Latest News

October 07, 2013

உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதி!
by Unknown - 0

இலங்கையில் கொமன்வெல்த் எதிர்ப்பியக்கம் சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் தோழர் தியாகு ஈடுபட்டு வந்தார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன. அந்தவகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், த.தே.பொ.க. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.முருகன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள், இதில் பங்கேற்றனர்.

போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

“இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே! ”என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

thozhar_thiyaku_001


thozhar_thiyaku_002


thozhar_thiyaku_003


thozhar_thiyaku_005

« PREV
NEXT »

No comments