Latest News

November 26, 2013

கொக்குத் தொடுவாயில் உச்சக்கட்ட நிலக் கொள்ளை: ஆதாரங்களோடு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ரவிகரன் (Photos)
by admin - 0

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 km தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதேச மக்களின் தகவலை அடுத்து இன்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிவிட்டு சிவலோகேஸ்வரன் உள்ளிட்ட மக்களில் சிலருடன் இன்று மாலை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரன் , அங்கு இடம்பெறும் நில அபகரிப்பை நேரில் அவதானித்தார்.
சம்பவ இடத்திற்கு ரவிகரன் சென்றபோது, இரண்டு கொட்டில்களில் இருந்த சிங்களவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இக்காடழிப்பு தொடர்பில் அவர்களிடம் நேரில் அவர் விசாரித்தார்.
இதன் போது அவர்கள் பயந்த சுபாவத்தோடு , தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் காடு அழிப்பதாகவும் , மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது நடைபெறுவதாகவும் இத்திட்டத்தில் 22 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மாங்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடவேண்டிய மாங்கன்றுகளை தாம் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தங்களின் முதலாளி வேலைக்கு அமர்த்தியதால் இதைச் செய்கிறோம் என்றும் கூறினர். இதையடுத்து ரவிகரன், காடழிப்பு நடைபெறும் பகுதியை முற்றாக ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்தார்.
இதே வேளை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனை இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் பயணம் நெடுகிலும் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரவிகரன் அவரிடம் எதற்காக என்னைப் பின்தொடர்கிறீர்கள்? என்று கேட்டார். ஒருவாறாக சமாளித்துக்கொண்டு தன்னை ராணுவப் புலனாய்வாளர் என அவர் அறிமுகப்படுத்த, பதிலளித்த ரவிகரன் ” இங்கு இடம்பெறும் மோசமான நிலக்கொள்ளையை உலகறியச் செய்யவே நான் வந்துள்ளேன். நாளை விபரமாக ஊடகங்களில் இது வெளிவரும். ஆகவே என்னைப் பின் தொடர வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை” என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.
பின்னர் இந்த நில அபகரிப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ரவிகரன்,
“இங்கு எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்துக் கொடுப்பது , ஒரு புறம் நடைபெறுகையில் , மறுபுறம் தோட்டச் செய்கை எனும் பெயரில் தற்போது சுமார் 600 ஏக்கர் நிலம் இப்போது அபகரிக்கப்படுகிறது. எம் மக்கள் எங்களின் பூர்வீக நிலத்தில் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலையில், எங்கள் தாயகத்தில் சிங்களவர்களுக்கு குடியிருப்புக்கள், தோட்டச் செய்கைகள் என்கிற பெயரில் நிலம் வழங்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட நிலக்கொள்ளையாகும். தமிழரின் தாயகமான வடகிழக்கை நிரந்தரமாக துண்டாடும் நோக்கிலேயே வடக்கை கிழக்குடன் இணைக்கிற முல்லைத்தீவில் இவ்வாறு நிலம் கொள்ளையடிக்கப்படுகிறது. யார் நிலத்தை யார் , யாருக்கு தாரை வார்ப்பது? இம்மண்ணின் காவலர்கள் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.





« PREV
NEXT »

No comments