Latest News

October 08, 2013

கூட்டமைப்பின் வெற்றியால் இந்தியாவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு - சல்மான் குர்ஷித் தெரிவிப்பு
by Unknown - 0

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அளித்த மிகப் பெரிய ஆதரவு அளித்தமையால் இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நேற்று கொழும்பில் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பு சினமன் கிரான்ட் விடுதியில் நடந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ள பாரிய வெற்றிக்கு, இந்தியாவின் சார்பில், சல்மான் குர்ஷித் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கு மாகாண மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கொடுத்துள்ள இந்தப் பாரிய வெற்றி, இந்தியாவுக்கு அரசியல் ரீதியில் பாரிய அழுத்தங்கள் பலவற்றை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இலங்கை தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா பங்களிப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றிருப்பது முதற்படி மாத்திரமே என்றும், இத்துடன் எதுவும் முடிந்து விடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். -
« PREV
NEXT »

No comments