Latest News

July 26, 2013

நோ பயர் ஷோன் மலேசியாவில் திரையிடப்பட்டது
by admin - 0

மலேசியாவில் ஏற்கனவே திரையிட தடைவிதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் போர் குற்றங்களை விபரிக்கும் நோ பயர் ஷோன் விவரணத் திரைப்படம் நேற்றிரவு தலைநகர் கோலாலம்பூரில் திரையிடப்பட்டதாக மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த விவரணத் திரைப்படத்தை திரையிட மலேசிய உள்துறை அமைச்சு தடைவிதித்திருந்தது.
இந்த திரைப்படத்தை திரையிடும் ஏற்பாடுகளை மலேசியாவின் சுதந்திரத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு செய்திருந்ததாக மலேசிய மக்களவையின் முன்னாள் மேல் சபை உறுப்பினர் எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோமாஸ், சுஹாரம் கே.எல். மற்றும் சிலாங்கூர் சீன பேரவையின் சிவில் உரிமைகள் குழு என்பன இணைந்து முன்னர் இந்த திரைப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.
மலேசிய உள்துறை அமைச்சு தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. எனினும் நேற்று உள்துறை அமைச்சின் எந்த தடைகளும் இன்றி விவரணத் திரைப்படம் திரையிடப்பட்டது.
படம் திரையிடப்பட்ட போது சுமார் 30 உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திரையிடும் இடத்திற்கு சென்றிருந்த போதும் 10 நிமிடங்களில் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
படம் திரையிட்டு முடிந்த பின்னர், படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரே ஸ்கைப் ஊடாக பார்வையார்கள் மத்தியில் உரையாற்றியதுடன் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல. ஆனால் போர் குற்றங்கள் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மெக்ரே தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments