Latest News

July 22, 2013

ஆஸ்திரேலியாவின் அகதிக் கொள்கைக்கு எதிராக போராட்டம்
by admin - 0


படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி வருவோரை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் வெளியே பாப்யூவா நியுகினியிலுள்ள முகாமுக்கு அனுப்பிவிடுவது என்றும் ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

படகுகளில் ஏறி ஆஸ்திரேலியாவுக்கு வருவோர் உண்மையான தஞ்சம் கோரிகள் என்று கண்டறியப்பட்டால் கூட அவர்கள் இனி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளார். பாப்யுவா நியுகினியில்தான் அவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு அது ஏற்றுக் கொண்ட ஐ நா ஒப்பந்தங்களை மீறுவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆளும் தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நடந்த இடத்திற்கு அருகேயும் திங்கட்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆபத்தான படகுப் பயணம் மூலம் வரும் பல தஞ்சக் கோரிக்கையாளர்கள் கடலில் விழுந்து சாகின்றனர், இவர்களுக்கு பின்னால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இருக்கின்றன என்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் இந்த வாதம் உண்மையல்ல என்கிறார் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டணி சார்பில் பேசவல்ல இயன் ரிங்ச்சல்.
"படகுப் பயணத்தை ஒழுங்கு செய்வர்கள் பலர் முன்னாள் அகதிகள்தான். ஆப்கானில் இருந்து வந்த அகதிகள், பர்மாவில் இருந்து வெளியேறியுள்ள ரொகிஞ்சா அகிதகள் போன்றோர் – தம்மைப் போலவே தமது நாட்டில் இருந்து வெளியேற முற்படும் மக்களை வெளிக் கொண்டுவர உதவுகின்றன. சமீபத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற காவல்துறை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானோர் முன்னாள் அகதிகள்தான்." என்றார் அவர்.

குறைந்த ஆதரவு

அதே நேரம் ஆபத்தில் இருந்து தப்பித்து வருபவர்களுக்கு ஆஸ்திரேலிய அபயம் அளிக்க வேண்டுமா என்ற அடிப்படைக் கேள்வி கருத்துக் கணிப்புகளில் கேட்கப்படும் போது 75 சதவீதம் 'ஆம்', அவர்களுக்கு உதவியளிக்க வேண்டும் என்று கூறினாலும் படகில் வருவோர் குறித்துக் கேட்டால் மூன்றில் ஒருவர்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றனர என்றும் இயன் ரிங்ச்சல் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவில் இருக்கும் அகதிகளில் ஆண்டுதோரும் 20 ஆயிரம் பேரை ஏற்பதாக ஆஸ்திரேலியா ஐ நா அகதிகள் ஆணையத்திடம் கூறியிருந்தும் மிகக் குறைந்த அளவிலானவர்களையே அது ஏற்கிறது என்றும் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை தனது இணைய தளத்தில் தரையில் உட்கார்ந்து இருக்கும் பெண் தலையை கவிழ்ந்து இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இனி ஆஸ்திரேலியாவுக்கு வர முடியாது என்ற செய்தியை இந்தப் பெண் தஞ்சம் கோரி இனி ஏற்றாக வேண்டும் என்று அந்தப் படத்துக்கு தலைப்பும் போடப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத் தளங்களில் கடும் ஆட்சேபணைகள் ஏற்பட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments