கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மற்றும் முல்லைத்தீவு தேராவில் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் திடீரென படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்றுமுன்தினம் பிற்பகலில் இருந்து குறித்த துயிலும் இல்லங்களைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு அங்கு படைமுகாம்களை அமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையில் இந்த மாத அமர்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் துப்புரவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆயினும் குறித்த தீர்மா னத்தின்படி சிரமதானம் செய்யச் சென்ற போது மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டிருந்ததால் பெரும் பதற்றநிலை தோன்றியிருந்தது. இதனால் குறித்த சிரமதான முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இதனையடுத்தே நேற்று முன்தினம் முதல் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் கனரக வாகனங்கள் மூலம் நூற்றுக்கணக்கான படையினர் கொண்டுவரப்பட்டு, குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய மூன்று மாவீரர் துயிலும் இல்லங்களைச் சுற்றிவர முட்கம்பியால் உடனடியாகவே பாதுகாப்பு வேலி படையினர் அமைத்துள்ளனர்.
கனரக வாகனங்கள் மூலம் மாவீரர் துயிலும் இல்லப் பகுதிகளை துப்புரவு செய்யும் படையினர் அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். படை தளங்களை உருவாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தினர் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம், கோப்பாய், எல்லங்குளம் போன்ற மாவீரர் துயிலும் இல்லங்களும் படைத் தளங்கள் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் 1996 இலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் 1990 இலும் விசுவமடு, தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் 1997 இலும் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, அங்கு போராளிகளின் வித்துடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்தன.
இறுதிப் போரின் பின்னர் இந்தத் துயிலும் இல்லங்களில் இருந்து போராளிகளின் கல்லறைகளை படையினர் கனகரக வாகனங்கள் மூலம் கிளறி அகற்றி இருந்தனர்.
தற்போது மாவீரர் தினம் நெருங்கும் சூழ்நிலையில் இந்த மாவீரர் துயிலும் இல்லங்களை படைத்தளங்களாக மாற்ற இராணுவத்தினர் எடுத்துள்ள நடவடிக்கையால் ஒரு பதற்றமான சூழல் வன்னிப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
No comments
Post a Comment