Latest News

July 31, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்
by admin - 0



எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, ஐஸ்வர்யா அர்ஜுன்

இசை: தமன்

தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்

இயக்கம்: ஜி பூபதி பாண்டியன்

திருச்சி மலைக்கோட்டை வரும் ஹீரோ, அங்கே ஒரு அழகான பெண் (கதைப்படி!), அவளைப் பார்த்ததும் காதல், அவளுக்கு ரவுடிகளால் பிரச்சினை, பிரச்சினைகளையே போத்திக்கிட்டுத் தூங்கும் ஹீரோ உதவப் போகிறார்... க்ளைமேக்ஸில் காதலியை கரம் பிடிக்கிறார். நடு நடுவே மானே தேனே பொன்மானே மாதிரி காமெடியன்களும் வில்லத்தனம் என்ற பெயரில் காமெடி பீஸ்களும் வந்து வந்து கிச்சு கிச்சு மூட்டுவார்கள். பாட்டு என்ற பெயரில் இசையமைப்பாளர் சீரியஸாகக் கொலை முயற்சியில் இறங்கியிருப்பார்!

-அட இருய்யா... இந்தக் கதையை நான் நிறைய படங்களில் பாத்துட்டேன், என்கிறீர்களா... பாவம், இந்த பேருண்மை, இதே மாதிரி மலைக்கோட்டை என்ற படத்தை எடுத்து வெற்றியும் கண்ட இயக்குநர் பூபதிபாண்டியனுக்குத் தெரியவில்லை.

படத்தின் ஹீரோ என்று நியாயமாக சந்தானத்தின் பெயரைத்தான் போட்டிருக்க வேண்டும். அவ்வளவாக சிரிப்பு வரவில்லைதான் என்றாலும் அவரும் மயில்சாமியும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பார்ப்பவர் கழுத்தில் ரத்தம் வந்திருக்கும்!

முதலாளி சந்தானத்தை திருச்சிக்கு ஓட்டல் வைக்கலாம் என்று கூட்டி வரும் விஷால் அன்ட் கோ, திருச்சியில் இறங்கியதும் சந்தானத்தின் பணத்தை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டு அவரை மட்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போகச் சொல்கிறார்கள். அவரும் போகிறார். நீங்க ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டே இருங்க, நாங்க பணத்தோட வர்றோம் என்று கூறுகிறார்கள். அவரும் சாப்பிட ஆரம்பிக்கிறார். ஹீரோ விஷால், ஹீரோயின் ஐஸ்வர்யாவைப் பார்த்து வழிந்து கொண்டே பணத்தைக் கோட்டை விடுகிறார். அதைத் தேடுகிறோம் பேர்வழி என இவர்கள் அடிக்கிற கூத்து, சிரிப்புக்கு பதில் மகா கோபத்தை வரவழைக்கிறது. நகைச்சுவை என்ற பெயரில் பொறுப்பின்மையை விதைக்கும் நச்சுக் காட்சிகள் இவை.

ஆனாலும் 'இந்தத் திருட்டில் இசைஞானிக்கும் பங்கிருக்கிறது' என போலீஸ் ஸ்டேஷனில் மயில்சாமி சொல்லுமிடம் குபீர்!

விஷால் ஏதோ மெஷின் மாதிரி வருகிறார். அடிஅடியென்று அடிக்கிறார். சத்தம் காது கிழிகிறது. நியாயமாக அந்த அடிக்கு அப்போதே வில்லன்கள் அத்தனைபேரும் செத்து படமும் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அடிபட்டவர்கள் டாம் & ஜெர்ரியில் உடல் துண்டுத் துண்டான பிறகும் சேர்ந்து கொள்வது போல, மரண அடி வாங்குகிறார்கள்... திரும்ப வருகிறார்கள். போங்கய்யா நீங்களும் உங்க சண்டையும்!

ஹீரோயின் ஐஸ்வர்யா பற்றி மனதில் இருப்பதை அப்படியே சொன்னால் மனசு ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதனால் சிம்பிளாக... 'ஸாரி'!

மெயின் வில்லனைப் பார்த்ததும் யார்றா இவன் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி என்று வர்ணிப்பார் சந்தானம். அந்தக் காட்சியில் அந்த வில்லன் நிஜமாகவே அப்படித்தான் தெரிகிறார்!

இடைவேளை கடந்து படம் க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க, வில்லன்களும் அவர்களின் அடியாட்களும் பக்கா காமெடியன்களாகி படத்தை பணாலாக்கிவிடுகின்றனர்.

ஏற்கெனவே நொண்டியடிக்கும் திரைக்கதையை இன்னும் தடுமாற வைக்கிறது தமனின் இசை. சிவாஜி கணேசனின் படத்தில் இடம்பெற்ற 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை...' பாடலை கொஞ்சம் ஸ்லோவாக்கி ஜவ்வாக ஒரு பாட்டுப் போட்டிருக்கிறார். இவ்வளவு மோசமாகக் கூட ஒரு ஆக்ஷன் படத்துக்கு பின்னணி இசை தரமுடியும் என நிரூபித்திருக்கிறார்.

நகைச்சுவை - ஆக்ஷன் இரண்டையும் பக்காவாக மிக்ஸ் பண்ணுவதில் வல்லவரான பூபதி பாண்டியனின் கலவை இந்த முறை தப்பாகிவிட்டது.

காமெடிக்காக எதையும் தாங்கும் இதயம் இருப்பவர்களுக்கான பட்டத்து யானை இது!


« PREV
NEXT »

No comments