இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எந்தவொரு சர்வதேச விசாரணைக்கும் ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பல ஆயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அக்கறை காட்டாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம் தனது சொந்த விசாரணைகள் சுயாதீனமாக நடப்பதாக கூறிவருகிறது.
இலங்கை மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையென்று சுட்டிக்காட்டி, இலங்கையில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டை அரசு தலைவர்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் சர்வதேச மட்டத்தில் பலமாக ஒலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்
இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து,பின்னர் தகவல்கள் ஏதும் தெரியாதுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேர் தொடர்பான விசாரணைகள் வரும் டிசம்பர் மாதம் 2ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களைப் பரிசீலனை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி, அவர்கள் தொடர்பான சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றிருப்பதனால், அதுகுறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, இந்த வழக்குகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதார்கள் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், இந்த விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி, டிசம்பர் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இந்த விசாரணகைள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு நீதவான் எம்.கணேசராஜா, இந்த விசாரணைகள் டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது நீதிமன்றத்தில் அரச தரப்பபில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இந்த விசாரணைகளின்போது இராணுவத்தினர் சார்பில் ஆஜராகுவதற்கென, சட்டமா அதிபர் விசேடமாக ஓரு சட்டத்தரணியை அனுப்பி வைக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment