கிளிவெட்டியில் நவீபிள்ளை
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீபிள்ளை மூதூர் பிரதேசத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். முதூர், கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்களின் நிலைமையை நேரில் கேட்டறிந்து கொண்டார்.
முகாமிலிருந்த மக்களில் சிலர் காணாமற் போயுள்ள தமது உறவுகள் மீள வருவதற்கு வழி செய்து தருமாறும் நீண்ட காலமாக சொந்த வாழிடத்தில் குடியமர முடியாது தவிக்கும் தம்மை மீளக்குடியமர்த்துவதற்கு ஆவணம் செய்யுமாறு கண்ணீர் விட்டழுது கோரினர்.
சம்பூருக்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரெட்னபுரம் மற்றும் சுடைக்குடா மக்களை மீள்குடியேற்றியது போன்று எங்களையும் மீள் குடியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். எங்களுக்கு எமது சம்பூர் தான் வேண்டும் என மக்கள் மண்ராடினர்.
இதேவேளை, இளம் தாய் ஒருவா் தனது பிள்ளையுடன் நவிப்பிள்ளையிடம் கண்ணீர் மல்க எனது கணவர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றோம் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்றார். இதன்போது கோரிக்கை அடகிய மகஜரொன்றும் நவீபிள்ளையிடம் கையளித்தனர்.
சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுவேன் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீபிள்ளை தெரிவித்துள்ளார்.
“எனது விஜயத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்திக்கவுள்ளேன். இதன்போது சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து பேசுவேன்” என அவர் குறிப்பிட்டார்.
சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாது மாற்று இடத்தில் குடியேற்றப்பட்டதனால் நீங்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் அறிவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment