Latest News

July 04, 2013

மில்லர்கள் மட்டுமே அடையாளம் நமக்கு! - புகழேந்தி தங்கராஜ்
by admin - 0


ஆங்கிலப் பத்திரிகையாளர் சோபன் தாஸ் குப்தா பற்றி மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் எழுதமாட்டேன் - என்று வாக்கு கொடுத்திருந்தேன் நண்பர்களிடம். அதையும் மீறித்தான் எழுதவேண்டியிருக்கிறது இதை. அல்காய்தாவுக்கு முன்பே தற்கொலைப் படை மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் - என்று அண்மையில் திருவாய் மலர்ந்தருளியிருந்தார்,  சோபன். (உண்மையே பேசமாட்டோம் - என்று பிரணாப் முகர்ஜியிடம் சத்தியம் கித்தியம் செய்துகொடுத்துவிட்டார்களா?)
பிரணாப் போலவே சோபனுக்கும் தாய்மண் - வங்காளம் தான். வங்கத்திலிருந்து இலங்கைக்குப் போன சோபனின் தொப்புள் கொடி உறவான சிங்கள இனத்தின் மீதும், ராஜபட்சே சகோதரர்கள் மீதும் அவருக்குப் பாசம் இருக்கக் கூடாதென்று  நாம் சொல்லவில்லை. அது இயல்பான பாசம். 'நம்ம ஆளுங்கப்பா அவங்க' என்கிற அபிமானத்தில் காட்டப்படும் பரிவு. அதற்காக, சிங்கள இனவெறிக்கு எதிரான தமிழினத்தின் விடுதலைப் போரை எப்படியாவது கொச்சைப்படுத்த வேண்டும் - என்கிற அவரது அரிப்பை நாம் அனுமதிக்க முடியாது.
சிவகங்கைச் சீமைக்கான விடுதலைப் போரில் வேலுநாச்சியாரின் வெற்றியை உறுதி செய்வதற்காக, தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டவள் - குயிலி. நாச்சியார் அமைத்திருந்த உடையாள் பெண்கள் படையின் இளம் தளபதி. அப்போது அவளுக்கு, 18 வயதுகூட நிறைவடையவில்லை. (குழந்தைப் போராளி!)
ஆயுத பூஜையையொட்டி சிவகங்கை அரண்மனையின் நிலமுற்றத்தில் குவித்துவைக்கப் பட்டிருந்த ஆங்கிலேயர் படையின் ஆயுதங்கள் மீது தீப்பிழம்பென ஓடிவந்து குதித்தாள் குயிலி. கண்ணிமைக்கும் பொழுதில்,   வெடித்துச் சிதறின ஆயுதங்கள். அதிர்ந்துபோய் நின்ற ஆங்கிலேயருடன் உறுதியுடன் மோதி, சிவகங்கையை மீட்டது  நாச்சியின் பெண் படை.
கோழைத்தனமாக தன் கணவனைக் கொன்ற வெள்ளைத் தளபதி பாஞ்சோரை பெண்கள் ராணுவத்தைக் கொண்டே வேலுநாச்சியார்  வென்றதும்,  தன்  வாளுக்கு அவனை இரையாக்கியதும் சிவகங்கைச் சீமையின் வீர வரலாறு.
சோபன் தாஸ் குப்தா அவர்களே! ஆங்கிலேயரின் ஆயுதங்களை அழிக்க எங்கள் இனத்தின் இளைய நிலா குயிலி தன்னைத்தானே எரித்துக் கொண்டது - 1780ம் ஆண்டில்!
சிட்டகாங் ஐரோப்பியர் கிளப் முற்றுகையில் முன்னணியில் நின்று, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்தவரை பிரிட்டிஷ் படைகளை நோக்கிச் சுட்டவள், வங்கத்தின் பெண் சிங்கம் - பிரீத்தி லதா. 'நாய்களும் இந்தியர்களும் உள்ளே வரக் கூடாது' என்கிற போர்டு மாட்டப்பட்டிருந்த ஐரோப்பியர் கிளப், பிரீத்தியின் தலைமையில் சென்ற அவளது தோழர்களால்  தீக்கிரையாக்கப்பட்டது. அப்போது பிரீத்திக்கு - 20 வயது.
தோட்டாக்கள் தீர்ந்த நிலையில், சுற்றிவளைக்கப்பட்டாள் பிரீத்தி. அப்போதும் அவள் கலங்கவில்லை. மலர்ந்த முகத்துடன்  கையிலிருந்த பொட்டாஷியம் சயனைடு பொட்டலத்தை விழுங்கி, தன் கடமையை முடித்த மனநிறைவுடன் தன்னைத்தானே அழித்துக் கொண்டாள். 
திருவாளர் சோபன்தாஸ் அவர்களே! வங்க மண்ணில் பிறந்து, சொந்த மண்ணுக்கான விடுதலைப் போரில் உயிரைக் கொடுத்து பிரீத்தி லதா சரித்திரம் படைத்தது, 1932ம் ஆண்டில்!
குயிலியைப் பற்றி சோபன் தாஸ் குப்தா  கேள்விப்படாமலிருக்கலாம். விந்திய மலைக்கு இந்தப்புறமும் இந்தியா இருக்கிறது என்பது எவருக்குத் தெரிகிறது? ஆனால், வங்கத்துக் கரும்புலி பிரீத்திலதா பற்றிக் கூட அவர் தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?
இன்னும் சொல்லப்போனால், பிரீத்தியின் முழுப் பெயர் 'பிரீத்திலதா தாஸ் குப்தா' என்றுதான் இருந்திருக்கவேண்டும்.  அவர் பிறந்த குடும்பத்தின் பின்னொட்டாக 'தாஸ் குப்தா' என்பதுதான் காலங்காலமாக இருந்து வந்தது. இடையே, அவளது  குடும்பத்தில் எவருக்கோ தரப்பட்ட 'வதேதார்' என்கிற கௌரவம் பின்னொட்டாக மாறி, பிரீத்தி கூட 'பிரீத்தி லதா வதேதார்' என்றே  அழைக்கப்பட்டாள். தாஸ் குப்தா - என்பது மறைந்துவிட்டது.  சோபன் தாஸ் குப்தா இதை மறந்தது எப்படி?
வங்கதேச எழுத்தாளர் செலினா ஹூசைன், 'ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்மாதிரியாக இருப்பவள் பிரீத்தி' என்கிறார் பெருமையுடன். குயிலியை சிவகங்கைச் சீமை வணங்குவதைப் போல், ஒட்டுமொத்த வங்கமும் வணங்குகிறது பிரீத்தியை! வீரத் திருமகள் - என்று போற்றுகிறது. சோபன் மட்டும்தான், 21 நாடுகளின் துணையுடன் ஒன்றரை லட்சம்பேரைக் கொன்றவர்கள்தான் ஒரிஜினல் வீரர்கள் என்கிறார், வெட்கமில்லாமல். விடுதலை வேள்வியில் உயிரைக் கொடுத்த பிரீத்தி, குயிலி  போன்ற வீர வேங்கைகள், அவருக்கு மனித வெடிகுண்டுகளாகத் தெரிகிறார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் கரும்புலிகள் பிரிவு இருந்ததென்றால், அது அல்காய்தாவுக்கு முன்பே உருவான  பிரிவல்ல..... குயிலிக்குப் பின்பு 200 ஆண்டுகள் கழித்து,  பிரீத்திக்குப் பின்பு 50 ஆண்டுகள் கழித்து உருவான பிரிவு. 1780ல் ஆங்கிலேயரின் ஆயுதக் குவியலைத் தகர்த்து  குயிலி வரலாறு படைத்தாள். 1987 ஜூலை 5ம் தேதி, யாழ்ப்பாணம் நெல்லியடியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருந்த சிங்கள ராணுவ முகாமை அடியோடு தகர்த்து கேப்டன் மில்லர் வரலாறு படைத்தான். இரண்டுக்குமே அடிப்படை விடுதலை வேட்கையும் தேச பக்தியும் தவிர வேறென்ன!
அடிப்படையில், பிரீத்தி லதாவுக்கும், மில்லருக்கும் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவரின் தந்தையரும், அரசுப் பணியில் இருந்தவர்கள். பிரீத்தியின் தந்தை, சிட்டகாங் நகராட்சியின் ஹெட் கிளார்க். மில்லரின் தந்தை, இலங்கை வங்கியின் மேலாளர். இருவருமே, கல்லூரி மாணவர்களாக இருந்தபோதே விடுதலை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்கள். பிரீத்திக்கு 20 வயது, மில்லருக்கு 21 வயது. 'நாய்களும் இந்தியர்களும் உள்ளே வரக்கூடாது' என்கிற அறிவிப்பு பிரீத்தியின் கோபாவேசத்துக்குக் காரணமாக இருந்தது. தன்னுடைய தாய் மண்ணுக்குள் வந்து சிங்கள மிருகங்கள் முகாம் அமைத்திருந்தது மில்லரின் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் பற்றியெல்லாம் சிங்கள அரசு ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நெல்லியடியில் இருந்த மகாவித்தியாலயம் (மத்தியக் கல்லூரி), சிங்கள ராணுவ முகாமாகவே மாற்றப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆயுதக் கிடங்காகத் திகழ்ந்தது அது. மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்கு ராணுவம் தயாராகிக் கொண்டிருந்தது.
அந்த நெல்லியடி ராணுவ முகாமைத் தகர்ப்பது - என்கிற  முடிவு எடுக்கப்பட்டவுடன், உயிருக்கு ஆபத்தான அப் பணியைத்  துணிவுடன் ஏற்றவன் மில்லர். வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றில் முகாமுக்குள் நுழைந்து வெடிபொருட்களை வெடிக்க வைப்பது - என்பது திட்டம். முதல் வாகனத்தில் மில்லர் செல்வதென்றும், அடுத்த வாகனத்தில் மில்லரைத் தொடர ரஷீக் தயாராக இருப்பதென்றும் ஏற்பாடு.
முகாமின் அண்மைச் சாலையில், பெரிய பெரிய மரக்கட்டைகள் சாலைக்குக் குறுக்கே புதைக்கப்பட்டு, செயற்கைத் தடைகள் உருவாக்கப் பட்டிருந்தன. அந்தத் தடைகளை அகற்றும் பொறுப்பு கமல் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. (கமலின் தந்தை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.) தாக்குதலையொட்டி, இரவோடிரவாக ராணுவ முகாமைச் சுற்றி வளைக்க, பல பகுதிகளிலிருந்தும் ஆண் போராளிகளும் பெண் போராளிகளும் நெல்லியடிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தாக்குதல் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றுவதிலிருந்து, அவை வெடிப்பதற்கான இணைப்பைக் கொடுப்பதுவரை அனைத்துப் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டான் மில்லர். என்ன செய்ய முடிவெடுத்திருந்தானோ, அதன் பிரதிபலிப்பு அறவே  இல்லை அவன் முகத்தில். தன்னுடைய சவப்பெட்டியைத் தானே தயாரிப்பவனாக, உற்சாகமாக ஓடி ஓடி அந்த வாகனத்தை அவன்  தயார் செய்ததைப் பார்த்தவர்கள் கலங்கினர். எந்த நிலையிலும் தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடு ஒவ்வொன்றையும் தன் கண்காணிப்பிலேயே செய்துகொண்டான் அவன். அப்படியொரு மனநிலை, மரணத்தைக் கண்டு அஞ்சாத மாவீரர்களுக்கே உரியது.
முகாமின் உச்சியிலிருந்த காவலரண் தகர்க்கப்படுவதுதான், தாக்குதலின் முதல் கட்டம். திட்டமிட்டபடி காவலரண் தகர்க்கப்பட்டதும், மில்லரின் வாகனம் உறுமியபடி புறப்பட்டது. மில்லர் ஓட்ட, அருகில் அமர்ந்திருந்தான் அவனது தோழனான  பிரபு. வாகனத்தைக் கிளப்பும்வரை பிரபுவிடம் நகைச்சுவையாக எதையோ சொல்லி மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான் மில்லர்.
காவலரண் தகர்க்கப்பட்டதும், முகாமைச் சுற்றி வளைத்திருந்த போராளிகள் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.  இந்தத் திடீர்த் தாக்குதலால், ராணுவ முகாமில் பதற்றம் ஏற்பட்டது. அந்தக் குழப்பமான சூழ்நிலைக்கிடையே, சாலைத் தடையாகப் புதைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய மரக்கட்டைகளை வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருந்தார்கள், கமலும் தோழர்களும், அந்த இருளிலும். தடைகள் தூள்தூளாகச் சிதற, மில்லருக்கு கிரீன் சிக்னல் தரப்பட்டது. மெதுவாக வந்துகொண்டிருந்த மில்லரின் வாகனம் வேகமெடுத்தது.
மில்லரின் அருகே அமர்ந்திருந்த பிரபு, திட்டமிட்டபடி கீழே குதிக்காததால், அவனைக் கீழே தள்ளிவிட்டான் மில்லர். கீழே விழுந்தபிறகும் எழுந்து வாகனத்துடனேயே ஓடிவந்த  பிரபு - 'எப்படியும் திரும்பி வந்துடு' என்றான் மில்லரிடம். அது, தமிழினத்துக்கான வீரஞ்செறிந்த போரில் உயிரையும் கொடுத்துப் போராடிய மாவீரர்களின் ஈரஞ்செறிந்த இதயத்தின் வார்த்தைகள். பிரபு சொல்லிக் கொண்டேயிருக்க, சீறிப்பாய்ந்து முன்னேறிச் சென்றது மில்லரின் வாகனம்.
மில்லரின் வாகனம் முகாமை நெருங்குவதைக் கண்டனர், முகாமைச் சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருந்த போராளிகள். நடக்கப் போவதை அறிந்து, ஏற்கெனவே தங்களுக்குத் தெரிவித்திருந்தபடி, சற்றுப் பின்வாங்கி நின்றனர் அவர்கள். முகாமுக்குள்ளிருந்து மில்லரின் வாகனத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கிகள் முழங்கின. தொலைவில் இருந்து போராளிகள்  திருப்பிச் சுட்டனர். இந்தக் குண்டுமழைக்கிடையே முகாமை நெருங்கியது, மில்லரின் வாகனம். முகாமின் பிரதான வாயிலை இடித்தபடி பெருத்த ஒலியுடன் வெடித்துச் சிதறியது அது.
கற்கோட்டை போன்று இருந்த அந்த ராட்சச ராணுவ முகாம் கண்ணிமைக்கும் பொழுதில் கற்குவியலாக நொறுங்கியது. மில்லரின் தாக்குதல் முழுமையாக வெற்றி பெற்றதைப் பார்த்த போராளிகள், பின்வாங்கியிருந்த இடங்களிலிருந்து முகாமை நோக்கி முன்னேறி ஓடினர். கல்லூரி வளாகத்துக்குள் ஓடிய பெண் போராளிகள், மில்லரின் வாகனத்தைத் தான் முதலில் நெருங்கினர், ஒருவேளை மில்லர் உயிர்பிழைத்திருந்தால்.... என்கிற இதயத் தவிப்புடன்! ஆனால், மில்லரின் வாகனம் அடையாளம் காண இயலாத அளவுக்குச் சிதைந்து கிடந்தது.
முகாமுக்குள் நுழைந்த போராளிகளைப் பார்த்து, உயிர் பிழைத்திருந்த ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர். போராளிகளின் இலக்கு, அதிலும் குறிப்பாக பெண் போராளிகளின் இலக்கு, முகாமில் எஞ்சியிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. அந்தப் பணியில் அவர்கள் கவனம் செலுத்த, ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்துவந்து தாக்கத் தொடங்கின. கைப்பற்றிய ஆயுதங்களுடன் பின்வாங்கினர் போராளிகள்.
மில்லரின் தாக்குதலில் 120 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெருந்தொகை  ஆயுதங்களைப் போராளிகள் கைப்பற்றினர்.
தாக்குதல் முடிந்தபிறகுதான் தெரிந்தது, சாலைத் தடைகளை வெற்றிகரமாக அகற்றிய கமல் - தொடர்ந்து நடந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்திருந்தது. நெஞ்சில் காயத்துடன் இருந்த கமலின் உடலைப் போராளிகள் மீட்டனர்.
மில்லரின் தற்கொடைத் தாக்குதல், திட்டமிட்டபடியே நிறைவேறியது என்கிற அளவில் மிகப்பெரிய வெற்றி என்றாலும், மில்லர் என்கிற அந்த ஈடு இணையற்ற மாவீரனின் தியாகம் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கண்கலங்க வைத்தது. போதிய அளவு ஆயுதங்கள் இல்லாதது பலவீனம்தான் என்றாலும், மன உறுதி என்னும் மகத்தான ஆயுதத்தால் தன் இனத்தின் பலத்தை உலகுக்கு உணர்த்திய முதல் கரும்புலி மாவீரன் - கேப்டன் மில்லர். நெல்லியடி முகாமை மில்லர் தகர்த்ததுதான் முதல் கரும்புலித் தாக்குதல். அந்த ஜூலை 5ம் தேதியைத்தான் கரும்புலி நாளாக இன்றைக்கும் கண்ணீரோடு கடைப்பிடிக்கின்றனர், உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத்து உறவுகள்.
மில்லரின் தாக்குதலைத் தொடங்கி வைத்தவள் சுஜி என்கிற ஒரு சகோதரி. குறிபார்த்து எறிகுண்டை எறிவதில் வல்லவள். வாகனத்தில் காத்திருந்த மில்லர், சாலைத் தடைகளைத் தகர்க்கக் காத்திருந்த கமல் - இருவருமே, முகாமின்  உச்சியிலிருந்த காவலரண் தகர்க்கப்பட்ட பிறகுதான் களத்தில் இறங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகக் காத்திருந்தார்கள் அவர்கள். காவலரணைத் தகர்க்கும் பணி சுஜியிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கொடுத்த வேலையை முதல் தாக்குதலிலேயே செய்து முடித்தாள் சுஜி. அவள் வீசிய முதல் எறிகுண்டிலேயே, தகர்ந்து சரிந்தது காவலரண். அடுத்த கணமே களத்தில் இறங்கினர் கமலும், மில்லரும்!
மில்லரின் வாகனம் முகாமை நெருங்கியபோது, சுஜியும் பெண்களும் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டனர். திருமதி.அடேல் பாலசிங்கம் தன் நூலில் அதைப் பதிவு செய்தார். மில்லரின் வாகனம் முகாமைத் தகர்த்தபோது ஏற்பட்ட  பெருத்த ஓசையைக் கேட்ட சுஜியும் அவளது தோழிகளும், ஆர்வத்தை அடக்க முடியாமல் தலையைமட்டும் உயர்த்திப் பார்த்தார்களாம்! அந்தக் கற்கோட்டை எரிமலை மாதிரி வெடித்துச் சிதறியதை அவர்கள்  கண்டனர் - என்கிறார் அடேல்.
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை - என்பதை, வீரஞ்செறிந்த எங்கள் ஈழச் சகோதரிகள் உலகுக்கு உணர்த்திய எண்ணற்ற தருணங்களில், ஜூலை 5ம் தேதியும் ஒன்று. மில்லரின் கடமை முழுமையடைய நெல்லியடி களத்தில் அவர்கள் துணை நின்றார்கள். ஒரு சில ஆண்டுகளில், மில்லரின் வழியில் தங்களையே தர, அங்கயற்கண்ணிகளாகவும் உருவெடுத்தார்கள். அவர்களின் வீரத்தை உணரமுடியுமா சோபன் போன்ற ஏஜெண்டுகளால்!
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதையே மூடிமறைத்து ராஜபட்சேக்களைக் காப்பாற்ற முயல்பவர்கள்  சோபன் தாஸ் குப்தாக்கள். இனப்படுகொலை செய்ய ஆயுதம் கொடுத்த இந்தியாவையும் காப்பாற்றியாகவேண்டும் அவர்களுக்கு!  இனப் படுகொலைக்குத் துணைபோன இந்தியாவை இவர்கள் கண்டிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவும் இல்லை. அதற்காக, இவர்கள் கொண்டுபோய்க் குவித்த ஆயுதங்களை... இவர்களது சதிகளை... தங்கள் உயிராயுதத்தால் தகர்த்த கரும்புலி மாவீரர்களை 'மனித வெடிகுண்டு' என்றெல்லாம் சிறுமைப்படுத்தும்  திமிருடன் திரிவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
தாங்கள்தான் நாட்டாமை என்பதைக் காட்ட வேண்டுமாம் இவர்கள்... அதற்காக, அடித்துக் கொல்லும் இனத்துக்கு ஆயுதங்களும், அடிபட்டுச் சாகும் இனத்துக்கு சோற்றுப் பொட்டலமும் கொடுப்பார்களாம்! இப்படிப்பட்ட நயவஞ்சகர்களுக்கு, உயிரச்சம் துறந்த விடுதலைப் போர் வீரர்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? தங்கள் தாய் மண்ணையும், தங்கள் மக்களையும் காக்க உயிரையும் கொடுத்துப் போராடிய அந்த மாவீரர்களைப் பார்த்து சுண்டுவிரலையாவது நீட்டலாமா இவர்கள்? யாரைப் பார்த்துப் பேசுகிறோம் என்று யோசித்துப் பார்க்கவேண்டாமா? இவர்களது தோழர்களைப் போல, பிணங்களைக்கூட கற்பழித்த காட்டுமிராண்டிகளா அந்தப் போராளிகள்!
தன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் ஒவ்வொரு அடக்குமுறைக்கு எதிராகவும் மானுடம் கிளர்ந்து எழும் - என்பது கலகப் பொது நியதி அல்ல, உலகப் பொது நியதி. அப்பாவி மக்கள் மீது தங்கள் முடிவுகளைத் திணிக்கும் எவரும் இதை உணர்ந்துகொள்ள வேண்டும். அடக்கப்படுகிற இனம்தான், உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் திருப்பி அடிக்கும். உனக்கு இழப்பதற்கு ஆயிரம் இருக்கலாம், அவர்களுக்கு இழப்பதற்கு உயிரைத் தவிர வேறென்ன இருக்கிறது?
"ஈழ விடுதலைக்கான போரில் அனைத்து விடுதலை இயக்கங்களையும் சேர்ந்த ஐம்பதாயிரம் போராளிகளையும், 3 லட்சத்துக்கு அதிகமான பொதுமக்களையும், கோடிக் கணக்கான உடைமைகளையும் இழந்துள்ளோம்" என்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வடகிழக்கில் 90 ஆயிரம் பேர் விதவைகளாக இருப்பதையும், அவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராளிகளின் குடும்பத்தினர் என்பதையும் துயரத்துடன் அவர் பதிவு செய்யும்போது, குற்ற உணர்வில் குறுகிப் போய்விடுகிறோம்.
இந்த அளவுக்கு நசுக்கப்பட்ட பிறகும், இன்றைக்கு சர்வதேசமும் ஈழத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன காரணம்? அதையும், ஆனந்தனே சொல்கிறார் - "எங்கள் போராளிகளின் - பொதுமக்களின் உயிர்த் தியாகம்தான், சர்வதேசத்தையும் இன்று பேசவைக்கிறது!" இப்போது சொல்லுங்கள்.... மில்லர்களின் தியாகமும், அங்கயற்கண்ணிகளின் தியாகமும் லட்சோப லட்சம் மக்களின் தியாகமும் வீணாகிவிட்டதா என்ன? இன்றைக்கும் நமது  அடையாளங்களாகத் திகழ்பவர்கள், அவர்களன்றி  வேறுயார்.
குயிலிகள், பிரீத்தி லதாக்கள், மில்லர்கள், அங்கயற்கண்ணிகள் - என்று அத்தனை உயிரிலும் உறைந்திருந்தது, விடுதலை வேட்கை என்கிற உன்னத லட்சியம். இன்னொரு இனத்தை அழிக்கும் முயற்சியில் உயிரிழக்கவில்லை இவர்கள். தங்கள் இனத்தை ஆயுதங்களோடு சுற்றி வளைத்தவர்களை அழிக்கத் தங்களைத் தாங்களே ஆயுதமாக்கிக் கொண்டார்கள்... தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்.
« PREV
NEXT »

No comments