Latest News

September 26, 2013

தம்மைத் தாமே ஆளுகின்ற பொழுதே தமிழ் மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும் - சித்தார்த்தன்
by Unknown - 0

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய நிரந்தரமான தீர்வும் அமைதியும் கிடைக்கும்போதுதான் நாம் பெருமைப்படவும் சந்தோஷப்படவும் முடியும் எனவும் ஆதலால் இந்தத் தேர்தல் வெற்றிக்காக வரவேற்புக் கூட்டங்கள் நடத்துதல் , மாலை அணிவித்தல் வெடிகொளுத்தி ஆரவாரம் செய்தல் போன்றவற்றை மக்கள் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு யாழ் . மாவட்டத்தில் 39 ஆயிரத்து 715 வாக்குக்களை பெற்று வெற்றியீட்டிய மாகாண சபை உறுப்பினரும் புௌாட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வாக்களிப்பு என்பது இம்முறை எழுச்சி பூர்வமாக இருந்தது . பல மறைமுகமான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் மக்கள் துணிந்து மாபெரும் வெற்றியை கூட்டமைப்பிற்குப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் .
யாழ் . மாவட்டத்தில் இடம்பெற்ற வாக்களிப்பின்போது ,

சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையில் நின்ற இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் மக்களை மனரீதியாக அச்சுறுத்தும் வகையில் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறும் அல்லது வாக்களிக்கச் செல்லவேண்டாமெனவும் அச்சுறுத்தல்களைப் பிரயோகித்திருந்தனர் .

இருப்பினும் மக்கள் பெரும் திரளாக அணிதிரண்டு வாக்குச் சாவடியில் வாக்களித்தனர் . அவர்கள் அச்சுறுத்தல்களிலிருந்து வெளிவந்துவிட்டதை இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன .

தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும் சரி , தேர்தல் இடம்பெறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பும் சரி மக்கள் தமது மிகப் பெரிய ஆர்வத்தை தேர்தலையிட்டுக் காட்டாத போதிலும் தங்களுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டுமென்ற உறுதிப்பாட்டுடனேயே இருந்திருக்கின்றனர் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது என்பதை தங்களுடைய மிகப் பெரிய போராட்டமாகவும் தமிழ்த் தேசிய இனத்தின் சாத்வீக ஜனநாயகப் போராட்டத்தில் தம்முடைய பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர் .

அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுவது என்பது அவர்களுடைய கொள்கை பற்றுறுதியைக் கொச்சைப்படுத்துவது போலாகும் .

ஏனெனில் அவர்கள் தங்களுடைய கடமையைத்தான் செய்துள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் மிகவும் ஆர்வமாக இருந்த ஆதரவாளர்களிடம் ஒருவேண்டுகோளை தாழ்மையாக விடுகின்றேன் . வரவேற்புக் கூட்டங்கள் நடத்துதல் வெடிகொளுத்துதல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் . ஏனெனில் இந்த மாகாண சபைத் தேர்தல் ஒரு கொள்கை அடிப்படையில் மக்கள் தங்களது விழிப்புணர்வைக் காட்டி நின்ற தேர்தலாகும் .

தமிழ் மக்கள் தாங்களே தங்களை ஆளக்கூடிய நிலைக்கு வந்து நிரந்தரமான தீர்வும் அமைதியும் கிடைக்கும் போது தான் பெருமைப்படவும் சந்தோஷப்படவும் முடியுமெனவும் இலட்சியத்திற்காக போட்டியிட்ட தேர்தல் தான் இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
« PREV
NEXT »

No comments