பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தை பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கும் மேடையாக மாற்றி கொண்டமை கவலைக்குரிய விடயம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நியூயோர்க்கில் கடந்த 26 ஆ ம் திகதி நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பிரித்தானியாவும் கனடாவும் பொதுநலவாய அமைப்பின் இணக்கப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் மீறி செயற்பட்டன.
இந்த நாடுகளின் பிரதிநிதிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்க்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு நிரந்தரமாக செயற்படுவது அவசியம் என கூட்டத்தின் போது தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தமை முழுமையான அநீதியாகும்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த உறுப்பு நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை பிரித்தானியா ஒரு பிரச்சினையாக எடுத்து கொண்டமை இலங்கையின் கவலைக்கு காரணமாகியுள்ளது.
இலங்கை தொடர்ந்தும் பொதுநலவாயத்தின் சம்பிரதாயம் மற்றும் பெறுமதிகளின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. இதனால் சகல உறுப்பு நாடுகளையும் சமமாக நடத்த வேண்டியது அத்தியவசியமானது.
முன்பு ஒருபோதும் நடந்திராத வகையில் பொதுநலவாய அமைப்பின் கொள்கைளை மீறி, அதற்கு முரணான வகையில் அமைப்பிற்குள் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக கனேடிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியானது பொருத்தமற்றதும் தகுதியானதும் அல்ல.
அத்துடன் இந்த முயற்சி பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழுவின் பொது இணக்கத்திற்கும் ஏற்புடையதல்ல. இவ்வாறு பொதுநலவாய அமைப்பை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment