவொரு பிரதமரும் 2முறைக்கு மேல் இந்த மாநாட்டில் பங்கேற்றதில்லை. மன்மோகன்சிங் 2 முறை ( உகாண்டா, டிரினிடாட் ) பங்கேற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இது தொடர்பாக வெளியுறவு துறை செயலர் அக்பரூதீன் கூறுகையில்: இந்த மாநாடு தொடர்பாக அழைப்பிதழ் வந்தது முதல் யார் பங்கேற்பது என்பது குறித்த விவாதம் துவங்கி நடந்து வருகிறது. அமைச்சகம் சார்பில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. காமன்வெல்த் மாநாட்டை பொறுத்தவரை 2 முறை பிரதமர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். சர்வதேச அரசியல் நிலையை முன்வைத்து முடிவுகள் எடுக்கப்படும். பிரதமர் பயணம் குறித்து இவர் திட்டவட்டமான கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.ஏறக்குறைய தமிழர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம் என்பதால் பிரதமர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments
Post a Comment