Latest News

September 26, 2013

புல்மோட்டையில் இராணுவ கிராமம் - பதற்றத்தில் பிரதேச மக்கள்
by Unknown - 0

புல்மோட்டையில் “இராணுவ கிராமம்” அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புல்மோட்டை பிரதேச காணிகள் அண்மைக்காலமாக படையினாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற வேளை கடந்த இரு தினங்களுக்கு முன்பு புல்மோட்டை 14ம் கட்டை பகுதியில் இராணுவ படை முகாமுக்கு முன்னாலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான 60ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கான “ரணவிரு கம்மானய” ( இராணுவக் கிராமம்) என்ற திட்டத்திற்காக அபகரிக்கும் நோக்கில் இராணுவ நில அளவையாளர்களைக் கொண்டு அளவையிடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
இவ் அளவீடுகள் எதுவும் முறைப்படி நிர்வாக ரீதியாக பிரதேச செயலாளரின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் இடம்பெற்று வருகின்றது.
மேலும் இதற்கு முன்னர் படையினருக்காக பெறப்பட்ட காணிகள் அரச நில அளவையாளர்களைக் கொண்டு பெற்றுக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி ரணவிரு கம்மானய என்ற திட்டத்திற்காக தற்போது புல்மோட்டைப் பிரதேச மக்களின் பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணிகளும் தோட்டம் செய்த மற்றும் அனுமதிப்பத்திர காணிகளும் துரிதமாக பல வகையான இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான தொடர் நடவடிக்கை புல்மோட்டை மக்கள் மத்தியில் மேலும் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ள அதே வேளை கடந்த சில தினங்களுக்கு முன்பு இவ்விவகாரம் தொடர்பாக திருகோணமலை நீதிமன்றம் வரை சென்றது.
இவ்வழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி இதனை மீள் விசாரணை செய்வதற்காக மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை நீதி மன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணி தொடர்பான பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கின்றபோது படையினரின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே செல்கின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து நீதிமன்றத்துக்கு ஆதரங்கள் மூலம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை அமர்வில் இதனை எடுத்துக் கூறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


« PREV
NEXT »

No comments