Latest News

November 18, 2013

இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது - ராஜபட்ச
by Unknown - 0

போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்தை இலங்கை அதிபர் ராஜபட்ச மீண்டும் நிராகரித்தார். இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனையொட்டி கொழும்பில் செய்தியாளர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், போர்க் குற்றங்கள் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட வேண்டும்; இல்லையெனில் சர்வதேச விசாரணையை பிரிட்டன் வலியுறுத்தும் என்றும் அந்த நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளது குறித்து கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு ராஜபட்ச பதில் அளிக்கையில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் இந்த கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவிகரமாக இருந்தால் வரவேற்போம். ஆனால், எங்களுக்கு யாரும் கட்டளையிடமுடியாது என்று உறுதிபட தெரிவித்தார்.

பிளவுபடுத்த வேண்டாம்: அவர் மேலும் கூறியதாவது; “எங்களது கருத்துகளுக்கு மதிப்பு கொடுங்கள். எங்கள் செயலுக்கு உறுதுணையாக இருங்கள். ஆனால் சமூகத்துக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம். (டேவிட் கேமரூனை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

என்மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். என்னுடைய மக்களுக்கு நானே பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போர்க் குற்றங்கள் தொடர்பாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற குழுவை அமைத்திருக்கிறோம். அந்தக் குழுவில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

கால அவகாசம்: மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு, கால அளவை நிர்ணயிக்க கூடாது. எங்கள் நாட்டிற்கு என்று சட்ட அமைப்பு மற்றும் அரசியலமைப்பு உள்ளது.

ஏற்கெனவே மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிவடைய காலமாகும். மேலும், வடக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி, தெற்குப் பகுதி மக்களின் மனநிலையையும் நாங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.

அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். ஆனால் இதனை ஒரு வாரம் அல்லது மூன்று அல்லது நான்கு வாரங்களில் செய்ய வேண்டும் என்று என்னை நீங்கள் நிர்பந்திக்கக்கூடாது.

காமன்வெல்த்தை மதிக்கிறேன்: காமன்வெல்த் அமைப்பு மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். மனித உரிமை, பத்திரிகை சுதந்திரம் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். அதன்காரணமாகத்தான், வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தினோம்.

எங்கள் நாட்டிற்கு என்று நாடாளுமன்றம் உள்ளது. அதன்மூலம் அமைக்கப்பட்ட குழுவிடம், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி மக்களை கேட்டு இருக்கிறோம். என்னால் தனியாக இதனை செய்ய முடியாது’ என்றும் தெரிவித்தார் ராஜபட்ச.

பத்திரிகையாளர் குற்றச்சாட்டு: கொழும்புவுக்கு காமன்வெல்த் மாநாடு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று ராஜபட்ச பேட்டி அளித்தபோது, போர்க் குற்றம் குறித்து மட்டும் கேள்விகளை எழுப்பினர். இதனால், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அதுகுறித்து கேள்விகளை கேட்காமல், காமன்வெல்த் மாநாடு குறித்து மட்டும் கேள்விகளை கேட்கும்படி காமன்வெல்த் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த பத்திரிகையாளர் ஓருவர், இலங்கைக்கு எதிராக காமன்வெல்த் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். காமன்வெல்த் மாநாட்டில் கவனம் செலுத்தாமல், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இலங்கையின் வடபகுதிக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த காமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா, காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த தலைவர்களுக்கு இலங்கையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனாலேயே கேமரூன் இலங்கையின் வடபகுதிக்கு சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.
« PREV
NEXT »

No comments