ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பொதுச்செயலாளர் தீனியாவள பாலித ஹெமி கூறுகையில்,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமாகவே இராணுவ ஆட்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்துகின்றது.
அரசு தனது பிழையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நடத்திய இக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் இருவரின் உயிர் சூறையாடப்பட்டுள்ளன. ஜனநாயக ஆட்சி மிளிர வேண்டிய நாட்டில் பதிலாக மிலேச்சத்தனமான கொடூர ஆட்சியே இன்று நடைபெற்று வருகின்றது.
மக்களுக்கு தூய நீரைக்கூட பெற்றுக்கொடுக்க வழி தெரியாமல் நிற்கும் அரசை எதிர்த்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் போல் சுட்டுக் கொல்லப்படுவது இந்நாட்டில் வரலாறு காணாத ஆட்சியை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்று இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் எண்ணும் அளவிற்கு மூலை முடுக்கெல்லாம் இராணுவத்தினரின் ஆட்சியே ஆட்டிப்படைக்கின்றது.
உள்நாட்டில் மக்களுக்கு தூய நீரை வழங்க முடியாது அப்பாவி மக்களைக்கொன்று பிழைக்கும் இந்த அரசு வெளிநாட்டிற்கு நீர் வழங்க உறுதியளித்திருப்பது வேடிக்கைக்குரிய விடயமாகும். தனது தாய் நாட்டு மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க துணியாது இவ்வாறு மிலேச்சத்தனமானதும் வேடிக்கையானதுமான செயலை நடத்தி வந்தால் நாளை இலங்கை என்றொரு நாடு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாமல் போய் விடும்.
தமது உரிமைகளையும் தேவைகளையும் எதிர்த்து கேட்கும் மக்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கவும் சுடவும் இராணுவத்துக்கு உத்தரவிட்டது யார் என்பதை அரசாங்கங்கள் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இனியும் இந்த அரசின் கொடுங்கோலாட்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல் அனைவரும் ஒன்றிணைந்து அரசிற்கு நல்லதோர் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
No comments
Post a Comment