Latest News

October 01, 2013

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் நோட்டீஸ்க்கு எதிராக ஷிராணி வழக்கு தாக்கல்!!
by Unknown - 0

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நகர்வு மனுவொன்றை நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார். லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குவின் நோட்டீஸ்க்கு எதிராகவே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை வழக்கின் பிரதிவாதியான அவருக்கு தெரிவிக்காது, சாட்சிகள் கட்டளைச் சட்டத்தை மீறி வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் லதுஹெட்டி தெரிவித்தார்.
கொழும்பு பிரதான நீதிமன்றத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கணினி ஊடான சாட்சிகளை முன்வைப்பதாயின் அதுதொடர்பில் 40 நாட்களுக்கு முன்னரே சாட்சிகளுடன் வழக்கின் பிரதிவாதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
சாட்சிகள் கட்டளைச்சட்டத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருந்தாலும் வேறு வழக்குகளில் அவ்வாறு செய்யப்படுவதில்லையென தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாதியின்  சார்பில் ஆஜரான சட்டத்தரணி திலான் ரத்நாயக்க, குற்றச்சாட்டுகளை வசிக்கின்ற போது அவ்வாறு செய்யலாம் என்று எடுத்துரைத்ததுடன், சாட்சிகளின் பிரதியொன்றும் பிரதிவாதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இடைமறித்த ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் லதுஹெட்டி பிரதிவாதியின் நகர்வுமனுவின் மூலமாக எடுக்கப்படும் வழக்கில், குற்றச்சாட்டுகளை வாசிப்பதற்கு இடமில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் லதுஹெட்டியினால் முன்வைக்கப்பட்ட காரணங்களுக்கு எதிர்ப்புகளை நவம்பர் 14ம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு பணித்த பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டி வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
ஷிரானி குறித்த சர்வதேச விவாதத்தை தடுத்து நிறுத்திய நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பில் சர்வதேச ரீதியில் நடைபெறவிருந்த விவாதமொன்றை இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா தடுத்து நிறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் நீதவான்கள் வருடாந்தக் கூட்டத்தில் இந்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும், இதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
ஷிராணி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாக வெளிநாடொன்றின் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் பணி நீக்கம் செய்யப்பட்டமை அரசியல் அமைப்பிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்டமை குறித்து இலங்கை நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் விவாதம் நடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக ஷிராணி குறித்த விவாதம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
« PREV
NEXT »

No comments