வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது, சிலர் ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளனரா என்பதை கண்டறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அரச புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரே இவ்வாறு சூழ்ச்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தன்னிடம் செய்திருந்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்துமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டு விழா கூட்டத்தின் பின்னர் குருணாகல் மாநகர மேயரின் இல்லத்தில் கூடிய அமைச்சர்கள் சிலர் இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்த அமைச்சர் கூறியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் எஸ்.பி. நாவின்ன, ஜயரத்ன ஹேரத், சாலிந்த திஸாநாயக்க, இரண்டு மாநகர சபை உறுப்பினர்கள், தொடங்கஸ்லந்த தொகுதி அமைப்பாளர் ஆகியோர் அறையொன்றில் கூடிய பேசி ஜனாதிபதிக்கு பாடம் ஒன்றை கற்பிக்க ஜோஸ்டன் பெர்ணான்டோவின் மகன் ஜோஹான் பெர்ணான்டோவை தோற்கடிக்க வேண்டும் என்ற இணக்கத்திற்கு வந்ததாக சிங்கள இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறியை விட ஜோஹான் பெர்ணான்டோவுக்கு ஜனாதிபதியின் ஆதரவு வழங்கியதாக பேசப்பட்டது.
தயாசிறி தேர்தல் மேடைகளில் தெரிவித்த கருத்துக்கள் இதனை தெளிவாக உணர்த்தியிருந்தன.
தன்னை தோற்கடிக்க கம்பியூட்டார் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்ளப்பட உள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளது என்று தயாசிறி ஜயசேகர தேர்தல் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதிக்கு முன்பாகவே தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு ஜனாதிபதியை சினம் கொள்ள செய்தாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மேற்படி அமைச்சர்கள் ஜோஹான் பெர்ணான்டோவை பின்னுக்கு தள்ளி விட்டு, தயாசிறியை வெற்றிபெற செய்து ஜனாதிபதிக்கு பாடம் ஒன்றை கற்பிக்க வேண்டும் என குறித்த அமைச்சர்கள் தமக்குள் இணக்கப்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் தனக்கு எப்படி கிடைத்தது என தயாசிறி ஜயசேகரவும் ஆச்சரியத்தில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment