Latest News

October 23, 2013

அமெரிக்க கப்பல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் : தலைமை பாதுகாவலர் இலங்கையில் தங்கிய மர்மம்
by admin - 0

துத்துக்குடி:அமெரிக்க கப்பலான சீமேன்கார்டு ஓகியோ கப்பலின் தலைமை பாதுகாவலரான இங்கிலாந்தை சேர்ந்த பால்டேவிட் டெம்ப் டவர், கொச்சியில் நிலை கொண்டிருந்த கப்பலுக்கு வருவதற்கு முன் 10 நாட்கள் இலங்கையில் உள்ள கொழும்புவில் தங்கியிருந்துள்ளார். இது குறித்து கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 35 பேர் கைது: தூத்துக்குடி கடல் பகுதியில் அமெரிக்காவின் அட்வென் போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலை கடலோர காவல்படையின் அக்., 12 ல் பிடித்து மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து கப்பலில் ஆயுதங்கள் இருந்ததால் கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கியூ பிரிவு போலீசார் இரு நாட்கள் கப்பலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின் கப்பலில் இருந்த 35 துப்பாக்கிகள், 5,680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின் கப்பலில் இருந்த 35 பேரையும் கைது செய்தனர். கப்பலுக்கு சட்ட விரோதமாக டீசல், காய்கறி சப்ளை செய்த தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கியூ பிரிவு போலீசார் விசாரணையில் புதிய தகவல்கள்: கப்பலில் பாதுகாப்பு தலைமை அதிகாரியான இங்கிலாந்து நாட்டைசேர்ந்த சர்ச் பார்க் பகுதியை சேர்ந்த பால்டேவிட் டெம்ப் டவர், 50. இவர் கப்பலில் உள்ள பாதுகாவல் பணியில் இருந்த 25 பேரில் தலைமை அதிகாரியாவார். இவர் தான் யார், யாருக்கு எந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என தீர்மானிப்பவர். ஆக., 28 ல் சீமேன் கார்டு ஓகியோ கப்பல் கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. அப்போது கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பாது காவலர்கள் 25 பேரும் இல்லை. கப்பல் கேப்டன் உட்பட 10 மாலுமிகள் மட்டுமே கப்பலில் இருந்துள்ளனர். கொழும்புவில் தங்கியதன் மர்ம பின்னணி என்ன? தனியார் பாதுகாப்பு கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். விடுமுறை முடிந்து கப்பலில் பணிக்கு திரும்பும் போது ஒரு நாளுக்கு முன்னதாக அருகில் உள்ள நாடுகளுக்கு வந்து கப்பலில் ஏறிக்கொள்வது வழக்கம். விடுமுறையில் சென்ற பால்டேவிட் டெம்ப் டவர் பணிக்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கு வந்துள்ளார். அங்கு கொழும்புவில் தங்கியுள்ளார். அதன் பின்னர் இலங்கையில் இருந்து ஷார்ஜா நாட்டு கப்பல் மூலம் நடுக்கடலில் வந்து இருந்த சீமேன் கார்டு ஓகியோ கப்பலுக்கு செப்., 30 ம் தேதி வந்துள்ளார், என தெரியவந்துள்ளது.எங்கிருந்து வந்தன ஆயுதங்கள்? பால் டேவிட் டெம்ப் டவர் இலங்கையில் இருந்து வரும் போது பாதுகாவலர்களை அழைத்துக்கொண்டு, ஆயுதங்களுடன் வந்தாரா?அவர் மட்டும் தனியே வந்தாரா? அப்படி என்றால் மற்ற பாதுகாவலர்கள் கப்பலுக்கு எப்படி வந்தனர். ஆயுதங்கள் கப்பலுக்கு எப்படி வந்தது, இலங்கை அரசுக்கு இது தெரியுமா சட்ட விரோதமாக அங்கிருந்து வந்தனரா, 40 நாட்களுக்கும் மேலாக கடலில் கப்பல் நின்றிருந்த மர்மம் என்ன? இது போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. இது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். பால் டேவிட் டெம்ப் டவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இது போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். அதற்காகத்தான் கியூ பிரிவு போலீசார் போலீஸ் காவல் கேட்டு மனு செய்துள்ளனர். பால் டேவிட் டெம்ப் டவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வரலாம், என கியூ பிரிவு போலீசார் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments