Latest News

September 13, 2013

ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரனின் வீரவணக்க நிகழ்வு...
by Unknown - 0

வீரவணக்க நிகழ்வு இருபுறங்களும் மலைகளால் சூழப்பட்ட வலே மாநிலத்தில் 11.09.2013 மதியம் 12.00 மணிக்கு ஆரம்பமானது. ஈகைப்பேரொளியின் திருவுடல் அவரின் உறவினர்களால் தாங்கி வரப்பட்டு மண்டபத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் குடும்பத்தினரால் சமயக்கிரிகைகள் நடாத்தப்பட்டது.

பிற்பகல் 2.30 மணியளவில் தேசியத்தின் புதல்வனின் வித்துடலை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கையேற்று தமிழீழ தேசியக்கொடிகளின் மத்தியில் வித்துடல் வைக்கப்பட்டு இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றது. ஈகைப்பேரொளியின் திருவுருவப்படத்திற்கு அவரது துணைவி மாலை அணிவிக்க வணக்க நிகழ்வு ஆரம்பமானது.
ஈகைப்பேரொளியின் தாயார் பொதுச்சுடரினை ஏற்ற, ஈகைச்சுடரினை அவரின் சகோதரன் ஏற்றினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் வித்துடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து வரப்பட்டு போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட மலர்வளையமும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மலர் வளையமும் கொண்டுவரப்பட்டு வைத்து கௌரவிக்கப்பட்டதுடன் அனைத்து நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் செய்யப்பட்ட மலர்வணக்கம் தேசியத்தின் வர்ணங்களை கண் முன் நிறுத்தின.
தொடர்ந்து மலர் வணக்க மரியாதை ஈகைப்பேரொளியின் உரை உள்ளடங்கிய பாடல் ஒலிக்க மக்கள் வணக்கம் செலுத்த தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட ஈகைப்பேரொளி மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பழ.நெடுமாறன் ஐயாவின் விசேட உரை காணொளியில் திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.
அதில் ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரன் தேசியத்தலைவர் மீது வைத்திருந்த பற்றுறுதி கூறப்பட்டு, அவரின் நோக்கத்திற்காக நாம் அனைவரும் ஆணையிட்டு சூழுரைப்போம் என்றும் உறுதி கூறப்பட்டு அவருக்கு உலகத்தமிழர்கள் சார்பில் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தமது நாட்டின் சார்பில் இரங்கல் உரைகளை நிகழ்த்தினார்கள். அத்தோடு ஏனைய நாடுகளின் அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.
மேலும் புரட்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் காணொளி உரையில் ஈகைப்பேரொளிகளின் அர்பணிப்புக்கள் எடுத்துரைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் மூச்சோடுதான் செந்தில்குமரன் மூச்சை நிறுத்தியிருக்கிறான் என்றும் உரைக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் மாணவர் புரட்சிக்கு உந்து சக்தியாக விழங்கியவர்களில் ஒருவரின் உரையும் காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதில் தேசியத்தலைவரின் புதல்வன் பாலச்சந்திரனின் நினைவூட்டலுடன் செந்தில்குமரனின் உடல் மீது ஆணையிட்டு திருச்சியில் இருந்து சென்னை வரை 50 மாணவர்கள் உந்தூர்தி பரப்புரை நிகழ்த்தப் போவதை கூறி, எதிரிகளும் துரோகிகளும் சூழ்ந்துள்ள இவ் வேளையில் எவரும் செந்நெருப்பாக மாறாதீர்கள் என்றும் உரைத்தார்.
உறுதி உரை இடம்பெற்று தமிழீழத் தேசியக் கொடி ஒப்படைப்பு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், 'உங்களுக்கு உரித்தான உரிமைகளை நீங்களே வென்றெடுக்க வேண்டும்' என்ற செந்தில்குமரனின் வரிகள் ஒலித்தன.
வித்துடல் இறுதிப் பயண நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்று, "உங்களுக்கு உரித்தான உரிமைகளை நீங்களே வென்றெடுக்க வேண்டும்" என்ற வரிகளை தம் மனங்களில் சுமந்து செல்லும் வேளையில், ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரனின் வித்துடலை சுமந்த வாகனமும் நகர்ந்தது.
உலகச்சதிகாரர்களுடன் இணைந்து சிங்கள சிறிலங்கா இனவெறி அரசு நடத்தி முடித்த கோரவெறியாட்டத்தில் பலியான எம் தமிழ்மக்களின் நினைவுகளைச் சுமந்து, தனது இன்னுயிரைக் கொடுத்த எம் தேசப்புதல்வனின் இழப்பைத் தாங்கமுடியாமல் அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் குமுறி அழுத காட்சிகள் அனைவர் மனங்களையும் கலங்கவைத்தன.
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பு ஈழத்தமிழ் மக்களை எல்லாம் மீண்டும் எழுச்சிகொள்ள வைத்துள்ளது என்பதற்கு அங்கு ஒருங்கிணைந்து நின்ற மக்களே சாட்சி. எல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பொய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு ஓய்ந்து போயுள்ளான் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்.
புலம்பெயர் மக்கள் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பினால் துடித்துள்ளார்கள். ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது போராட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான ஒரு அர்ப்பணிப்பை வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான்.
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் வீரம் உறுதியாக நாளை இன்னும் வலிமையான வரலாறாக மாறும் தமிழீழம் அடைவது உறுதி என்று நாம் சொல்லுவோம் அந்த தமிழீழத்தை அடையும் வரை ஓயமாட்டோம் என்று எதிர்வரும் 16.09.2013 அன்று ஐநா சபை முன்றலில் முழக்கமிடுவோம், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் மேல் ஆணையேற்போம், செந்தில்குமரன் கடைசிவரை விடுதலைக்காக வாழ்ந்து அவன் அதற்கு கொடுத்த தியாகத்தின் மேல் உறுதி ஏற்போம்.
சுவிஸ் வாழ் தமிழ் மக்கள், ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் எதிர்வரும் 16.09.2013 அன்று ஐநா சபை முன்றலில் நடைபெறும் தமிழ் இன அழிப்புக்கு எதிரான மாபெரும் பேரணியில் அலையென திரண்டு தமிழீழம் மலரும், அந்த காலத்தை விரைவில் உருவாக்குவோம் என்று ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி வார்த்தைக்கு "உங்களுக்கு உரித்தான உரிமைகளை நீங்களே வென்றெடுக்க வேண்டும்" உயிர் கொடுப்போம் வாருங்கள்.
« PREV
NEXT »

No comments