Latest News

September 12, 2013

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சாரா சம்பியான் கோரிக்கை!
by Unknown - 0

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்  சாரா சம்பியான் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் தொடர்ந்தும் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் எவரும் இலங்கை அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதனை உலகிற்கு உணர்த்த சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேன தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்க படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்கள் மீது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். பலவந்தமான கடத்தல்கள், காணாமல் போதல்கள், சிறுபான்மை இனமத ஒடுக்குமுறை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, மனித உரிமை ஆர்வலர்கள் மீது அடக்குமுறைகள் பிரேயோகிக்கப்படுகின்றமை, ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமை போன்ற பல்வேறு எதேச்சாதிகார செயற்பாடுகள் தொடர்ந்தும் பதிவாகி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை எதேச்சாதிகாரம் நோக்கி நகர்வதாக கருத்துவெளியிட்டிருந்தார் என்பதனை சாரா சம்பியான் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டுக்கு முன்னதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த காத்திரமான ஒர் பொறிமுறைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்க வேண்டுமென பொதுநலாய நாடுகள் அமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கத் தவறினால் அமர்வுகளை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மனித உரிமைப் பாதுகாவலர் என்ற ரீதியில் பிரித்தானிய பிரதமர், கனேடிய பிரதமரின் பாதையை பின்பற்ற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பிரதமர் பங்கேற்காமல் விடுவதன் மூலம் உலக சமூகத்தின் கவனத்தை இலங்கையின் பால் ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments