இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் மூன்று பேர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இருந்து சென்று லண்டனில் நேற்றிரவு இறங்கிய விமானத்தில் இவர்கள் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
லண்டன் ஹித்ரோ விமான நிலையத்திற்கு சென்ற இவர்களை வரவேற்க லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் சிலர் சென்றிருந்தனர். இவர்கள் எந்த வகையான இரகசிய நடவடிக்கைக்காக லண்டன் சென்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை.
இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி ( ஆர்.டி.எப்) தற்போது எல்.ஆர்.ஆர்.பி என அழைக்கப்படுகிறது.
எதிரிகள் தமது இலக்கு நோக்கி வரும் வரை எப்படியான கஷ்டமான நிலைமையாக இருந்தாலும் ஒரே இடத்தில் காத்திருந்து எதிரியை இரகசியமான முறையில் கொலை செய்து விட்டு உயிருடன் திரும்பி செல்வது பற்றிய பயிற்சிகள் இந்த படையணிக்கு வழங்கப்படுகிறது.
இலங்கைக்கும் - இங்கிலாந்திற்கும் இடையில் யுத்தங்கள் எதுவும் நடக்கவில்லை. அத்துடன் இலங்கையில் நடைபெற்ற புலிகளுடனான போரும் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்து விட்டன. போர் நடைபெற்ற போது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் லண்டனில் வசித்து வந்தார். அவரை இலக்கு வைத்தும் அப்போது ஆழ ஊடுருவும் படையினர் அனுப்பி வைக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது எந்த காரணத்திற்கான ஆழ ஊடுருவும் படைக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. லண்டன் சென்றுள்ள இந்த படைக்குழுவுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமான தங்க விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டன் சென்றதாக தெரியவருகிறது.
No comments
Post a Comment