Latest News

October 19, 2013

வடக்கு அரச அதிகாரிகள் சுதந்திரமாக பேசுகிறார்கள்; வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் பெருமிதம்
by admin - 0

அரச அதிகாரிகள் சுதந்திரமாகத் தமது கன்னிப் பேச்சுக்களை இன்று பேசியிருக்கின்றார்கள். காலமும் மாறியிருக்கின்றது. ஆட்சியும் மாறியிருக்கின்றது. சகல அரச அதிகாரிகளும் சுதந்திரமாக இனிச் செயற்படலாம் என்று மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். வலி.மேற்கு பிரதேச சபையின் கலாசார மண்டபம் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. வழக்கம்பரை முத்துமாரி அம் மன் ஆலயத்தில் இருந்து மதியம் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, விருந்தினர்கள் தமிழர் பண்பாட்டு மரபுக்கு அமைய திறப்பு விழா மண்டபத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், இ.சிறீதரன் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி அமைச் சர் த.குருகுலராஜா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்களுடன் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் சபைச் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சபைக் கட்டடத்தின் முன்னால் அமைக்கப்பட்ட தமிழ் தாய் சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆசியுரை வழங்கிய நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும், தென்னிந்திய திருச்சபையின் போதகர், இன்று இருப்பதைப் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், எமது இலட்சியத்தை எட்டும் வரை அது தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தமிழர்கள் வீழ்ந்து விடவில்லை என்றும், "பீனிக்ஸ்' பறவைகள் போல மீண்டும் தங்கள் வாக்குகளால் எழுந்து நிற்கிறார்கள் என்றும், அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதி நிதிகள் தேசியத்தின் பால் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தனது உரையில் கடந்த 21 ஆம் திகதிக்கு முன்னரான நிலைமையில் இருந்திருந்தால், இன்று நாம் நிகழ்வுக்கு வந்ததைக் கண்டதும் அரச அதிகாரிகள் ஓட்டமெடுத்திருப்பர் என்றும் குறிப்பிட்டார். மாகாண சபை உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது உரையில், தமிழ் மக்களின் விடிவு நோக்கிய பயணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 30 பேரும் ஒன்றாகச் செயற்படுவோம் என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தனது உரையில், 13ஆவது திருத்தம் எங்களுக்கான தீர்வில்லை என்பதைச் சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான் 13ஆவது திருத்தத்தை தாண்டிய தீர்வை அவர்கள் வலியுறுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments