Latest News

September 24, 2013

ஈழத் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை, இனப்படுகொலை குறித்து ஐ.நாவில் அன்புமணி
by admin - 0

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இன்று அன்புமணி எடுத்துரைத்த பேச்சு பாராட்டுக்குரியது. குறிப்பாக ஈழத்தில் தமிழ் பெண்களுக்கு நடக்கும் கட்டாய கருத்தடை குறித்து யாரும் ஐ.நா. வின் கவனத்திற்கு எடுத்து செல்லவில்லை. இப்போது பசுமை தாயகம் எடுத்து சென்றுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பசுமை தாயகம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமாக தமிழக அரசு ஐ.நா விற்கு குழு ஒன்று அனுப்பி குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அது செய்வதில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பசுமை தாயகத்திற்கு நன்றிகள்.

ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து மருத்துவர். அன்புமணி இரமாதாசு ஆற்றிய உரை வருமாறு .

உலகில் அனைத்து வகையான இன வெறியையும், அது தொடர்பான சகிப்புத் தன்மையின்மையையும் எவ்வளவு கடுமையாகக் கண்டிக்க முடியுமோ, அவ்வளவு கடுமையான வார்த்தைகளால் பசுமைத் தாயகம் கண்டிக்கிறது. இன வெறியால் அன்றாட ஒடுக்குமுறை முதல் ஒட்டுமொத்த இனப்படுகொலை வரை பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இவற்றில் இரண்டாவது விளைவான இனப்படுகொலை துரதிருஷ்டவசமாக இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை என்பது அப்பாவி மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்வது என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. இனப்படுகொலை திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று என்பதால், அது மிகவும் கொடூரமானதாகவும், நிரூபிக்க முடியாததாகவும் இருக்கும்.

இனப்படுகொலைக்கு எதிரான இரண்டாவது பிரிவின்படி, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒருவகையான இனப்படுகொலை ஆகும்.

இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களை, அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, கிளிநொச்சி பகுதியில் உள்ள வேராவில் அரசு மருத்துவமனைக்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது, அவர்களை மோசடி செய்து நீண்டகாலம் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான ஊசியை அவர்களின் கைகளில் செலுத்தியுள்ளனர். கருத்தடை செய்துக் கொள்ளாவிட்டால், அந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் எந்த சிகிச்சையையும் இனி பெற முடியாது என்று அப்பெண்கள் மிரட்டப் பட்டிருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தால் கடந்த 2007 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையை விக்கிலீக்ஸ் அண்மையில் அம்பலப்படுத்தியது. இந்தக் கட்டாயக் கருக்கலைப்புகளை இலங்கை அரசுடன் இணைக்கப்பட்டுள்ள துணை ராணுவக் குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் செய்திருக்கிறார்.

கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். நலிவடைந்த மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை சுகாதார சேவைகளை, கட்டாயக் கருத்தடைக்காகப் பயன்படுத்திய இலங்கை அரசின் செயல் மூர்க்கத்தனமானது; தார்மீக ரீதியில் கண்டிக்கத் தக்கது என்று ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கருதுகிறேன். இந்தக் குற்றச்சாற்றுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றங்கள் அனைத்தும், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வரலாற்றில் அண்மையில் நடைபெற்றவையாகும். 2009 ஆம் ஆண்டில் இந்த அட்டூழியங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. அப்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் விளைவாக இலங்கை கடற்கரை ஓரத்தில் குருதிவெள்ளம் ஓடியது; பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

எனவே, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து விசாரிக்க சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
« PREV
NEXT »

No comments