Latest News

September 11, 2013

வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
by admin - 0

நாட்டைத் துண்டாட எவரையும் அனுமதிக்க
மாட்டோம் என்று இலங்கை ஜனாதிபதி சூழுரைத்துள்ளார். ''ஐக்கிய இலங்கைக்குள்
ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின்
ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகள் வடபகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்
நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் கொண்டிருந்த கொள்கைகளையே தமிழ்த்தேசிய
கூட்டமைப்பினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
முன்வைத்திருக்கின்றார்கள். இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு பிரபாகரனுக்கு இடமளிக்காததைப் போன்று யாருக்கும்
இடமளிக்கப் போவதில்லை'' என்று வவுனியாவில் புதனன்று நடைபெற்ற
தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
தெரிவித்திருக்கின்றார். வடமாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள
தேர்தலையொட்டி இந்த மாகாணங்களின் பல இடங்களிலும் ஜனாதிபதி,
அரசாங்க கட்சி சார்பு வேட்பாளர்களை ஆதரித்து கூட்டங்களில்
பரப்புரை செய்து வருகின்றார். அந்த வகையில் வடமாகாணத்திற்கான
அவருடைய முதலாவது கூட்டம் வவுனியா வைரவப்புளியங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ''நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் தேர்தல்களை நடத்தி வரும்
அரசாங்கம், வடமாகாண சபைக்கான தேர்தலையும் நடத்துகின்றது. இங்குள்ள
மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுதவற்கு இதன் மூலம்
சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தேர்தல் மூலம்
ஜனநாயகத்தை நிலைநிறுத்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன்
ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். அந்த வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத் தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று அவர் கேட்டுள்ளார். ஐதேகவின் தேர்தல் பிரச்சாரம் இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்
வடமாகாண சபைத் தேர்தலில்
போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல்
பரப்புரை செய்வதற்காக
வவுனியாவுக்கு வருகை தந்திருந்த அந்தக்
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் அபிவிருத்தி பற்றி பெரிய அளவில் பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றார். ''அரச தரப்பினர் தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே, வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று பாடுபட்டது என குறிப்பிட்டதுடன், ஐக்கிய தேசிய
கட்சியினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்
என்று சர்வதேசம் உட்பட பலரும் நம்புகின்றார்கள். எனவே இந்தத் தேர்தலில் வடக்கு மக்கள் தமது கட்சியையே ஆதரித்து வாக்களிக்க வேண்டும்'' என
கேட்டுக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டம் வவுனியா மதகுவைத்தகுளத்தில் நடைபெற்றது. இதேவேளை, வவுனியா செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய
இரண்டு இடங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த
தேர்தல் பரப்புரை கூட்டங்கள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. இந்தக்
கூட்டங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்,
வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட
முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
« PREV
NEXT »

No comments