சரணடைந்த, காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும்: நவநீதம்பிள்ளையிடம் முறையிடுவோம்- அனந்தி
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த, காணாமற்போன முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்களின் விபரங்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறையிடவுள்ளோம் வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிடுகின்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
நாங்கள் சிந்திய குருதியும் எமது மக்களின் உயிர்த் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகக்கூடாதென்பதற்காகவும் தோற்றுப்போன இனம் மீண்டும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமென்பதற்காகவுமே நான் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது அப்பகுதியில் நான் வாழ்ந்ததால் எமது மக்கள் பட்ட துன்ப, துயரங்களை நான் அறிவேன். முல்லைத்தீவில் எனது கணவரும் ஏனைய போராளிகள் சிலரும் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் சரணடைந்த எனது கணவர் மற்றும் போராளிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
எனது கணவரை விடுவிக்குமாறு நான் பல அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன்.
ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனது பிரச்சினையை இழுத்தடிக்கின்றார்கள். ஓரம் கட்டுகின்றார்கள். என்னை அச்சுறுத்துகின்றார்கள். எனது கணவரைப் போல் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இன்னமும் தகவலில்லை. யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளும் கணவனைப் பறிகொடுத்த பெண்களும் தொழில் வாய்ப்புக்கள் எதுவுமற்ற நிலையில் பரிதவிக்கின்ற ஏழைகளும் அங்கவீனர்களும் தற்பொழுது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
இந்த அரசாங்கம் இவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னமும் எதுவுமே செய்யவில்லை. இவர்களுடைய எதிர்காலத்தைச் செம்மைப்படுத்துவதற்காகவும் வளப்படுத்துவதற்காகவுமே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
நான் ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் பெண்களின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன். இதனை உணர்ந்து கொண்டவர்களாக என்னை எதிர்காலத்தில் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தற்பொழுது பெண்களுக்கெதிராகவும் சிறுவர்களுக்கெதிராகவும் நடைபெற்று வருகின்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
நாங்கள் தோற்றுப்போன இனம் எனக் கருதுமிடத்து மீண்டும் மீண்டெழ முயற்சிக்க வேண்டும். நாம் சிந்திய குருதியும் உயிர்த் தியாகங்களும் வீண்போகாது என்ற தெளிவான சிந்தனையுடனேயே நான் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் உறவுகளுக்கு இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் காணப்படுகின்றது. மிக நன்றாக அவர்களை எமது தமிழ் மக்கள் நடத்துகின்றார்கள். இந்த வகையில் என்னையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு சாட்சியாக நாம் உள்ளோம். யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எமது மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு இந்த அரசாங்கத்தினால் இன்னமும் வழங்கப்படவில்லை. உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பல போராட்டங்களை மேற்கொண்டு நாம் தோற்றுப்போயுள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்கள் இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் போன்றோர் தொடர்பாக இதுவரை இந்த அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எனக்கு நிறைவான ஆதரவு கிடைத்துள்ளது. நான் ஒரு முன்னாள் போராளியல்ல. போராளியின் மனைவி.
எனக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் நிரந்தரமான தீர்வும் கிடைக்கவேண்டுமென்ற விருப்பமுள்ளது. அரசியலின் மூலமாகவே எமக்கான நியாயத்தினை நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் உதவுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற் கொள்வதற்காக எம்மையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்றுகின்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. எமக்கான தீர்வை இந்த அரசாங்கம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை. நாங்கள் தான் தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார்.
No comments
Post a Comment