Latest News

September 16, 2013

இளம் தென்னைகளுக்கான உரமிடும் முறை
by admin - 0

தென்னைமரம் காய்க்க ஆரம்பித்தபின் உரமிட்டால் போதும், அதற்கு முன்னால் இளம் தென்னைகளுக்கு உரமிடத் தேவையில்லை என்று பலர் எண்ணுகிறார்கள். இது தவறு. இளம் தென்னைகள் வீரியமாக வளர்ந்து, விரைவில் காய்க்க ஆரம்பிப்பதற்கு இளம் தென்னைகளுக்கு தவறாமல் உரமிட வேண்டும்.

கன்று நட்ட முதல் வருடம் முதல் உரமிட்ட, வீரிய ஒட்டு தென்னை ரகங்கள் 8வது ஆண்டில் பாளை விட்டன. நெட்டை ரகத் தென்னைகள் 9வது ஆண்டில் பாளைவிட்டன. உரமிடாத தென்னைகளில் பாதித் தென்னைகள் 10 வருடங்கள் முடிந்த பின்னரும் பாளை விடவில்லை. எனவே கன்று நட்ட முதல் வருடம் முதல் தென்னைகளுக்கு உரமிட வேண்டும்.

கன்று நட்ட முதலாம் ஆண்டில் தென்னைக்கு சிபாரிசு செய்யப்பட்ட  முழு அளவு உரங்களில் கால் பங்கு உரங்களையும் இரண்டாவது ஆண்டில் அரைப்பங்கு உரங்களையும், மூன்றாவது ஆண்டில் முக்கால் பங்கு உரங்களையும், நான்காவது ஆண்டில் முழுப்பங்கு உரங்களையும் போட்டுவர வேண்டும். நான்காம் ஆண்டு தென்னைக்கு சிபாரிசு செய்யப்பட்ட  முழு அளவு உரங்களை வருடந்தோறும் தவறாமல் போட்டுவர வேண்டும். 

இளம் தென்னையின் வயதுக்கேற்ற அளவில் வட்டப் பாத்திகள் அமைத்து உரமிட வேண்டும். ஒரு வருட வயதுள்ள தென்னைக்கு 60 செ.மீ. ஆரமுள்ள வட்டப் பாத்தி அமைக்க வேண்டும். வருடா வருடம் வட்டப்பாத்தியின் ஆரத்தை 30 செ.மீ. அளவில் அதிகரிக்க வேண்டும். அதாவது இரண்டு வயதுடைய தென்னைக்கு 90 செ.மீ. ஆரம், மூன்று வயதுள்ள தென்னைக்கு 120 செ.மீ. ஆரம், நான்கு வயதுள்ள தென்னைக்கு 150 செ.மீ. ஆரம், ஐந்து வயதுள்ள தென்னைக்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தென்னைக்கும் 180 செ.மீ. ஆரம் உள்ள வட்டப்பாத்தி அமைத்து உரமிட வேண்டும்.

 இரசாயன உரங்களைப் பிரித்து இடவேண்டும்: 

ரசாயன உரங்கள் எளிதில் நீரில் கரையக்கூடியவை. எனவே மணற்பாங்கான நிலங்களிலும், அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களிலும்  ரசாயன உரங்கள் நீரில் கரைந்து வெளியேறிவிடக்கூடும். எனவே  ரசாயன உரங்களை மொத்தமாக ஒரே தடவையில் போடுவதற்குப் பதிலாக இரண்டு தவணைகளில் பிரித்தும் போடலாம். தென்னைக்கும் இடவேண்டிய  ரசாயன உரங்களைப் பிரித்து இரண்டு தவணைகளாக இடுவதால், அதிக தேங்காய்களும் அதிக கொப்பரைகளும் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  ரசாயன உரங்களைப் பிரித்து இடுவதால்தென்னையில் பெண் பூக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.  ரசாயன உரங்களைப் பிரித்துப் போடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் உள்ளன.

இரண்டாம் நிலை போசணைச் சத்துக்கள் இடுதல் (Secondary nutrients): 

தென்னைக்குத் தேவைப்படும் இரண்டாம் நிலை பெரும் போசணை மூலகங்களை இடுவதற்கு ஜிப்சம் (கால்சியம் சல்பேட்) மற்றும் மக்னீசியம் சல்பேட் உரங்கள்  சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த இரண்டு உரங்களையும் இடுவதால் தென்னைக்குத் தேவைப்படும் இரண்டாம் நிலை பெரும் போசணை மூலகங்களான சுண்ணாம்பு, மெக்னீசியம் மற்றும் கந்தகம் ஆகிய மூன்று சத்துக்களும் போதிய அளவில் கிடைத்துவிடுகின்றன. இந்த உரங்களை தென்னையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வட்டப் பாத்திகளில் சீராகத் தூவிவிட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்யப்பட்டுள்ள இளம் தென்னங்கன்றுகளுக்கு முதல் 5 வருடங்கள் வரை மேற்கண்ட அளவுகளில் உரங்களைப் போட்டுப் பாசனம் செய்து வரவேண்டும். இத்தகைய தென்னங்கன்றுகள் வீரியமாக வளர்ந்து விரைவில் பாளைவிட்டு காய்க்க ஆரம்பிக்கும்.
« PREV
NEXT »

No comments