Latest News

October 05, 2013

மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம்; நாட்டைவிட்டு வெளியேறினார் மாவை?
by admin - 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றியீட்டியிருந்தாலும் கூட்மைப்புக்குள் நிலவும் இழுபறி நிலையின் தொடராக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நாட்டை விட்டு அவசரமாக வெளியேறி இந்தியா சென்றிருப்பதாக தெரியவருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவி ஏற்கவேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீவிரமாக வலியுறுத்தி வந்திருந்த நிலையில் கூட்டமைப்பின் கடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் மாவை சேனாதிராஜாவும் ஏனைய கட்சி தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை தீவிரமாக எதிர்த்திருந்தனர்.
இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலும் இது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன் மற்றும் சுமந்திரன் ஆகியோரே சம்பந்தனுக்கு சார்பாக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தியிருக்கின்றனர்.
இதனிடையே முதலமைச்சர் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் மேற்கொள்வதில் மாற்றமில்லை என்பதை உணர்ந்த மாவை சேனாதிராஜா நேற்று இரவு அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குகொள்ளாமல் தவிர்க்கும் நோக்கிலேயே அவர் இந்தியா பயணமாகியிருப்பதாக தெரியவருகின்றது.
இதேவேளை, தனது நம்பிக்கைக்குரிய இளைய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த முன்னிலையில் பதவி ஏற்கும் விவகாரம் தொடர்பில் மௌனம் சாதித்தமை குறித்தும் மாவை சேனாதிராஜா கொழும்பின் மூத்த தமிழ் ஊடகர் ஒருவரிடம் மனம் வருந்தியதாகவும் தெரியவருகிறது.
« PREV
NEXT »

No comments