இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையேற்படுமாயின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்டவாறு மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
பரிந்துரைகள் நடைமுறைக்கு வராமல் போனால் வலுவான சர்வதேச சமூகத்தின் விசாரணைகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு வழங்கிய செல்விலேயே நவனீதம்பிள்ளை இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
முன்னதாக ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்த அவர், வாய்மூல அறிக்கை ஊடாக, இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் தொடர்பான விசாரணைகள் பற்றி விபரித்திருந்தார்.
எனினும், நவனீதம்பிள்ளையின் வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால் ஆட்சேபிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆட்சேபனை தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலியின் ஊடகவிலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நவனீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கல் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு என்பது அவர்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணைக்குழுவினால் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை. அதன் காரணமாகவே, அது அமுல்படுத்தப்படவில்லை என்று நான் சபையின் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் குறுகிய தன்மையைக் கொண்டுள்ளதுடன், அது எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாக இல்லை. அவர்களது பரிந்துரைகள் கூட அமுல்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் எனது மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் மனிதவுரிமைகள் சபை சர்வதேச விசாரணைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என நவனீதம்பிள்ளை தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment