Latest News

August 14, 2013

ஜனாதிபதி மஹிந்தவிடம் கேள்வி கேட்க பத்திரிகை ஆசிரியர்களுக்கு தில்லில்லை - மெனிக் டி சில்வா
by admin - 0

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடினமான கேள்விகளை கேட்க பத்திரிகை ஆசிரியர்கள் தவறுகின்றனர் என சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரான மெனிக் டி சில்வா தெரிவித்தார்.
மாதத்திற்கு ஒரு முறை பத்திரிகை ஆசிரியர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை உணவுடன் சந்திப்பது வழமை. இதில் கலந்துகொள்ளும் பிரதம ஆசிரியர்களினால் முக்கியமான கேள்விகள் கேட்கப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தைரியம் போதாமையின் காரணமாகவே பத்திரிகை பிரதம ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் கடினமான கேள்விகளை கேட்க தவறுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
தேவையற்ற கேள்விகளே இந்த சந்திப்பில் கேட்கப்படுகின்றன. அங்கு செல்லமாலே ஒரு செய்தியை எழுத முடியும். அது என்னவென்றால் “காலை உணவு வழங்கப்பட்டது” என்பதாகும் என சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் மெனிக் டி சில்வா தெரிவித்தார்.
எனினும் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்புபட்டு இருக்கமான கேள்விகள் ஒருபோதும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பத்திரிகை ஆசிரியர்களினால் கேட்கப்படுவதில்லை என அவர் கூறினார்.
தகவல் அறியும் உரிமை மற்றும் பேச்சு உரிமை ஆகியவற்றுக்கு ஊடகவியலாளர் போதுமான அழுத்தங்களை வழங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார் .
“தற்போது நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போதுமான பதில்கள் வழங்கப்படுவதில்லை. ஆறு அல்லது 12 மாதங்களின் பின்னரே கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பர்” எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்துடன் இணைந்த இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்பிலான குழுக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுக்கையிலேயே சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியரான மெனிக் டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments